கெத்து - விமர்சனம்

தலைப்பில் மட்டும்!

விமர்சனம் 16-Jan-2016 7:40 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Thirukumaran
Production : Red Giant Movies
Starring : Udhayanidhi Stalin, Amy Jackson, Vikranth, Karunakaran, Sathyaraj
Music : Harris Jayaraj
Cinematography : Sukumar
Editing : Dinesh Ponraj

தனது முதல் 3 படங்களில் காமெடிக்களத்தை தேர்வு செய்த உதயநிதி, முதல்முறையாக ஆக்ஷன் களத்தில் குதித்திருக்கிறார். அவருடைய ‘கெத்து’ ரசிர்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டுள்ளது?

கதைக்களம்

ஊட்டியில் பி.டி. மாஸ்டராக வேலைசெய்யும் சத்யராஜுக்கும், அவருடைய பள்ளிக்கு அருகில் ஒயின் ஷாப் நடத்திவரும் ‘மைம்’ கோபிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மறுநாள் மைம் கோபியை யாரோ கொலை செய்துவிட, அந்தப் பழி சத்யராஜ் மீது விழுகிறது. தனது தந்தை சத்யராஜுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை நிரூபிப்பதற்காக மகன் உதயநிதி களத்தில் குதிக்கிறார். ‘மைம்’ கோபியைத் தொடர்ந்து மேலும் சில மரணங்கள் நிகழ்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்தது யார்? ஏன் செய்யப்பட்டது? என்பதை ஊட்டி போலீஸுக்கு உதயநிதி நிரூபிக்க எடுக்கும் போராட்டமே ‘கெத்து’.

படம் பற்றிய அலசல்

இப்படத்தின் வில்லன் இவர்தான் என்பதை படத்தில் முதல் பிரேமிலேயே காட்டிவிடுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகுதான் தொடர் கொலைகளைக் காட்டிவிட்டு, சஸ்பென்ஸ் என்ற பெயரில் இன்வெஸ்டிகேஷன் செய்கிறார்கள். இதை இவர்தான், இதற்காகத்தான் செய்திருப்பார் என்பதை எளிதில் யூகித்துவிடக்கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அந்த கதையை பெரிய ட்விஸ்ட்கள் எதுவுமே இல்லாத திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்கள். பரபரப்பாக நகர வேண்டிய ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை ஸ்லோவாக நகர்ந்தால், ரசிகர்கள் எவ்வளவு நேரம்தான் தாக்குப்பிடிப்பார்கள்?

ஒளிப்பதிவு தவிர இப்படத்தில் பாராட்டும்படியாக எந்த ஒரு விஷயமும் இல்லை. இசை, எடிட்டிங் ஆகியவையும் படத்தை சுவாரஸ்யப்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் பயன்படவில்லை. சாதாரணமான ஒரு காட்சிக்குக்கூட பிரம்மாண்டமான பின்னணி இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டேயிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்க வேண்டுமென்ற உதயநிதியின் ஆசை, ‘கெத்து’ படத்தில் நிறைவேறியிருக்கிறது. அதற்காக இரண்டு சண்டைக்காட்சிகளில் நன்றாக மெனக்கெட்டிருக்கிறார். நடன அசைவுகளிலும் உதயநிதியிடம் நல்ல முன்னேற்றம். ஆனால், நடிப்பில் இன்னும் நிறைய தூரத்தை அவர் கடக்க வேண்டியிருக்கிறது. கதைக்கு சம்பந்தமில்லாத நாயகி வேடம் எமி ஜாக்ஸனுக்கு. அதனால் பாடல்களில் தனக்கான வேலைகளை அவர் செய்திருக்கிறார். வில்லன் என்பதால் படம் முழுக்க ஒரே மாதிரியான வெறித்த பார்வையுடன் சுற்றி வருகிறார் விக்ராந்த். உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், தன் பங்கு வேலைகளை சரியாக செய்திருக்கிறார். காமெடிகள் எதுவும் இல்லாத ஒரு திரைக்கதையில் கருணாகரனுக்கு போலீஸ் கேரக்டர் கொடுக்கப்பட்டது எதற்காகவோ?

பலம்

ஒளிப்பதிவைத் தவிர்த்து, ‘இதுவும் இப்படத்தின் பலம்தான்’ என்று சொல்வதற்கு எந்த ஒரு விஷயமும் பிடிபடவில்லை.

பலவீனம்

கதை, திரைக்கதை, இயக்கம், இசை, எடிட்டிங் என ஒரு திரைப்படத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்துமே இப்படத்தின் பலவீனங்களாக அமைந்துவிட்டன.

மொத்தத்தில்...

ஒரு த்ரில்லர் படத்தின் முக்கிய அம்சமே, சின்ன சின்ன ட்விஸ்ட்களும், விறுவிறுப்பான காட்சியமைப்புகளும்தான். ஆனால், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகனை சோதிக்கும் வகையில் இழுவையாக ‘எடிட்டிங்’ செய்யப்பட்டிருக்கிறது. தன் முதல்படமான ‘மான்கராத்தே’வில், தன் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதையை சுவாரஸ்யமாக இயக்கிய திருக்குமரன், ‘கெத்து’ படத்திற்காக தனது சொந்த முயற்சியில் திரைக்கதை அமைப்பதில் சறுக்கியிருக்கிறார்.

ஒரு வரி பஞ்ச் : தலைப்பில் மட்டும்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மனிதன் புதிய டிரைலர்


;