ஆறாது சினம் - விமர்சனம்

சுவாரஸ்ய புலனாய்வு!

விமர்சனம் 27-Feb-2016 4:32 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Arivazhagan
Production : Sri Thenandal Films
Starring : Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta
Music : S. Thaman
Cinematography : Aravinnd Singh
Editing : Rajesh Kannan S.

‘பாபநாசம்’ படப் புகழ் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற மலையாள ’மெமரீஸ்’ படத்தின் ரீ-மேக்கான ‘ஆறாது சினம்’ எப்படி?

கதைக்களம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மர்ம கொலைகள் நடந்து வர, அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை. இந்நிலையில், இந்த கேஸை எடுத்து நடத்தும்படி, அருள்நிதியை கேட்டுக் கொள்கிறார் கமிஷனர் ராதாரவி. ஆனால், போலீஸ் வேலையால் தன் குடும்பத்தை இழந்து வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கி வாழும் அருள்நிதி அதை ஏற்க மறுக்கிறார். ஒருகட்டத்தில், தான் இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்காக அந்த கேஸை எடுத்து நடத்த அருள்நிதி சம்மதிக்கிறார். அந்த மர்ம கொலைகளின் பின்னணியில் இருப்பவர்களை அருள்நிதி தன் தனித்திறமை மூலம் எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்பதே படத்தின் விறுவிறுப்பான இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

பெரும்பாலும் வெற்றிபெற்ற ஒரு படத்தை ரீ-மேக் செய்து இயக்கும்போது, அதன் ஒரிஜினலில் உள்ள நேர்த்தி ரீ-மேக்கில் தென்படுவது அபூர்வமான விஷயம். அதைப் போலதான் இப்படமும் என்றாலும், அறிவழகனின் இயக்கத்தில் ‘ஆறாது சினம்’ ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஃபேமிலி, சென்டிமென்ட் என்று கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும், மர்ம கொலைகளை கண்டு பிடிக்கும் பொறுப்பு அருள்நிதியிடம் வந்ததும் திரைக்கதை சூடு பிடிப்பதோடு, எதிர்பாராத சம்பவங்கள், வித்தியாசமான கிளைமேக்ஸ் என படம் விறுவிறுப்பாக செல்கிறது. தமனின் பின்னணி இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் ‘ஆறாது சின’த்துக்கு பக்கபலமாக அமைந்துள்ள அம்சங்கள்! படத்தொகுப்பாளார் ராஜேஷ் கண்ணா படத்தின் முதல் பாதியின் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோயிசத்தை நம்பாமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வருவதற்காக அருள்நிதியை பாராட்டும் அதேவேளையில், தான் ஏற்றுவரும் கேரக்டர்களுக்காக சிற்சில ‘ஹோம்ஒர்க்’குகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இனிவரும் படங்களில் அருள்நிதியிடமிருந்து சிறந்த நடிப்பை எதிர்பார்ப்போம். இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் ‘ரோபோ’ சங்கர், விஜகாந்தை நினைவூட்டுவது மாதிரி வசனங்கள் பேசி கலகலப்பூட்ட முயற்சித்திருக்கிறார். அருள் நிதியின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிகை நிருபராக வரும் ஐஸ்வர்யா தத்தா, போலீஸ் கமிஷனராக வரும் ராதாரவி, கொடூர வில்லனாக வரும் இயக்குனர் கௌரவ் ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. கதையும், திரைக்கதையும்
2. விறுவிறுப்பான இரண்டாம்பாதி
3. பின்னணி இசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. கதாபாத்திர தேர்வு
2. ரோபோ சங்கர் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள்

மொத்தத்தில்...

கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் வயது கோளாறால் செய்யும் சில காரியங்கள் எப்படி அவர்களது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நம்பும்படியான காட்சி அமைப்புகளுடன் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : சுவாரஸ்ய புலனாய்வு!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;