பிச்சைக்காரன் - விமர்சனம்

வசூல் செய்வான்!

விமர்சனம் 5-Mar-2016 11:20 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sasi
Production : Vijay Antony Film Corporation
Starring : Vijay Antony, Satna Titus
Music : Vijay Antony
Cinematography : Prasanna Kumar
Editing : Veera Senthil Raj

தன்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன்’ படம் எப்படி?

கதைக்களம்

பெரிய தொழிலதிபரான புவனேஸ்வரி அம்மாவின் ஒரே மகன் விஜய் ஆண்டனி! அப்பா இல்லாத விஜய் ஆண்டனி வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்து முடித்து வந்ததும் அவரிடம் எல்லா நிர்வாகத்தையும் ஒப்படைத்து விடுகிறார் அவரது அம்மா! இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அம்மா விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார்! மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்த நிலையில், ஒரு சாமியாரை சந்திக்கிறார் விஜய் ஆண்டனி! அந்த சாமியார் விஜய் ஆண்டனியிடம், ‘உன் பாசமிக்க அம்மா உயிர் பிழைக்க வேண்டுமென்றால் நீ 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ வேண்டும்’ என்று கூறுகிறார். பெரும் பணக்காரரான விஜய் ஆண்டனி அம்மாவுக்காக பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்க, அவருக்கு பல இன்னல்கள் வருகிறது. அதையெல்லாம் விஜய் ஆண்டனி எப்படி சமாளிக்கிறார்? வேண்டுதலை நிறைவேற்றி தனது அம்மா உயிரை காப்பாற்றினாரா என்பதே ‘பிச்சைக்காரன்’.

படம் பற்றிய அசல்

இமேஜ் பற்றிய கவலையே இல்லாமல், பிச்சைக்காரர்களை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட படமொன்றில் ஹீரோவாக நடித்த விஜய் ஆண்டனிக்கு முதலில் ஒரு ஸ்பெஷல் பொக்கே! படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சென்டிமென்ட், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து அம்சங்ளையும் சம அளவில் கலந்து, அனைத்து ரசிக்ரகளுக்குமான ஒரு படமாக இந்த பிச்சைக்காரனை இயக்கியுள்ளார் சசி! ஆனால் சில காட்சிகளை வலிய திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை அதை மறக்கடிக்கச் செய்கிறது. யாரும் பிச்சைக்காரனாக பிறப்பதில்லை, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அழகாக பதிவு செய்துள்ள சசி, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மேக்-அப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். சசியின் கருத்துமிக்க வசனங்களும், விஜய் ஆண்டனியின் இசையும், பிரசன்ன கும்மரின் ஒளிப்பதிவும், வீரா செந்தில்குமாரின் படத்தொகுப்பும் ‘பிச்சைகாரனு’க்கு பலம் சேர்த்துள்ள அம்சங்கள்! இயக்குனர் சசியின் கேரியரில் இந்த ‘பிச்சைக்காரனு’க்கு நல்ல ஒரு இடம் உண்டு!

கலைஞர்களின் பங்களிப்பு

தனது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு தனக்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்படத்திலும் தனது அமைதியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். சாமியார் போட்ட கண்டிஷன்களுடன் பிச்சைகாரர்களுடன் அவர் உட்கார்ந்து பிச்சை எடுக்கும் காட்சிகளுக்காக அவர் நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. விஜய் ஆண்டனியின் காதலியாக வரும் சேத்னா டைடஸ் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தான் காதலிப்பவன் ஒரு பிச்சைக்காரன் என்பதை அறிந்து பதறிப் போகும் அந்த ஒரு காட்சி போதும் சேத்னாவின் நடிப்பை எடைபோட! பிச்சைகாரர்களே இல்லாத ஒரு நாட்டை உருவாக்க பிச்சைக்காரராக வரும் இயக்குனர் மூர்த்தி சொல்லும் விளக்கம் சூப்பர்! விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிடும் அவரது பெரியப்பாவாக நடித்திருக்கும் முத்துராமன், அம்மாவாக நடித்திருப்பவர் என அனைவரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் சசி!

பலம்

1. விறுவிறுப்பான திரைக்கதை
2. கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு
3. கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் விஷயங்கள்

பலவீனம்

சிற்சில லாஜிக் மீறல்கள், ஒரு சில திணிக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரிய பலவீனங்கள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்

அனைவருக்கும் பிடிக்கும் விதமான விஷயங்களோடும் வந்திருக்கும் இந்த ‘பிச்சைக்காரனு’க்கு பிச்சைபோட தியேட்டருக்கு குடும்பத்துடன் விசிட் அடிக்கலாம்!

ஒருவரி பஞ்ச்: வசூல் செய்வான்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிச்சைக்காரன் - கிளாமர் பாடல் வீடியோ


;