விசாரணை - விமர்சனம்

காவல்துறையின் நிஜ முகம்!

விமர்சனம் 4-Feb-2016 5:09 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vettrimaaran
Production : Wunderbar Films, Graas Root Film Companay
Starring : ‘Attakathi’ Dinesh, Samuthirakani, Murugadas, Anandi, Kishore
Music : G.V.Prakash
Cinematography : S.Ramalingam
Editing : Kishore

எம்.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த ‘விசாரணை’ ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றிருப்பதோடு கமல்ஹாசன், ரஜினிகாந்த், மணிரத்னம் உட்பட பல பிரபலங்களின் பாராட்டுக்களும் பெற்ற படமாகும்.

போலீஸ் துறையில் இருக்கும் சில போலீஸ் அதிகாரிகள் தங்களது சுயநலத்திற்காக சில அப்பாவி இளைஞர்கள் எப்படியெல்லாம் ‘பலிகடா’ ஆக்கப்படுகிறார்கள் என்பது தான் ‘விசாரணை’ படத்தின் மையக் கரு. அதனை எந்தவித கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் படு யதார்த்தமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஆந்திர மாநில போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு, பொய் வழக்குப் போடப்பட்டு பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள் தமிழகத்தை சேர்ந்த ‘அட்டக்கத்தி’ தினேஷ், முருகதாஸ் உட்பட நான்கு அப்பாவி இளைஞர்கள்! ஒரு வழியாக ஆந்திர நீதிமன்றம் வாயிலாக தமிழக போலீஸ் அதிகாரி சமுத்திரகனி உதவியுடன் அந்த நான்கு இளைஞர்களும் விடுதலையாகிறார்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படும் அந்த இளைஞர்களை தமிழக போலீஸ் அதிகாரிகளும் தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவதோடு ஒரு கட்டத்தில் அவர்களை தங்களது சுய லாபத்திற்காக (பல கோடி ரூபாய்க்காக…) என்கவுண்டர் செய்யவும் திட்டமிடுகிறார்கள். இந்த சதி திட்டத்தை தெரிந்துகொள்ளும் அந்த நான்கு இளைஞர்கள் அந்த போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை பரப்பரப்பாக, விறுவிறுப்பாக சொல்லும் படமே ‘விசாரணை’.

விசாரணை கைதியாக வரும் ‘அட்டகத்தி’ தினேஷும் அவரது நண்பர்களும் படத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்! அனைத்து காட்சிகளிலும் வலியுடன் நடித்திருக்கிறார்கள். ஆந்திர போலீஸாரின் சித்ரவதைகள் தாங்க முடியாமல் தவிப்பதாகட்டும், தமிழக போலீஸாரின் சதி திட்டத்தை அறிந்து அவர்களை எதிர்க்க முடியாமலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமலும் அவர்கள் தவிக்கும் தவிப்பு, படம் பார்ப்போரை பதறவைக்கும்! சமுத்திரகனி தவிர்த்து படத்தில் வரும் அத்தனை போலீஸ் அதிகாரிகளையும் கெட்டவர்களாகவே காண்பித்திருக்கிறார்கள்! போலீஸ் அதிகாரிகளில் மனிதநேயம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் சமுத்திரக்கனியின் கேர்கடர்! ஆனால் அவரும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் மேலதிகாரிகளின் கெடுபிடிகளாலும் அநீதிக்கு துணை போகிற போலீஸாக வந்து அதிகார வர்க்கத்தினரின் அடாவடித்தனங்களை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார்.

தினேஷை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வரும் ஆனந்தி, கோடிகள் பேரம் பேசப்படும் ஆடிட்டராக வரும் கிஷோர் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் கதையின் போக்கில் யதார்த்தமாக நடித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

அதைப்போலவே வெற்றிமாறனின் எண்ணங்களுக்கு ஈடு கொடுத்து காட்சிகளை யதார்த்தமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம். ஜி.வி.பிரகாஷின் இசை அமைப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ள அம்சம்.

இந்த படம் வசூலில் சாதிக்கிறதோ இல்லையோ, இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் காவல்துறையில் இப்படியெல்லாமா நடக்கிறது? காவல் துறையை எப்படி நம்புவது என்ற ஒரு அச்சத்தை தான் ஏற்படுத்தும்! மக்களின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பது காவல்துறை! அப்படிப்பட்ட காவல்துறையில் இதுபோன்ற போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள இப்படத்தை வரவேற்கலாம்.

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால், ‘விசாரணை’க்கு ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காக்கா முட்டை - 'செல் செல்...' வீடியோ பாடல்


;