பெங்களூர் நாட்கள் - விமர்சனம்

மலரும் நினைவுகள்!

விமர்சனம் 5-Feb-2016 2:19 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Bommarillu Bhaskar
Production : PVP Cinema
Starring : Arya, Sri Divya, Bobby Simha, Rana Daggubati, Parvathy, Raai Laxmi
Music : Gopi Sunder
Cinematography :K. V. Guhan
Editing : Marthand K. Venkatesh

மீண்டும் ஒரு தமிழ் பேசியிருக்கும் மலையாள படம். ‘பெங்களூர் நாட்களி’ல் என்னென்ன சுவாரஸ்யங்கள்?

கதைக்களம்

எம்.பி.ஏ. படிக்கும் கனவோடு ஸ்ரீதிவ்யா, அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி கவலைப்படாத ஆர்யா, மண் வாசம், கலாசாரம் மாறாத பாபி சிம்ஹா மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள். இந்த மூவருக்கும் பெங்களூர் என்பது நீண்டநாள் கனவு. ராணாவை திருமணம் செய்து கொள்வதால் பெங்களூருக்கு பயணமாகிறார் ஸ்ரீதிவ்யா. அதேபோல் பாபி சிம்ஹாவுக்கும் பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆர்யாவும் நண்பர்களுக்காக பெங்களூர் வருகிறார். ‘பெங்களூர் நாட்கள்’ இனிமையானதாக அமையும் என நினைத்துக் கொண்டிருந்த ஸ்ரீதிவ்யாவிற்கு, ராணாவின் நடவடிக்கைகள் ஏமாற்றத்தைத் தருகிறது. அதேபோல் பாபி சிம்ஹாவுக்கும் ஒரு காதல் தோல்வி ஏற்படுகிறது. இன்னொருபுறம் ஆர்யாவுக்கும், அவர் காதலிக்கும் பார்வதிக்கும் இடையே மலரும் காதலுக்குத் தடையாக, பார்வதியின் அம்மா ரேகா குறுக்கே வருகிறார். மீண்டும் இவர்களின் வாழ்க்கை இனிமையாக மாறி, 3 பேராக இருந்த நண்பர்கள் கூட்டம் 6 பேராக எப்படி மாறுகிறது என்பதே இந்த ‘பெங்களூர் நாட்கள்’.

படம் பற்றிய அலசல்

‘பெங்களூர் டேஸ்’ மலையாள படத்தின் கதையில் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் செய்யாமல், அதை அப்படியே தமிழில் ரீமேக் செய்ததற்கு பொம்மரிலு பாஸ்கருக்கு பாராட்டுக்கள். இப்படத்தின் மிகப்பெரிய பலமே படம் முழுவதும் நிறைந்து கிடக்கும் உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகள்தான். அதை எந்தவிதத்திலும் இப்படத்தில் கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ‘பெங்களூர் டேஸி’ல் நடிகர்களின் பங்களிப்பு மிகப்பெரிய பலம். பாபி சிம்ஹாவைத் தவிர்த்து, இப்படத்திலும் அந்தந்த கேரக்டருக்கு அனைவருமே தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதேபோல் பின்னணி இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்களும் இப்படத்திற்கு கைகொடுத்துள்ளன.

பாடல்கள் இடையிடையே குறுக்கிடுவது, இரண்டாம்பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது, போன்ற உணர்வை ஏற்படுத்துவது, பாபி சிம்ஹாவிற்கு பொருத்தமில்லாத கேரக்டர் கொடுக்கப்பட்டிருப்பது போன்றவை ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் பலவீனங்களாக அமைந்துவிட்டன.

நடிகர்களின் பங்களிப்பு

துறுதுறு ஸ்ரீதிவ்யா, ஜாலி பாய் ஆர்யா, அம்மாஞ்சி பாபி சிம்ஹா, ரஃப் அன்ட் டஃப் ராணா, கொஞ்சநேரமே வந்தாலும் மனதை அள்ளும் சமந்தா, பார்வையிலேயே பேசும் பார்வதி, ஏர்கோஸ்டஸ் ராய் லட்சுமி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது பெங்களூர் நாட்களில். இதில் பாபி சிம்ஹாவைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஓரளவுக்கு ‘பெங்களூர் டேஸ்’ கேரக்டர்களுக்குப் பொருந்திவிட்டார்கள். நிவின் பாலியிடமிருந்த ஏதோ ஒன்று பாபியிடம் மிஸ்ஸிங். துல்கர் கேரக்டர் ஆர்யாவுக்கு ஏக பொருத்தம். நஸ்ரியாவின் இடத்தை நிரப்ப முடிந்தளவு முயன்றிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால், ஸ்ரீதிவ்யாவின் கேரியரில் நிச்சயம் இந்த கேரக்டருக்கு ஒரு ‘பெஸ்ட்’ இடம் உண்டு. ‘பாகுபலி’யில் பார்த்த ராணாவா இது...? ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நல்லவேளை பார்வதி கேரக்டருக்கு பார்வதியையே நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரைத்தவிர வேறொருவரை நிச்சயமாக அந்த கேரக்டரில் யோசிக்கவே முடியவில்லை. திடீர் என்ட்ரி தந்து, சட்டென மறைந்துபோகிறார் சமந்தா. அவரின் அப்பாவாக பிரகாஷ் ராஜுக்கு அட்டகாசமாக கேரக்டர். இயல்பாக நடித்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணனும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பலம்

1. நட்சத்திரப் பட்டாளம்
2. பின்னணி இசை
3. பார்வதியின் அசத்தலான நடிப்பு

பலவீனம்

1. நீளமான உணர்வைத்தரும் இரண்டாம்பாதி
2. பாடல்கள்

மொத்தத்தில்...

‘பெங்களூர் டேஸ்’ பார்த்தவர்களுக்கு இப்படம் பெரிய ஆச்சரியத்தைத் தராமல் போகலாம். ஆனால், புதிதாகப் பார்ப்பவர்களுக்கு இந்த பெங்களூர் நாட்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தர வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக மல்டி ப்ளக்ஸ் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : மலரும் நினைவுகள்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;