‘ஜில் ஜங் ஜக்’கில் சித்தார்த் புதிய முயற்சி!

‘ஜில் ஜங் ஜக்’கில் சித்தார்த் புதிய முயற்சி!

கட்டுரை 3-Feb-2016 1:06 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சித்தார்த் தனது ‘எடாகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் முதன் முதலாக தயாரித்துள்ள படம் ‘ஜில் ஜங் ஜக்’. குறும்பட இயக்குனர் தீரஜ் வைத்தி எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் ராதாரவி, அவினாஷ், ரகுதேவன், சனந்த், ஆர்.மகேந்திரன், எம்.ஜி.சாய் தீனா, கே.பகவதி பெருமாள், நாகா, பிபின், ஷரத், ஆர்.எஸ்.சிவாஜி, விஜய்முத்து, பிரவீன், ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

‘கதாநாயகி இல்லாமல் மூன்று இளைஞர்களை சுற்றிச் சுழலும் வித்தியாசமான ஒரு கதை அமைப்பைக் கொண்ட படம் இது’ என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான சித்தார்த். அவர் மேலும் படம் குறித்து பேசும்போது,

‘‘இப்படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ என்று டைட்டில் வைத்ததும். ‘இது என்ன தலைப்பு?’ என்று நிறைய பேர் கேட்டார்கள். இப்படத்தில் வரும் முக்கியமான மூன்று கேரக்டர்களின் பெயர்கள் அது! இப்போது இந்த தலைப்பு மிகவும் பிரபலமாகி விட்டது. ‘கதாநாயகி இல்லாமல் படமா?’ என்றும் நிறைய பேர் கேட்டார்கள். இந்த கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. இந்த கதையில் கமர்ஷியல் விஷயத்துக்காக ஒரு கதாநாயகி கேரக்டரை திணிப்பதாக இருந்தால் அது இந்த கதைக்கு நான் செய்யும் துரோகமாக தான் இருக்கும். ஆனால கதாநாயகி இல்லாத குறை தெரியாத அளவுக்கு படம் படு ஜாலியாக செல்லும். அதுமாதிரியான ஜாலியான, காமெடியான ஒரு ஸ்கிரிப்ட் இந்த ‘ஜில் ஜங் ஜக்’.

இப்படத்தில் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத பல புதிய விஷயங்களை கையாண்டிருக்கிறோம். புதிய டெக்னிக்குகளை பயன்படுத்தியிருக்கிறோம். இது நிச்சயமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இயக்குனர் தீரஜ் வைத்தியுடன் ஒளிப்பதிவுக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசைக்கு விஷால் சந்திரசேகர், படத்தொகுப்புக்கு குருட்ஸ் ஸ்னைடர், கலை இயக்கத்திற்கு சிவசங்கர், சண்டை பயிற்சிக்கு சக்தி சரவணன் என இப்படத்தின் பின்னணியில் பணியாற்றியிருக்கும் அனைவருமே இளைஞர்கள் தான்!

திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை தயாரித்துள்ளேன் என்றாலும் அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. எனக்கான கதையை நானே தேர்வு செய்து தயாரிக்கும்போது எளிதாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படங்களை தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளேன். அதற்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்வதற்காகவே ஒரு டீமை உருவாக்கியுள்ளேன். அவர்களோட முழு நேர வேலையும் கதைகளை உருவாக்குவது தான். அப்படி அவர்கள் உருவாக்கும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த படத்தை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.

‘ஜில் ஜங் ஜக்’ சுத்தமான தமிழ் வார்த்தை கிடையாது என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பது தெரியும். அதனால் வரி விலக்குக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் சித்தார்த்ன் பெரும் நம்பிக்கையுடன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;