கணிதன் - விமர்சனம்

புதிய ஃபார்முலாவில் சராசரி கணக்கு!

விமர்சனம் 26-Feb-2016 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : T. N. Santhosh
Productio : V. Creations (S. Thanu)
Starring : Atharvaa, Catherine Tresa, Tarun Arora
Music : Sivamani
Cinematography : Arvind Krishna
Editing : Bhuvan Srinivasan

கருபழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த ‘சதுரங்கம்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘கோ’ போன்ற படங்களின் வரிசையில், ஜர்னலிஸ்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘கணிதன்’ தற்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகாதஸின் பட்டறையிலிருந்து வெளிவந்திருக்கும் சந்தோஷ் உருவாகியிருக்கும் இப்படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

துடிதுடிப்பும், ஆர்வமும் நிறைந்த இளம் சேனல் நிருபரான அதர்வா அதிகம் பிரபலமடையாத சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பிபிசி சேனலில் நிரூபராக வேண்டுமென்பது அதர்வாவின் தீராத ஆசை. அதற்காக எந்நேரமும் சிந்தித்துக்கொண்டேயிருக்கும் சூழ்நிலையில், ‘போலி சர்டிஃபிகேட்’ விவகாரம் ஒன்றில் சிக்கி, ஜெயிலில் அடைக்கப்படுகிறார் அதர்வா. இதுபோன்ற போலி சான்றிதழ் விவகாரத்தில், தான் மட்டுமல்ல பல இளைஞர்களும் சிக்கியிருப்பதை உணரும் அதர்வா, இந்த குற்றச்செயலுக்கு பின்னால் இருப்பவர்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட எடுக்கும் போராட்டங்களே ‘கணிதன்’ படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

இப்படி ஒரு விவகாரம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறதா என்பதை நினைக்கும்போதே மலைப்பாக இருக்கிறது. அந்தவகையில் போலிச்சான்றிதழ் விவகாரத்தை கையிலெடுத்து அதற்குப் பின்னால் நடக்கும் சதிவேலைகளை அம்பலப்படுத்தி, மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றியிருக்கும் இயக்குனர் சந்தோஷிற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே! படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஒரு வித்தியாசமான த்ரில்லர் படத்தை பார்க்கவிருக்கிறோம் என்ற உற்சாகமும், ஆவலும் மேலோங்குகிறது. ஆனால், படம் முடியும் நேரத்தில் ‘கணிதன்’ ஒரு பொழுதுபோக்கு படம் என்ற அளவிலேயே திருப்தியைத் தந்திருக்கிறது.

முருகதாஸின் உதவியாளர் என்பதாலோ என்னவோ, படத்தின் திரைக்கதை அமைப்பும், சிற்சில காட்சிகளும் ‘துப்பாக்கி’யை அப்படியே ஞாபகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக ‘இடைவேளை’ காட்சி, அப்படியே ‘துப்பாக்கி’ ஸ்டைலில் அமைந்துவிட்டது. ஒரு பரபர த்ரில்லரின் இடையிடையே கலர்ஃபுல் பாடல்களைப் புகுத்தி, ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கிய விஷயமான லாஜிக் விஷயங்களில் நிறையவே கோட்டைவிட்டிருக்கிறார்கள். முதல்பாதியிலிருந்த விறுவிறுப்பும், வேகமும் இரண்டாம்பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்திருக்கிறது. ஆனாலும், ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றவை அதை முடிந்தளவு சரி செய்ய முயன்றிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

அதர்வாவின் கேரியரைப் பொறுத்தவரை தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் சின்னச் சின்ன உயரங்களுக்கு பயணித்துக் கொண்டேயிருக்கிறார். இந்த ‘கணிதனு’ம் அவருக்கான அடுத்த ஸ்டெப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நடிப்பில் நன்றாக தேறி வருகிறார். குறிப்பாக டான்ஸ், ஃபைட் போன்ற ஏரியாக்களில் அதர்வா பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார். கதையில் பெரிய வேலையில்லை என்றாலும், ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்கு கேத்ரின் தெரஸாவின் கிளாமர் என்ட்ரி உதவியிருக்கிறது. வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் தரண் அரோரா பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறார். அனேகமாக அடுத்தடுத்த படங்களில் இவரை இனி தொடர்ந்து பார்க்கலாம். கே.பாக்யராஜ், கருணாகரன், சுந்தர்ராமு, ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்த ஒவ்வொருவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. ‘போலிச் சான்றிதழ்’ பின்னணியை கையிலெடுத்திருக்கும் கதைக்களம்
2. ‘டிரம்ஸ்’ சிவமணியின் பின்னணி இசை.
3. கதாபாத்திர வடிவமைப்பும், நடித்தவர்களின் பங்களிப்பும்

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களில் கோட்டை விட்டிருப்பது
2. ‘துப்பாக்கி’யை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள்

மொத்தத்தில்...

அதர்வாவின் அறிமுகப்படங்கள் பெரிய அளவில் சோபிக்காத சூழ்நிலையில், அவரின் லேட்டஸ்ட் வரவுகள் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகின்றன. அந்தவகையில், ‘ஈட்டி’ படத்தைத் தொடர்ந்து இந்த ‘கணிதன்’ படமும் ‘பார்க்கலாம்’ என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. காட்சியமைப்புகளில் கொஞ்சம் புதுமையையும், லாஜிக் விஷயங்களில் கொஞ்சம் மெனக்கெடல்களையும் கொட்டியிருந்தால் ‘கணிதன்’ கணிசமான ‘லைக்’குகளை குவித்திருக்கும்!

ஒரு வரி பஞ்ச் : புதிய ஃபார்முலாவில் சராசரி கணக்கு!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - டீசர்


;