சேதுபதி - விமர்சனம்

விஜய்சேதுபதிக்காக மட்டுமே இந்த சேதுபதி!

விமர்சனம் 19-Feb-2016 3:50 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : S. U. Arun Kumar
Production : Vansan Movies
Starring : Vijay Sethupathi, Remya Nambeesan
Music : Nivas K. Prasanna
Cinematography : Dinesh Krishnan
Editing : A. Sreekar Prasad

எந்த கேரக்டராக இருந்தாலும், அதற்கு எளிதாகப் பொருந்திவிடுவார் விஜய்சேதுபதி. இப்போது ‘சேதுபதி’க்காக போலீஸ் உடை மாட்டியிருக்கிறார். காக்கிச்சட்டை அவருக்குப் பொருந்தியிருக்கிறதா?

கதைக்களம்

நேர்மையான இன்ஸ்பெக்டரான விஜய்சேதுபதி, அசிஸ்டென்ட் கமிஷனர் புரமோஷனுக்கான காலகட்டத்தில் இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊரில் போலீஸ் ஒருவர் மர்ம ஆசாமிகளால் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கேஸை விஜய்சேதுபதி துப்புத்துலங்கத் தொடங்குகிறார். தன்னுடைய துப்பறியும் திறனால் எளிதில் குற்றவாளியை நெருங்குகிறார். ஆனால், அதன்பிறகுதான் அவருக்கு சோதனைகளே ஆரம்பமாகத் தொடங்குகின்றன. அது என்ன என்பதே ‘சேதுபதி’.

படம் பற்றிய அலசல்

‘பண்ணையாரும் பத்மினியும்’ மூலம் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண்குமார், இப்படத்தின் மூலம் விஜய்சேதுபதியை ஒரு மாஸ் ஹீரோவாக்க முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு படத்தின் ஒரு சில காட்சிகளில் பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், விக்ரமிற்கு ‘சாமி’ படம் அமைந்ததுபோல, இந்த ‘சேதுபதி’ விஜய்சேதுபதிக்கு அமையுமா என்பது சந்தேகமே. காரணம், இப்படத்தின் கதை ரொம்பவே அரதப் பழசு. ஒரு நல்ல போலீஸுக்கும், அதே ஊரிலிருக்கும் வில்லனுக்கான மோதல் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் எத்தனையோ முறை பார்த்துவிட்டார்கள். அதேபோல் இரண்டாம்பாதி திரைக்கதையிலும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் குறைவே!

முழுநீள ஆக்ஷன் படமாக இல்லாமல் இடையிடையே ஃபேமிலி சென்டிமென்ட்டையும் புகுத்தி படத்தை ஃபேலன்ஸ் செய்ய முயன்றிருக்கிறார்கள். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் பெற்றிருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. குறிப்பாக அனிருத் பாடியிருக்கும் ‘ஹே மாமா...’ பாடல் மாஸ் ரகம்! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. தேவையில்லாத காட்சிகளை குறைத்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எடிட்டிங்.

நடிகர்களின் பங்களிப்பு

‘போலீஸ்தான கெத்து’ என நிரூபித்திருக்கிறார் விஜய்சேதுபதி. ‘வாய் சவடால்’ ரவுடியாக போன படத்தில் கலக்கிய விஜய், இப்படத்தில் மிரட்டல் போலீஸாக அதகளம் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது விஜய்சேதுபதியின் பங்களிப்பு. குழந்தைகளுடன் லூட்டி அடிப்பது, மனைவியுடன் ரொமான்ஸ் செய்வது, எதிரிகளின் அல்லக்கைகளை விரட்டியடிப்பது என விஜய்சேதுபதிக்கு ஆல் ஏரியாக்களிலும் தெறிக்குது தெறிக்குது மாஸ். இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ரம்யா நம்பீசனுக்கு மிகப்பொருத்தமான வேடம். அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால், ‘சண்டைக்குப் பின் சமாதானம்’ என அவருக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருந்ததுதான் குறை. வில்லனாக வரும் வேல ராமமூர்த்திக்கான கதாபாத்திர வடிவமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். தன்னால் முடிந்தளவு கேரக்டருக்கு உயிர்கொடுத்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் லிங்கா சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.

பலம்

1. விஜய் சேதுபதி
2. சுவாரஸ்யமான முதல்பாதி
3. இசை

பலவீனம்

1. அரதப்பழசான கதை
2. இரண்டாம்பாதி திரைக்கதை

மொத்தத்தில்...

விஜய்சேதுபதியின் ‘மாஸ்’ பெர்ஃபாமென்ஸ், நிவாஸ் கே பிரசன்னாவின் இசை என்பதைத் தாண்டி ‘சேதுபதி’யில் பெரிதாக எந்த விஷயமும் கவனம் பெறவில்லை. இருந்தாலும் ஒரு போரடிக்காத போலீஸ் படமாக ‘சேதுபதி’ ஆறுதல் தருகிறது.

ஒரு வரி பஞ்ச் : விஜய்சேதுபதிக்காக மட்டுமே இந்த சேதுபதி!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;