ஜில் ஜங் ஜக் - விமர்சனம்

ஜங்!

விமர்சனம் 12-Feb-2016 11:55 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Deeraj Vaidy
Production : Etaki Entertainment (Siddharth)
Starring : Siddharth, Sananth Reddy, Avinash Raghudevan
Music : Vishal Chandrashekhar
Cinematography : Shreyaas Krishna
Editing : Kurtz Schneider

சமீபகால தமிழ் சினிமாவில் வெளிவரும் இளையதலைமுறையினரின் படைப்புகள், வசூல்ரீதியாக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஆனால், தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் வேலைகளைச் சரியாக செய்து கொண்டிருக்கிறது எனத் தாராளமாகக் கூறலாம். அந்த வரிசையில், அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கிறது ‘ஜில் ஜங் ஜக்’. சித்தார்த், சனந்த் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் ராதா ரவி, நாசர், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியே இல்லாத இந்த ‘பிளாக் காமெடி’ வகையறா படத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கும்?

கதைக்களம்

2020ஆம் வருடம்... பெட்ரோல், நிலம், போதைப் பொருள் ஆகியவற்றின் மறைமுக வியாபாரங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் காலகட்டம். போதைப் பொருள் கடத்தல் தாதாவான தேவாவின் பெரும்பாலான ‘டீல்’கள் தோல்வியில் முடிய, தனது பிசினஸையும் புகழையும் மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலையில், தனது கடைசிகட்ட கடத்தல் வேலை ஒன்றை சித்தார்த் அன்ட் கோ வசம் ஒப்படைக்கிறார். வழக்கமான கடத்தல் பாணிகளைப் பயன்படுத்தாமல், வித்தியாசமான முறை ஒன்றில் தேவா கொடுத்தனுப்பும் போதைப்பொருளை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கக் கிளம்புகிறது ‘ஜில் ஜங் ஜக்’ டீம். இந்த பயணத்தில் நடக்கும் ஜாலி கேலி கூத்துக்களும், சின்னச் சின்ன திருப்பங்களும், நாயகர்கள் செய்யும் சாதனைகளும், சிற்சில தோல்விகளுமே படத்தின் சாராம்சம்.

படம் பற்றிய அலசல்

ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நாயகியே இல்லாத ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய ஸ்டைலில் படமாக்கத் துணிந்த சித்தார்த்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சித்தார்த்தின் எண்ணத்திற்கு, தன்னால் முடிந்தளவு வண்ணம் பூசி ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி. இயக்குனரின் எனர்ஜியான, புதுமையான சிந்தனைகளை படத்தின் முதல்பாதி முழுக்க ஆங்காங்கே நிச்சயம் உணர முடியும். ஆனாலும், ஒரு முழுமையான சுவாரஸ்ய படத்தைத் தருவதற்குரிய திரைக்கதையை எழுவதில் தீரஜ் வைத்தி சற்று தடுமாறி இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஒவ்வொரு கேரக்டர்களின் அறிமுகம், அவர்கள் அடிக்கும் காமெடிகள் என முதல்பாதியில் விறுவிறுப்பாகவும், சின்னச் சின்ன சுவாரஸ்யங்களுடனும் நகர்ந்த படம், இரண்டாம்பாதியில் எப்படி நகர்வது எனத் தெரியாமல் க்ளைமேக்ஸ் வரை ஊர்ந்து செல்கிறது. ஹாலிவுட் பாணியில் உருவாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்ட இப்படத்தை, அப்படங்களைப் போலவே 90 நிமிடங்களில் முடித்திருந்தால் ஒருவேளை இன்னும் சுவாரஸ்யமான ஒரு படமாக ‘ஜில் ஜங் ஜக்’ அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்களில், ‘ஷூட் த குருவி’ பாடலைத் தவிர படத்தில் வேறெந்த பாடலும் இடம்பெறவில்லை. ஆனால், பின்னணி இசையில் புதுமைகளைப் புகுத்தி படத்தை சுவாரஸ்யப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். படத்தின் காலகட்டத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ற வண்ணத்தைத் தருவதில் ஒளிப்பதிவும், டி.ஐ.யும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

சித்தார்த்தின் கேரியரில், இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் நிச்சயம் தனியான ஒரு இடத்தைப் பிடிக்கும். வித்தியாசமான தோற்றம், வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என புதிய பரிணாமத்தில் ஜொலித்திருக்கிறார் சித்தார்த். படம் முழுக்க சித்தார்த்துடன் வலம் வரும் அவினாஷ், சனந்த் ரெட்டி ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். ராதா ரவி, தேவா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒரேயொரு காட்சியில் தலைகாட்டினாலும், அப்ளாஸை அள்ளிச் செல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

பலம்

1. கதாபாத்திர வடிவமைப்பு, அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர்கள், அவர்களின் பங்களிப்பு
2. ரசிகர்களை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கும் காமெடி வசனங்கள்
3. பின்னணி இசை

பலவீனம்

1. ஹீரோயின், பாடல்கள் இல்லாத இப்படத்திற்கு அனைத்துதரப்பு ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
2. இரண்டாம்பாதி திரைக்கதை

மொத்தத்தில்...

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைப் புகுத்தி, படம் ஓடும் நேரத்தைக் குறைத்து சரியான விகிதத்தில் படத்தைக் கொடுத்திருந்தால் ‘ஜில் ஜங் ஜக்’ ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், எடுத்துக்கொண்ட புதிய முயற்சிக்காகவும், டெக்னிக்கல் விஷயங்களுக்காகவும் படத்தை ரசிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : ஜங்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஜில் ஜங் ஜக்’கின் வித்தியாசமான விளம்பரம் - வீடியோ


;