அரண்மனை 2 - விமர்சனம்

ஏற்கெனவே பார்த்த ‘அரண்மனை’யை மீண்டும் பார்க்கத் தயாரா?

விமர்சனம் 29-Jan-2016 3:23 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sundar C.
Production : Avni Cinemax
Starring : Siddharth, Sundar C., Trisha, Hansika Motwani, Poonam Bajwa, Soori
Music : Hiphop Tamizha
Cinematography : U. K. Senthil Kumar
Editing : N. B. Srikanth

‘அரண்மனை’யின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தோடு வந்திருக்கிறார் சுந்தர்.சி. ஹன்சிகா, மனோபாலா, கோவை சரளா போன்ற தனது பழைய படை பட்டாளங்களுடன், சித்தார்த், த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி என்ற புதுக்கூட்டணியையும் அமைத்திருக்கிறார்கள் இந்த இரண்டாம் பாகத்தில். இது புதிய அரண்மனையா? இல்லை பழைய கட்டிடமா?

கதைக்களம்

ஒரு அரண்மனை. அந்த அரண்மனைக்குள் நடக்கும் மர்ம சம்பவங்கள். அதில் பாதிக்கப்படும் அரண்மனை வாசிகள். அதற்கான காரணமானதைக் கண்டுபிடிக்கும் ஹீரோ.... இதேதான் இந்த 2ஆம் பாகத்தின் கதையும்.

ஜமீன்தார் ராதாரவியை அரண்மனையின் மாடியிலிருந்து தள்ளி சாகடிக்கப் பார்க்கிறது ஒரு அமானுஷ்ய சக்தி. அந்த சம்பவத்தில் கோமா ஸ்டேஜிற்கு செல்கிறார் ராதாரவி. இதனால் வெளிநாட்டிலிருக்கும் அவரது மகன் சித்தார்த்தும், அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் த்ரிஷாவும் அரண்மனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கும் ஏதோ ஒரு அமானுஷ்யம் அந்த அரண்மனையில் இருப்பதுபோல் தோன்றுகிறது. அதோடு அரண்மனையின் வேலைக்காரர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலைப்பழி சித்தார்த் மீது விழ, போலீஸ் அவரை கைது செய்கிறது. இந்த நேரத்தில் த்ரிஷாவின் அண்ணன் சுந்தர்.சி என்ட்ரி கொடுக்கிறார்.

அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணகர்த்தா யார்? சுந்தர்.சி. அதை கண்டுபிடித்து என்ன செய்கிறார் என்பதே மீதிக் கதை!

படம் பற்றிய அலசல்

முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஆர்ட்டிஸ்ட்டைத் தவிர எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. அதே கதை, அதேபோன்ற காட்சியமைப்புகள்... கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் சிரிப்பு, ஆங்காங்கே சில பயமுறுத்தல்கள், ஃப்ளாஷ்பேக்கில் நெஞ்சை பிழிய வைக்கும் சென்டிமென்ட், க்ளைமேக்ஸில் ஒரு அம்மன் பாடல் என அப்படியே ‘அரண்மனை’யை ஜெராக்ஸ் செய்திருக்கிறார் சுந்தர்.சி. ஆனால் இந்தமுறையும் ரசிகர்கள் சிரிக்கிறார்கள், பயப்படுகிறார்கள், கைதட்டி ஆர்ப்பறிக்கிறார்கள். இதுவே சுந்தர்.சியின் தொடர் வெற்றி ரகசியம்.
முதல் பாகத்தைவிட இதில் கொஞ்சம் சிஜிக்காக மெனக்கெட்டிருக்கிறார்கள். அதோடு 100அடி அம்மன் சிலை ஒன்றை உருவாக்கி, அதற்காக ஒரு கோவிலையும், அங்கே நடக்கும் பூஜை, திருவிழாக்களையும் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இரைச்சல் சப்தமே அதிகமாக இருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

சித்தார்த்துக்கு படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு வெற்றிப் படத்தின் ஹீரேவாக தன்னால் முடிந்ததை சரிவர செய்திருக்கிறார். சுந்தர்.சி இந்தப் படத்திலும் முக்கிய வேடம் ஒன்றை கைப்பற்றி, ஆக்ஷன் ஏரியாக்களில் அதகளம் செய்திருக்கிறார். த்ரிஷா கிளாமர் ஏரியாக்களை கவனித்துக் கொள்ள, ஹன்சிகா சென்டிமென்ட் மற்றும் ஹாரர் ஏரியாக்களில் முழு ஸ்கோர் செய்திருக்கிறார். படம் நெடுக ஆங்காங்கே வந்து போனாலும், பூனம் பாஜ்வா எதற்காக படத்தில் நடித்திருக்கிறார் என்பதே தெரியவில்லை. சந்தானத்தின் இடத்தை கைப்பற்றிய சூரி, அவரளவுக்கு இல்லையென்றாலும் தன்னால் முடிந்தளவு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். குறிப்பாக இரண்டாம்பாதியில் சூரியின் காமெடிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. நட்சத்திரப் பட்டாளங்கள்
2. ஆங்காங்கே சிரிக்க வைக்கும் காமெடிகள்
3. கலை இயக்கம்

பலவீனம்

1. டெம்ப்ளேட் கதையும் காட்சியமைப்புகளும்
2. பயமுறுத்துவதற்காக காதுகளைப் பதம் பார்த்திருப்பது
3. பாடல்கள்

மொத்தத்தில்...

சுந்தர்.சி. படங்கள் மட்டுமல்ல, அவர் படங்களுக்கான விமர்சனங்களும் ‘டெம்ப்ளேட்’டாகவே அமைந்துவிடும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அது தெரிந்தே தியேட்டருக்கு வந்து, கொண்டாடுவதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவர்களுக்கான படம்தான் இந்த ‘அரண்மனை 2’.

ஒரு வரி பஞ்ச் : ஏற்கெனவே பார்த்த ‘அரண்மனை’யை மீண்டும் பார்க்கத் தயாரா?

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;