கார்த்தியின் ‘தோழா’ அனுபவங்கள்!

கார்த்தியின் ‘தோழா’ அனுபவங்கள்!

செய்திகள் 19-Mar-2016 5:24 PM IST VRC கருத்துக்கள்

பிவிபி சினிமாஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள ‘தோழா’ வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்பட்த்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக் முதலானோர் நடித்துள்ளனர். வம்சி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இன்று காலை சென்னையில் இப்படம் சம்பந்தமான புரொமொஷன் நிகழ்ச்சி நடைபெற்றது, அப்போது கார்த்தி பேசும்போது,

‘‘இப்படத்தில் நடித்தது இனிமையான ஒரு அனுபவம். சின்ன வயதில் நாகார்ஜுனா சார் நடித்த படங்களை பார்த்து ரசித்த எனக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இப்படம் மூலம் கிடைத்தது. அது நான் செய்த பாக்கியம். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ‘தோழா’ இரண்டு கேரக்டர்கள் பற்றிய கதை. இதனை ஃபிரெஞ்ச் மொழி படத்தின் ரீ-மேக் என்று சொல்வதை விட, இது அந்த படத்தின் Adaption என்று தான் சொல்ல வேண்டும். வம்சி சார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிர்கர்களுக்கும் ஏற்ற வகையில் இதன் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனங்களை ‘குக்கூ’ படப் புகழ் ராஜு முருகன் எழுதியுள்ளார்.அவரது அழகான வசனங்கள் இப்படத்தில் பெரிதும் பேசப்படும். அதைப் போல மதன் கார்க்கி எழுதியுள்ள ஒவ்வொரு பாடல் வரிகளும் அர்த்தமுள்ள வரிகளாக அமைந்துள்ளன. இப்படத்தில் நாகார்ஜுனா சார் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை அவ்வளவு எளிதில் யாராலும் ஏற்று செய்ய முடியாது. தலை தவிர வேறு எந்தவொரு உடல் உறுப்பும் செயல்படாதவராக, ஒரு வீல் செயரில் உட்காந்தவாறு வரும் அவரது கேரக்டர் அனைவரையும் நெகிழ வைக்கும். இப்படத்திற்காக ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தினர் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். ரொம்பவும் காஸ்ட்லியான லோகேஷன்களுக்கு எல்லாம் அழைத்து சென்று இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். இது மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எல்லோருக்கும் இருக்கிறது’’ என்றார்.

நாகர்ஜுனா பேசும்போது, ‘‘முதலில் இதன் ஒரிஜினல் படத்தை பார்த்த என் மனைவி அமலா, ‘நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்காதீர்கள், அதுமாதிரி உங்களை என்னால் பார்க்க முடியாது’ என்று தான் சொன்னார். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், அந்த கேரக்டரில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று! அப்படி என்னை மிகவும் பாதித்த கேரக்டர் அது. இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது குறித்து கார்த்தி சொல்லும்போது தமிழில் நான் மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து பெருமையாக சொன்னார். என் வளர்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் பங்குண்டு! நான் தான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இதயத்தை திருடாதே, உதயா, ரட்சகன், பயணம் போன்ற நல்ல படங்கள் எனக்கு தமிழில் தான் கிடைத்தன! அந்த படங்களை போல இந்த ‘தோழா’வையும் நீங்கள் ரசிப்பீர்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் அனைவரையும் சந்திக்கவிருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;