அஞ்சலியின் ‘மாப்ள சிங்கம்’ அனுபவங்கள்!

அஞ்சலியின் ‘மாப்ள சிங்கம்’ அனுபவங்கள்!

செய்திகள் 8-Mar-2016 2:30 PM IST VRC கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்திருக்கும் படம் ‘மாப்ள சிங்கம்’. இப்படம் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இயக்குனர் எழிலின் உதவியாளர் ராஜசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் விமல், அஞ்சலி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் ராதாரவி, சூரி, காளி வெங்கட், சாமிநாதன் முதலானோரும் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலியிடம் ‘மாப்ள சிங்கம்’ படம் குறித்து கேட்டபோது,

‘‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களை தொடர்ந்து விமலுடன் நான் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் இது. படத்தின் கதைப்படி விமல் அரசியல் பின்னணி கொண்ட ஒரு இளைஞராக நடித்துள்ளார். நான் வழக்கறிஞராக நடிக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம். அந்த பிரச்சனையிலிருந்து நாங்கள் எப்படி தப்பிக்கிறோம் என்பது தான் படத்தின் மைய கதை. அதை இயக்குனர் ராஜசேகர் காமெடி, அரசியல் என வித்தியாசமான ஒரு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். இப்படம் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்றாலும் படத்தில் அனைத்து ரசிகர்களுக்குமான விஷயங்களும் இருக்கிறது. ‘எஸ்கேப் ஆர்டிஸ்டஸ்’ நிறுவனத்துக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக அமையும் என்பது என் நம்பிக்கை.

சமீபத்தில் நான் நடித்த படங்களிலிருந்து இப்படத்தில் எனக்கு மாறுபட்ட விதமாக வக்கீல் கேரக்டர் கிடைத்துள்ளது. அதை நான் ரொம்பவும் விரும்பி செய்துள்ளேன். இந்த கேரக்டரில் நடிக்கும்போது அதற்காக பயிற்சியெல்லாம் எடுத்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள்! நான் எப்போதுமே எந்த கேரக்டருக்காகவும் பயிற்சி எல்லாம் எடுப்பதில்லை. நான் ஏற்கும் கேரக்டரை முதலில் உள்வாங்கி கொள்வேன். அப்புறம் இயக்குனர் சொல்லி தருவது மாதிரி நடிப்பேன். இப்படி தான் ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

எற்கெனவே விமலுடன் ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் நடித்திருப்பதால் இப்படத்தில் எங்களுக்கான காம்பினேஷன் சீன்களில் நடிக்க எளிதாக இருந்தது. அதுவும் இல்லாமல் விமல் என்னை ரொம்பவும் புரிந்துகொண்ட நடிகர். அதனால் இப்படத்தில் நடிக்கும்போது எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

நான் கொஞ்சம் குண்டாக இருப்பதாக நிறைய பேர் சொல்லி வருவதால் இப்போது உடம்பை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களில் நான் 6 கிலோ எடையை குறைத்துள்ளேன். தற்போது நான் நடித்து வரும் ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘காண்பது பொய்’ முதலான படங்களில் நீங்கள் வேறு அஞ்சலியை பார்க்கலாம்’’ என்று சொன்ன அஞ்சலி, ‘‘இந்த வாரம் வெளியாகும் ‘மாப்ள சிங்க’த்தை பார்த்து உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்கள்’’ என்றும் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;