சாகசம் – விமர்சனம்

பழைய ஃபார்முலாவில் புதிய சாகசம்!

விமர்சனம் 6-Feb-2016 11:49 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Arunraj Varma
Production : Star Movies
Starring : Prashanth, Nargis Fakhri, Sonu Sood, Amenda, Nazer, Thambi Ramayya
Music : S.S.Thaman
Cinematography : Shaji Kumar
Editing : Zashi Qmar

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட்டான ‘ஜுலாய்’ படத்தை பிரஷாந்த் ‘சாகச’மாக தமிழில் ரீ-மேக் செய்து நடித்திருக்கிறார். பிரசாந்தின் ‘சாகசம்’ எப்படி?

கதைக்களம்

மிகவும் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துபவர் நாசர். அவரது மகன் பிரஷாந்த். எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றித் திரியும் பிரஷாந்த், ‘பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அதை ஒரு லட்சமாக்கி காட்டுகிறேன்’ என்று தந்தையிடம் சவால் விட்டு கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங்கில் பணம் கட்டச் செல்கிறார். அப்போது வங்கியில் கொள்ளை அடிக்க செல்லும் சோனு சூட் காரில் பிரசாந்த் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். பிரசாந்த் மூலம் மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் இடத்தை தெரிந்துகொள்ளும் சோனு சூட், வங்கியில் எளிதாக கொள்ளை அடிக்க, போலீஸை திசை திருப்புவதற்காக மேட்ச் பிக்சிங் நடக்கும் இடத்தை போலீஸுக்கு தெரியப்படுத்துகிறார். அந்த இடத்திற்கு வரும் போலீஸார் பிரஷாந்தை கைது செய்கிறார்கள். எதிர்பாராமல் போலீஸில் மாட்டிக்கொள்ளும் பிரஷாந்த், ‘சோனு சூட்’டின் சதி திட்டத்தை போலீஸுக்கு தெரியப்படுத்தி 1500 கோடி ரூபாய் கொள்ளையடித்து தப்பிக்க முயற்சிக்கும் சோனு சூட்டையும் போலீஸில் சிக்க வைக்கிறார். அதன் பிறகு இருவருக்குள் நடக்கும் பழிவாங்குதல் போராட்டங்களே ‘சாகசம்’.

படம் பற்றிய அலசல்

அரதபழசான ஒரு கதை தான்! ஆனால் அதை ரசிக்கும்படியான பாடல்கள், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், காதல், ரொமான்ஸ் என்று ஜனரஞ்சகமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா! வித்தியாசமான சிந்தனைகள், வித்தியாசமான கதைகள் என புது ரூட்டில் தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் புதுமையான ஒரு கதையை தனது மறு பிரவேசத்திற்காக பிரஷாந்த் தேர்ந்தெடுத்திருக்கலாம்! எஸ்.எஸ். தமனின் இசை மற்றும் ஷாஜிகுமாரின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டிருக்கும் அனைத்து பாடல்களும் கண்களுக்கு விருந்து என்றாலும் திரைக்கதையில் அடிக்கடி பாடல்கள் வருவதால் போரடிக்க வைக்கிறது. கனல் கண்ணன் மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோரின் சண்டை பயிற்சியில் பிரஷாந்த் பெரும் சாகசங்கள் செய்திருக்கிறார்.

நடிகர்களின் பங்களிப்பு

அடி தடி ஆக்‌ஷன், நடனம் ஆகியவற்றில் எப்போதுமே வெளுத்து வாங்கும் பிரஷாந்த் இப்படத்திலும் அதே பிரஷாந்தாக சாகசம் செய்திருக்கிறார். பிரஷாந்தின் காதலியாக வரும் ஆஸ்திரேலிய அழகி அமென்டா, பிரஷாந்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நர்கிஸ் ஃபக்ரி ஆகியோர் கவர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். பிரஷாந்தின் அப்பாவாக வரும் நாசர், போலீஸ் அதிகாரிகளாக வரும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் முதலானோர் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நன்றாக நடித்துள்ளனர். முக்கிய வில்லனாக வரும் சோனு சூட்டின் ஓவரான நடிப்பு சில இடங்களில் ரசிகர்களை சோதிக்கிறது.

பலம்

1. பிரஷாந்த்
2. இசை, பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள்
3. அமெண்டா, நர்கிஸ் ஃப்கிரி ஆகியோரின் கிளாமர் விருந்து

பலவீனம்

1.திரைக்கதை
2.அதிகபடியான லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்

லாஜிக் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்தில் பிரஷாந்தை மீண்டும் பார்க்க விரும்புவோருக்கு ஏற்ற படம் இந்த ‘சாகசம்’.

ஒரு வரி பஞ்ச் : பழைய ஃபார்முலாவில் புதிய சாகசம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;