கதகளி - விமர்சனம்

விறுவிறுப்பு குறைந்த சஸ்பென்ஸ் ஆட்டம்!

விமர்சனம் 15-Jan-2016 10:21 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Pandiraj
Production : Pasanga Production, Vishal Film Factory
Starring : Vishal, Catherine Tresa, Karunas
Music : Hiphop Thamizha
Cinematography : Balasubramaniem
Editing : Pradeep E.Ragav

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் ஆக்ஷன் ‘கதகளி’ ஆடியிருக்கிறார். ஆட்டம் எப்படி?

கதைக்களம்

வெளிநாட்டிலிருந்து கடலூருக்குத் திரும்பும் விஷாலுக்கு 4 நாட்களில் கேத்ரின் தெரஸாவுடன் திருமணம். தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பத்திரிகை கொடுத்து வரும் நேரத்தில், கடலூரின் பிரபல தாதாவான மதுசூதனன் மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை செய்தது யார் என விசாரிக்கும் போலீஸ், முன்பகை காரணமாக விஷாலையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறது. சென்னைக்கு கேத்ரின் தெரஸாவை சந்திக்குச் சென்றிருக்கும் விஷாலை, உடனடியாக கடலூருக்கு வந்து சரணடையும்படி மிரட்டுகிறது போலீஸ். இன்னொருபுறம் மதுசூதனனைக் கொன்றது விஷால்தான் என நினைத்து, கடலூர் வரும் விஷாலை வழியிலேயே பழிவாங்கக் கிளம்புகிறார்கள் மதுசூதனனின் ஆட்கள்.

உண்மையில் மதுசூதனனைக் கொன்றது யார்? விஷால் மீது கொலைப்பழி விழுக என்ன காரணம்? இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை விஷால் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘கதகளி’.

படம் பற்றிய அலசல்

கிட்டத்தட்ட ‘பாண்டிநாடு’ ஸ்டைலில் உருவாகியிருக்கும் படம். ‘கொலைக்குக் காரணம் யாராக இருக்கும்’ என்ற ஒரு சின்ன சஸ்பென்ஸ் முடிச்சை க்ளைமேக்ஸ் வரை அவிழ்க்காமல் கொண்டு சென்றிருக்கிறார் பாண்டிராஜ். இந்த ஒரு விஷயம்தான் படத்தை கடைசிவரை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது. இடைப்பட்ட நேரத்தில் பெரிய ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை. இடையிடையே, கருணாஸ் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விஷால் - கேத்ரினின் ரொமான்ஸ் காட்சிகளும் படத்தை நகர்த்துவதற்கு உதவியிருக்கின்றன.

மொத்தமே 2 மணி நேரம் 5 நிமிடங்கள்தான் இப்படம் ஓடுகிறது. ஆனால், ஏதோ இரண்டரைமணி நேரப் படம் பார்த்ததைப் போன்ற அயர்ச்சி ஏற்படுகிறது. இதுவே இப்படத்தின் பெரிய பலவீனம். ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 2 பாடல்கள் ஒலிக்கின்றன. இரண்டுமே ஏற்கெனவே கேட்ட ரகம் என்பதால் ரசிக்க முடியவில்லை. பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

விஷாலைப் பொறுத்தவரை இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், அவர் ஏற்கெனவே பல முறை செய்ததுதான். அதோடு அவரின் ஹேர்ஸ்டைலைத் தவிர்த்து, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என எதிலும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இருந்தபோதும், தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் விஷால். இந்தப்படத்திற்கு வேறொருவர் பின்னணி வாய்ஸ் கொடுத்திருப்பதாலோ என்னவோ, ‘மெட்ராஸ்’ படத்தில் பார்த்த கேத்ரின் இதில் வேறு மாதிரியாகத் தெரிகிறார். ஆனால் நடிப்பிலும், அழகிலும் அசத்துகிறார் கேத்ரின். மிரட்டல் தாதாவாக அறிமுகப்படுத்தப்படும் வில்லன் மதுசூதனன் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு காணாமல் போகிறார். சமீபகாலப் படங்களில் ஜெயப்பிரகாஷுக்கு ஏன் இத்தனை சிறி கேரக்டர்கள் கொடுக்கப்படுகின்றன என்பது புரியவில்லை?. இவர்களைத் தவிர்த்து விஷாலின் அண்ணாக வரும் மைம் கோபி, போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், மதுசூதனின் மச்சான்களாக நடித்திருப்பவர்கள் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைத்துமே திறமையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. கதாபாத்திர வடிவமைப்பும், நட்சத்திரங்களின் பங்களிப்பும்
2. ஒளிப்பதிவு
3. ரொமான்ஸ் + காமெடி காட்சிகள்

பலவீனம்

1. இழுவையான திரைக்கதை (குறிப்பாக இரண்டாம்பாதி)
2. இரண்டே பாடல்கள்தான்... ஆனால், அதுவும் ஏற்கெனவே கேட்ட ரகம்!

மொத்தத்தில்...

முழுமையான ஆக்ஷன் படமாக இருந்தாலும், அதில் அதிகப்படியான வன்முறை, அடிதடி, வெட்டுக்குத்து போன்றவற்றை தவிர்த்துவிட்டு, ‘இன்வெஸ்டிகேஷன்’ ஸ்டைலில் படத்தை உருவாக்கியிருப்பதற்காக ‘கதகளி’ டீமை பாராட்டலாம். ஆனால், ஒரேயொரு சின்ன சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்ப்பதற்காக ரசிகர்களை 2 மணி நேரம் உட்கார வைப்பதற்குத் தடுமாறியிருக்கிறார்கள். திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக உருவாக்கியிருந்தால், ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லர் படம் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ‘கதகளி’... விறுவிறுப்பு குறைந்த சஸ்பென்ஸ் ஆட்டம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;