இறுதிச்சுற்று - விமர்சனம்

ரியல் சாம்பியன்!

விமர்சனம் 29-Jan-2016 7:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sudha Kongara
Production : Y NOT Studios, UTV Motion Pictures, Thirukumaran Entertainment
Starring : R. Madhavan, Ritika Singh, Zakir Hussain
Music : Santhosh Narayanan
Cinematography : Sivakumar Vijayan
Editing : Sathish Suriya

‘வேட்டை’ படத்திற்குப் பிறகு மீண்டும் 4 வருடங்கள் கழித்து தமிழுக்கு வந்திருக்கிறார் மாதவன். முரட்டு மாஸ்டராக மாதவன் நடித்திருக்கும் ‘இறுதிச்சுற்று’ படம் எப்படி?

கதைக்களம்

இந்தியாவிலிருந்து ஒரு பாக்ஸிங் சாம்பியனை உருவாக்க வேண்டுமென்பது மாதவனின் கனவு. ஆனால், அரசியல் பலி வாங்கல்களால் அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார். இந்நிலையில் சென்னையில் மீன் விற்கும் பெண்ணான ரித்திகா சிங்கை சந்திக்கிறார் மாதவன். அவரின் பாக்ஸிங் திறமையைக் கண்டு வியக்கும் மாதவன், தன் சொந்த காசில் அவருக்கு பயற்சியளிக்கிறார். இன்னொருபுறம் மாதவனின் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவருக்கெதிராகவும் சில சதிவேலைகள் நடக்கின்றன. இந்த சதிவேலைகளை முறியடித்து இந்தியாவிற்கான சாம்பியனை மாதவன் உருவாக்கினாரா இல்லையா என்பதே இந்த ‘இறுதிச்சுற்று’.

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே பத்ரி, மான் கராத்தே, பூலோகம் என சில பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படங்கள் தமிழில் வந்திருந்தாலும், முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மட்டுமே மையமாகக் கொண்டு, அதைப்பற்றி சீரியஸாகவும் பேசியிருக்கும் படமொன்றால் நிச்சயமாக இந்த ‘இறுதிச்சுற்றை’தான் சொல்ல வேண்டும். அதிலும் விளையாட்டில் பெண்கள் அதிகம் சாதிக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம் என்பதையும் இப்படம் சாட்டையடியாக சொல்லியிருக்கிறது. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக ஓடும் இப்படத்தின் ஒவ்வொரு கதாபத்திரங்களையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் பெண் இயக்குனரான சுதா கோங்கரா. குறிப்பாக மாதவன் மற்றும் ரித்திகா சிங்கின் பாத்திர படைப்பில் அத்தனை மெனக்கெடல்கள். அருண் மகேஷ்வரனின் வசனம் படத்திற்கு கூடுதல் பலம்.

சந்தோஷ் நாராயணின் இசை, சதீஷ் சூர்யாவின் எடிட்டிங், சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் இப்படம் நல்ல உழைப்பைக் கொட்டியிருக்கிறது. எப்படியும் மாதவன் நினைத்ததை சாதித்துவிடுவார் என்பது படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே நமக்கு தெரிந்துவிட்டாலும், அதை எப்படி சாதிக்கிறார் என்பதை அத்தனை சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்களின் பங்களிப்பு

மணிரத்னத்திற்குப் பிறகு, மாதவனை சரியாக பயன்படுத்தியிருப்பது இயக்குனர் சுதா கோங்கராதான். அவரின் திறமையை முழுவதுமாக வெளிக்கொணந்துள்ளார். ‘அலைபாயுதே’வில் பார்த்த ‘சாக்லேட் பாயா’ இவர்? என அதிசயிக்க வைத்துள்ளார். முறுக்கேறிய உடம்பு, தீர்க்கமான பார்வை, அலட்டலான பேச்சு, திறமைக்கே இருக்கும் திமிர் என பாடி லாங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும் ‘மேடி’ பின்னியிருக்கிறார். அவர் கேரியரில் அவர் செய்த பெஸ்ட் கேரக்டர்களில் இந்த பிரபு செல்வராஜ் கேரக்டருக்கும் முக்கிய இடமுண்டு. சல்யூட் மாதவன்!

அடேங்கப்பா.... ‘என்ன பொண்ணுடா இது’ என படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார் ரித்திகா சிங். மாதவனுக்கு இணையாக படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். அதிலும் இவர் நிஜ பாக்ஸர் என்பது படத்திற்கு கூடுதல் ப்ளஸ். டான்ஸ், பாக்ஸிங், டயலாக் மாடுலேஷன், உடல்மொழி என அத்தனையிலும் அசத்தியிருக்கிறது இந்த பாக்ஸிங் பொண்ணு. இவர்கள் இருவரையும் தவிர்த்து நாசர், ராதா ரவி, ஜாகிர் உசேன், ரித்திகாவின் அக்கா, அம்மாவாக நடித்திருப்பவர்கள், ரித்திகாவின் அப்பாவாக நடித்திருக்கும் காளி வெங்கட் என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. கதாபாத்திர வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும்
2. டெக்னிக்கல் விஷயங்கள்
3. இயக்கமும், வசனமும்

பலவீனம்

லாஜிக்கலாக சில கேள்விகள் எழுவது மட்டுமே படத்தின் பலவீனம்

மொத்தத்தில்...

‘பெண்கள் வலிமை’ பற்றிப் பேசிய, விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் தமிழில் எத்தனையோ வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து இப்படம் நிச்சயம் தனித்துத் தெரியும். ஒரு குழுவாக இணைந்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறது ‘இறுதிச்சுற்று’ டீம். பெண் இயக்குனர்கள் பட்டியலில் சுதா கோங்கராவுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் நிச்சயம் உண்டு!

ஒரு வரி பஞ்ச் : ரியல் சாம்பியன்!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ


;