எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பிரசாந்தின் ‘சாகசம்’

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பிரசாந்தின் ‘சாகசம்’

கட்டுரை 3-Feb-2016 2:41 PM IST Chandru கருத்துக்கள்

‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமான பிரசாந்த் 1990லிருந்து 2005 வரை தமிழில் கோலோச்சியவர். அதன்பின்னர் படங்களில் நடிப்பதை வெகுவாகவாக குறைத்தவர், இப்போது ‘சாகசம்’ மூலம் மீண்டும் தமிழில் அடுத்தகட்ட ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார். எடையைக் குறைத்து உடம்பை ‘ஃபிட்’டாக்கி, 10 வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த அதே ‘சாக்லேட் பாயை’ மீண்டும் கண்முன் நிறுத்தியிருக்கிறார் பிரசாந்த்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்த படம் ‘ஜுலாய்’. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன், தமிழில் ‘சாகசம்’ படமாக தயாரித்திருக்கிறார். ஒரிஜினல் கதையில் தமிழுக்கேற்றபடி சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் கதாசிரியர் தியாகராஜன். படத்தை இயக்கியிருப்பவர் அருண் ராஜ் வர்மா.

ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என பொழுதுபோக்கு விஷயங்கள் அனைத்தும் நிறைந்த இந்த ‘த்ரில்லர்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரசாந்த். அவருக்கு ஜோடியாக ‘ஆஸ்திரேலிய அழகி’ அமென்டா நடித்திருக்கிறார். அதோடு ‘பாலிவுட் கவர்ச்சிக்கன்னி’ நர்கீஸ் பக்ரி பாடல் ஒன்றில் பிரசாந்துடன் இணைந்து சூப்பர் நடனம் ஆடியிருக்கிறார். படத்தின் வில்லனாக சோனு சூட் நடித்திருக்க, இவர்களுடன் நாசர், தம்பி ராமையா, கோட்டா சீனிவாசராவ், தேவதர்ஷினி என ஏகப்பட்ட நட்சத்திரப்படங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஷஜி குமாரின் கலர்ஃபுல் ஒளிப்பதிவில், ‘சாகசம்’ படத்திற்காக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

தமன் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் ‘சாகசம்’ படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நர்கீஸ் பக்ரி நடனமாடியிருக்கும் குத்துப்பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. கபிலன் எழுதியிருக்கும் ‘பிடிக்கும் பிடிக்கும்’ கானா பாடல் ஸ்ரேயா கோஷலின் தேன் குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு ஹனி சிங், மோகிஹித் சௌகான், சங்கர் மஹாதேவன் ஆகியோரும் ‘சாகசம்’ படப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

இப்படம் துவங்கிய நாள்முதலே, அதனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக, சரியாக திட்டமிட்டு புரமோஷன் செய்து வருகிறார் தியாகராஜன். படம் குறித்த ஒவ்வொரு செய்திகளையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் சரியான நேரத்தில் களமிறக்கி, ரசிகர்கள் மத்தியில் ‘சாகசம்’ படம் குறித்த எதிர்பார்ப்பை பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறார்.

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருக்கும் ‘சாகசம்’ படம் வரும் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டுமே 250க்கும் அதிகமான திரையரங்குகள் இப்படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்திற்குப் பிறகு பிரசாந்த் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்கவிருக்கிறார். இதனால் மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவாக பிரசாந்த் வலம் வருவார் என அவரது ரசிகர்கள் பெரிய நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;