புகழ் - விமர்சனம்

புகழ் - கிடைப்பது கஷ்டமே!

விமர்சனம் 18-Mar-2016 3:35 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Manimaran
Production : Film Department
Starring : Jai, Surabhi
Music : Vivek-Mervin
Cinematography : Velraj
Editing : G. B. Venkatesh

‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்கள் ஜெய்க்கு பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில், இன்று வெளியாகியிருக்கும் ‘புகழ்’ அவருக்கு புகழ் சேர்க்குமா?

கதைக்களம்

ஊரில் நடக்கும் சின்னச் சின்னத் தவறுகளை தட்டிக் கேட்கும் நேர்மையாளர் ஜெய்க்கும், அதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் மாரிமுத்துவுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அமைச்சர் ஒருவருக்காக அந்த ஊரிலிருக்கும் புறம்போக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை தன் வசப்படுத்த முயல்கிறார் மாரிமுத்து. அதற்குத் தடையாக குறுக்கே நிற்கிறார் ஜெய். ஜெய்யை மறைமுகமாக வீழ்த்துவதற்காக அவரின் நண்பன் ஒருவரை கவுன்சிலராக்குகிறார் மாரிமுத்து. அவரை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்த, அப்போதும் விடாப்பிடியாக மல்லுக்கு நிற்கிறார் ஜெய். இறுதியில் மைதானத்தை யார் கைப்பற்றியது என்பதே ‘புகழ்’ படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஹீரோவுக்கும், அந்த ஊர் அரசியல்வாதிக்குமிடையே நடக்கும் சண்டையை காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. அந்த வரிசையில் இந்த ‘புகழ்’ படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். கதைதான் அரதப்பழசென்றால், திரைக்கதை அமைப்பதிலும், சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்குவதிலும்கூட இன்னும் ‘அந்தக்காலத்திலேயே’ இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். நண்பர்களுடன் ஹீரோ அரட்டையடிப்பது, ஹீரோவும் ஹீரோயினும் சம்பந்தமில்லாமல் மோதிக் கொண்டிருப்பது என இடைவேளை வரை படம் மையக்கதைக்குள்ளாயே செல்லாமல் வெளியேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு கதைக்குள் சென்றாலும், திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகளை உருவாக்கியிருப்பதால் படம் சுவாரஸ்யமே இல்லாமல் ‘தேமே’வென நகர்கிறது. பாடல், காமெடி கைகொடுக்கவில்லை. ஆக்ஷன் காட்சிகளும், சிற்சில வசனங்களும் ரசிக்கும்படியாக உள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

‘பொங்கி எழும் மாஸ்’ ஹீரோ கேரக்டர் ஜெய்க்கு. ஆனால், காட்சியமைப்புகள் பலவீனமாக இருப்பதால் அவரின் நடிப்பிற்கு பெரிய வேலையில்லாமல் போய்விட்டது. தன்னால் முடிந்தளவுக்கு படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார் ஜெய். ஹீரோயின் சுரபிக்கு அழகே பூசினாற்போன்ற அவரது உடல்வாகுதான். ஆனால், இப்படத்தில் ரொம்பவே மெலிந்து பார்க்க பரிதாபமாக காட்சியளிக்கிறார். ஆனாலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லன் மாரிமுத்துவுக்கு, அவரின் கேரியரில் படம் முழுக்க வரும்படியான கேரக்டர் இப்படத்தில் அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜியால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. கோபக்கார அண்ணனாக கருணாஸ் கைதட்டல் வாங்குகிறார். கவிஞர் பிறைசூடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

பலம்

ஆக்ஷன் காட்சிகளும், சிற்சில வசனங்களும்

பலவீனம்

படத்தின் முக்கிய விஷயங்கள் பலவீனங்களாக அமைந்துவிட்டன.

மொத்தத்தில்...

புதிய புதிய கதைக்களத்திற்காகவும், வித்தியாசமான திரைக்கதைக்காகவும் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவகையில் படம் தரத் தவறியிருக்கிறது ‘புகழ்’ டீம்.

ஒரு வரி பஞ்ச் : புகழ் - கிடைப்பது கஷ்டமே!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;