சவுக்கார் பேட்டை - விமர்சனம்

பேய்களின் பேட்டை!

விமர்சனம் 7-Mar-2016 10:47 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vadivudaiyan
Production : Shalom Studios
Starring : Srikanth, Lakshmi Rai
Music : John Peter
Cinematography : S. Sreenivasa Reddy
Editing : Elisa

ஸ்ரீகாந்த், டபுள் ரோலில் களமிறங்கியிருக்கும் பேய் படமான ‘சவுக்கார் பேட்டை’யில் பேய்களின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

‘தலைவாசல்’ விஜய், ரேகா தம்பதியரின் இரண்டு மகன்கள் ஸ்ரீகாந்த்! தம்பி ஸ்ரீகாந்த், ராய் லட்சுமியை காதலிக்கிறார். அண்ணன் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியை விரும்புவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு, அண்ணன் ஸ்ரீகாந்த் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறார். அதன்பிறகு தம்பி ஸ்ரீகாந்துக்கும், ராய் லட்சுமிக்கும் திருமணம் நடக்கும் சமயத்தில் கொடுமைக்கார கந்துவட்டி ‘சேட்’டுவால் (சுமன்) ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள்! கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் பேயாக மாறி எப்படி சேட்டுக் கும்பலை பழி வாங்குகிறார்கள்? வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஸ்ரீகாந்த என்ன ஆனார் என்பதே ‘சவுக்கார் பேட்டை’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

எந்தவொரு லாஜிக் விஷயங்களையும் கடைபிடிக்காமல் பேய் பட ரசிகர்களுக்கு வெறும் என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கொடுத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை இயக்கியுள்ளார் வடிவுடையான்! அதற்கு அவர் பெரிதும் நம்பியிருப்பது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தையும், ராய் லட்சுமியின் கவர்ச்சியையும் தான்! அதிகபடியான வன்முறை காட்சிகளுடன் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் போரடிக்க வைக்கிறது என்றாலும், இரண்டாம் பாதி அதை சரி செய்யும் விதமாக விறுவிறுப்புடன் செல்கிறது! வில்லன் கோஷ்டிக்கும், பேய் கோஷ்டிக்கும் இடையில் நடக்கும் போராட்ட காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் உழைப்பு தெரிகிறது. ஜான் பீட்டரின் இசை, சீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்கள் ‘சவுக்கார் பேட்டை’யின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ள அம்சங்கள்.

கலைஞர்களின் பங்களிப்பு

தீயவனாகவும், நல்லவனாகவும் வரும் ஸ்ரீகாந்த் இரண்டு கேரக்டர்களிலும் கடின உழைப்பை கொட்டி நடித்துள்ளார். இருவருக்கும் நடக்கும் ஆக்ரோஷ சண்டை காட்சிகளில் ஸ்ரீகாந்த் நிறைய ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது உணர முடிகிறது, கிளாமருடன் கூடிய ராய் லட்சுமியின் பேய் ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் ‘ஏகோபித்த’ வரவேற்பு. கந்து வட்டி ‘சேட்’டாக வரும் சுமனின் நடிப்பு கச்சிதம். சரவணன், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை! இவர்கள் தவிர டி.பி.கஜேந்திரன், மனோபாலா, வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு, மீனாட்சி என படத்தில் ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்!

பலம்

1. டபுள் ரோலில் வரும் ஸ்ரீகாந்த் மற்றும் லட்சுமி ராயின் பங்களிப்பு
2. கிராஃபிக்ஸ் காட்சிகள்

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களை கடைபிடிக்காதது
2. அதிகபடியான வன்முறை காட்சிகள்
3. போரடிக்க வைக்கும் முதல் பாதி

மொத்தத்தில்...

வெறும் பொழுதுபோக்கை மட்டும் விரும்பும் பேய் பட ரசிகர்கள் ‘சாவுக்கார் பேட்டை’க்கு விசிட்டடிக்கலாம்!

ஒருவரி பஞ்ச்: பேய்களின் பேட்டை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;