வில் அம்பு – விமர்சனம்

குறித்த இலக்கை எட்டவில்லை!

விமர்சனம் 15-Feb-2016 2:29 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ramesh Subramaniam
Production : Star Film Land
Starring : Sri, Harish Kalyan, Srushti Dange, Samskruthy Shenoy, Chandini
Music : Navin
Cinematography : Martin Joe
Editing : Ruben

இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் ‘வில் அமபி’ன் பாய்ச்சல் எப்படி?

கதைக்களம்

அடிதடி, பிரச்சனைகளை உருவாக்குவது என்று அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வரும் லோக்கல் ஏரியா பையன் ஸ்ரீ. படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் தனக்கு பிடித்த போட்டோகிராஃபியில் சாதிக்க நினைக்கும் இளைஞர் ஹரிஷ் கல்யாண். சிறிய குற்றங்கள் செய்து அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாலும், எளிதில் விடுதலையாகி விடும் ஸ்ரீ, எந்த தவறும் செய்யாமல் தன்னை சுற்றியிருப்பவர்களால் ஜெயிலுக்கு போக நேரும் ஹரிஷ் கல்யாண் என ஒரே ஏரியாவில் இருக்கும் இந்த இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பது தான் ‘வில் அம்பு’ கதை!

படம் பற்றிய அலசல்

‘நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் இல்லை, சுற்றியிருப்பவர்கள் கையிலும் தான் இருக்கிறது’ என்ற கருத்தை வைத்து இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்! படத்தில் இரண்டு ஹீரோக்கள்! இருவருக்கும் தனித் தனி கதைகள்! அதனை ஒருவரை ஒருவர் சந்திக்காமலும், பேசாமலும் இரண்டு ‘டிராக்’ திரைக்கதையாக நகர்த்தியிருக்கும் விதம் புதுசு! ஆனால் இடைவேளை வரையிலான திரைக்கதையில் விறுவிறுப்பு கம்மி! ஸ்லோவக பயணிப்பதை போன்ற உணர்வை தான் தருகிறது. ஆனால் கடைசி 20 நிமிடத்தில் தன்னை விரும்பியவளை கை பிடிப்பதற்காக ஸ்ரீ எதிர்கொள்ளும் போராட்டங்களும், தான் ஜெயிலுக்கு போக காரணமானவர்களை கண்டு பிடித்து தன் மீதிருக்கும் கறையை போக்க ஹரிஷ் கல்யாண் மேற்கொள்ளும் போராட்டங்களும் பர பர காட்சிகள்! சீரியஸான கதை போக்கில் ரிலாக்ஸ் தரும் ஏரியா ஸ்ரீயின் நண்பராக வரும் ‘யோகி’ பாபு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் தான்! நவீனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் கவர்கிறார். படத்தின் முதல் பாதியில் எடிட்டிங் பணியில் ரூபன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். மார்டின் ஜோவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

‘வழக்கு எண் 18/9’, ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்கள் வரிசையில் ஸ்ரீக்கு இப்படமும் பாராட்டு கிடைக்கும் படியாக அமைந்துள்ளது. ஹரிஷ் கல்யாணுக்கும் ஸ்ரீக்கு இணையான கேரக்டர், நன்றாகவே நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக வரும் சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ருதி, சாந்தினி ஆகியோரில் அரசியல்வாதியின் மகளாக, ஸ்ரீக்கு ஜோடியாக வரும் சம்ஸ்க்ருதி நடிப்பில் அதிக ஸ்கோர் செய்கிறார். ஹரிஷ் கல்யாண் வாழ்க்கையில் குறுக்கிடும் வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், சம்ஸ்க்ருதியின் தந்தையாக வரும் (மெட்ராஸ்) நந்தகுமார், ஹரிஷ் கல்யாணின் தந்தையாக வரும் ‘ஃபைவ் ஸ்டார்’ கல்யாண் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரையும் இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் என்று சொல்லலாம்!

பலம்

1. இரண்டு ஹீரோக்களை வெவ்வேறு ‘டிராக்’கில் பயணிக்க வைத்திருக்கும் திரைக்கதை
2. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் பாத்திர வடிவமைப்பும், நடிப்பும்
3. ‘யோகி’ பாபுவின் காமெடி காட்சிகள்

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி!
2. பாடல்கள், எடிட்டிங் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தாது

மொத்தத்தில்…

மாறுபட்ட முயற்சிகளை கொண்ட படங்களை வரவேற்கும் ரசிகர்களுக்கு இந்த ‘வில் அம்பு’ம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச்: குறித்த இலக்கை எட்டவில்லை!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில் அம்பு புதிய டிரைலர்


;