‘தெறி’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

‘தெறி’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 21-Mar-2016 12:03 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படதிதின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சூப்பர் ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘கலைப்புலி’ எஸ். தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது ஜி.வி.இசை அமைக்கும் 50-ஆவது படமாகும். இவ்விழாவில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசும்போது,

‘‘விஜய்யை வைத்து இந்த கதையை அட்லி இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்ததும் அட்லியிடம், ‘இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுமா? இல்லை ஹாரிஸ் ஜெயராஜ் வேண்டுமா?’ என்று கேட்டேன்! அதற்கு அவர், ‘ஜி.வி.பிரகாஷ் குமாரே’ போதும் என்றார். அந்தளவுக்கு அந்த தம்பி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் அட்லீ. அந்த நம்பிக்கையை தம்பி ஜி.வி.காபாற்றியிருக்கிறார். இயக்குனர் அட்லி குறித்து சொல்ல வேண்டுமென்றால் அவர் ஷங்கரும், ஏ.ஆர்.முருகதாஸும் கலந்த கலவை! பாடல்களை படமாக்கும் ஷங்கரின் ஸ்டைல், வித்தியாசமாக காட்சிகளை படமாக்கும் ஏ.ஆர்,முருகதாஸின் பாணி இரண்டும் அட்லியிடம் இருக்கிறது’’ என்றார்.

இயக்குனர் அட்லி பேசும்போது, ‘‘எனக்கு மட்டும் இல்லை, எல்லா இயக்குனர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் மகேந்திரன் சார். அவரை இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். என்னிடம் நிறைய பேர் ஒரு கேள்வியை கேட்டார்கள், இதில் விஜய் எத்தனை கேரக்டர்களில் வருகிறார் என்று! அதற்கு என்னோட பதில், இப்படத்தில் ரொமான்டிக் விஜய்யை பார்க்கலாம், ரசிகர்களுக்கான ஒரு மாஸ் ஹீரோவை பார்க்கலாம், குடும்பத்தினர் விரும்பும் படியான ஒரு அழகான விஜய்யை பார்க்கலாம். இப்படத்தில் அரசியலும் கிடையாது, பஞ்ச் வசங்னங்களும் இருக்காது. எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குனர் மகேந்திரன் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய நடிகருடன் (விஜய்) நடிக்க நான் பாக்கியம் செய்திருக்கணும். மனித நேயம் மிக்க ஒரு நடிகர் விஜய். விஜய்யுடன் நடித்ததை மறக்கவே முடியாது. நீங்கள் (விஜய் ரசிகர்களை பார்த்து) எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்! அதைப்போல இயக்குனர் அட்லி ஒரு யங் ஜீனியஸ்! அவரோட அறிவு, திறமை பார்த்து வியந்து போனேன். கலைஞர்களிடத்தில் அவர் வேலை வாங்கும் பாணியே தனி! சுருக்கமாக சொன்னால் ‘ஒரு கெட்ட பையன்’ இந்த அட்லி’’ என்றார்.

விஜய் பேசும்போது, ‘‘என் படங்களை பற்றி நான் எப்போதுமே பேசுவதில்லை. ஆனால் இதில் பங்கேற்றவர்கள் பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். இதில் இயக்குனர்களின் ஹீரோவான மகேந்திரன் சாருடன் இணைந்து நடித்தது ஒரு இனிமையான அனுபவம். ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுக்க வேண்டும் என்ற அட்லியின் மனதில் இருந்த வெறி தான் இந்த தெறி. அந்த வெறிக்கு செலவை பற்றி கவலைப்படாமல் உறுதுணையாக இருந்திருக்கிறார் தாணு சார். ஜி.வி.க்கு இது 50-ஆவது படம். அவர், நேற்று வரை ரிக்கார்டிங் ஸ்டுடியோவிலேயே இருந்து இப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இதில் செல்ஃபி புள்ள சமந்தாவும் இருக்கிறார், குல்ஃபி புள்ள எமியும் இருக்கிறார். எப்போதுமே போலீஸுக்கு குற்றவாளிகளை பிடிக்கும். குற்றாவாளிகளுக்கு போலீஸை பிடிக்காது. ஆனால் இப்படத்தில் குற்றாவாளிகளுக்கும் போலீஸை பிடிக்கும்.
நீங்கள் எல்லோரும் (ரசிகர்களை பார்த்து…) என் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி! எப்போதுமே வெற்றிக்கு தோல்விகள் தான் அடித்தளம்! தோல்விகள் வரும்போது கவலை படாதீர்கள்! அதைபோல வெற்றிகள் வரும்போது கர்வமும் கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லோரும் பெரிய இடத்துக்கு வரவேண்டும். அது தான் என் விருப்பம். வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நினைத்து உழையுங்கள். அடுத்தவர்களின் உயரத்தை இலக்காக நிர்ணயிப்பதை விட, நீங்கள் தொடும் உயரத்தை மற்றவர்கள் இல்லக்காக எடுத்துக் கொள்ளும் விதமாக உழைத்து முன்னேறுங்கள்’’ என்றார்.

இவர்கள் தவிர விழாவில் பங்கேற்ற நடிகைகள் எமி ஜாக்சன், மீனா, நடிகர் பிரபு, ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், லோகேஷ் மற்றும் பலர் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;