தாரை தப்பட்டை - விமர்சனம்

எதிர்பார்த்த ஏமாற்றம்!

விமர்சனம் 14-Jan-2016 5:16 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Bala
Production : Company Production, B Studio
Starring : M. Sasikumar, Varalaxmi Sarathkumar
Music : Ilaiyaraaja
Cinematography : Chezhiyan
Editing : G. Sasikumar

இயக்குனர் பாலாவின் 7வது படம், பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, இயக்குனராக ஜெயித்திருக்கும் சசிகுமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம், இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ஆயிரமாவது படம் என பல சிறப்புக்களை தாங்கி வெளிவந்திருக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

கதைக்களம்

தாரை தப்பட்டை குழுவை நடத்திவரும் சசிகுமாரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார், அதே குழுவில் டான்ஸ் ஆடும் வரலட்சுமி. சசிகுமாருக்கும் வரலட்சுமி மேல் காதல் இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார். இந்நிலையில், வரலட்சுமியை 6 மாத காலமாக காதலிப்பதாகக்கூறி, அவரின் அம்மாவிடம் வந்து பெண் கேட்கிறார், கலெக்டரிடம் டிரைவராக வேலை பார்ப்பதாகக் கூறும் ஆர்.கே.சுரேஷ். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென நினைத்து, சசிகுமாரை விட்டுக்கொடுக்கச் சொல்லி அவரிடம் மன்றாடுகிறார் வரலட்சுமியின் அம்மா. வேறு வழியில்லாமல் சசிகுமாரும் வரலட்சுமியை வெறுப்பதுபோல் விரட்டியடித்து, ஆர்.கே.சுரேஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரலட்சுமியிடம் சத்தியமும் வாங்குகிறார். வரலட்சுமிக்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவரையுமே எங்கு தேடியும் கிடைக்காததால், சசிகுமாரிடம் வந்து விஷயத்தை சொல்கிறார் வரலட்சுமியின் அம்மா. வரலட்சுமிக்கு என்ன ஆனது? சசிகுமார் என்ன செய்தார் என்பதை தனது வழக்கமான பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் பாலா.

படம் பற்றிய அலசல்

படம் ஆரம்பித்து 1 மணி நேரமாகியும், இப்படம் எதை நோக்கி நகர்கிறது, இப்படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியாமல் குழப்பமே எஞ்சுகிறது. இடைவேளைக்குப் பிறகாவது அந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று பார்த்தால், படத்தின் கடைசி அரைமணி நேரம் மட்டுமே சொல்ல வந்த கதையை சொல்லி முடிக்கிறது. அதோடு இப்படத்தின் கதையில் தாரை, தப்பட்டை அடித்தும், நடனமாடியும் வாழ்க்கை நடத்தி வரும் நாட்டுப்புறக் கலைஞர்களை முன்னிறுத்துவதற்கு என்ன காரணம் என்பது இயக்குனர் பாலாவுக்கே வெளிச்சம்.

ஆபாசமாகப் பேசுவது, எதற்கெடுத்தாலும் குடித்துக்கொண்டே இருப்பது, இல்லையென்றால் யாருக்காவது பெரும் துன்பம் நேர்வது, எதாவது ஒரு கதாபாத்திரம் கொடூரமாக தாக்கப்பட்டுக்கொண்டே இருப்பது என தனது முந்தைய படங்களிலிருந்து கொஞ்சமும் வெளிவரவில்லை இயக்குனர் பாலா. இப்படத்தின் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்பதை படம் பார்க்காதவர்கள்கூட சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு ‘டெம்ப்ளேட்’டாக உருவாக்கியிருக்கிறார் பாலா. ராஜாவின் இசை, நடிகர்களின் கடின உழைப்பு என அத்தனையையும் வீணடித்தது போன்ற ஒரு உணர்வே படம் முடிந்து வெளியே வரும்போது நமக்கு ஏற்படுகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

பாலா படத்திற்கு முன்பு, பாலா படத்திற்கு பின்பு என நடிகர்களிடம் இரண்டுவிதமான மாற்றங்களைக் காணலாம். ஆனால், சசிகுமாரைப் பொறுத்தவரை ஏற்கெனவே நாம் பார்த்த அதே சசிகுமாரே இப்படத்திலும் தெரிகிறார். க்ளைமேக்ஸில் மட்டுமே பாலாவின் நடிகராக அவர் பரிணாமம் அடைந்திருக்கிறார். நிச்சயமாக இப்படத்தில் வரலட்சுமி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை இன்னொரு நடிகை செய்வாரா என்பது சந்தேகம். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வெறித்தனமாக நாட்டுப்புற நடனம் ஆடுவது, சாராயம் குடிப்பது, தன்னிடம் தப்பாக நடக்க முயல்பவர்களை அடித்து துவம்சம் செய்வது என படத்தின் இரண்டாவது ஹீரோ என்றுகூட வரலட்சுமியை சொல்லலாம். அவரின் உழைப்புக்கு ஒரு சல்யூட். ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அதுவும் கொடூர வில்லன் கதாபாத்திரம் அவருக்கு. உண்மையிலேயே அவர்மேல் வெறுப்பு வரும் அளவுக்கு சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். மற்றபடி வழக்கம்போல் பாலாவுக்கென்றே இருக்கும் சில கதாபாத்திரங்கள் இப்படத்திலும் வந்து போகிறார்கள். அதில் சசிகுமாரின் அப்பாவாக வரும் GM குமார் கவனம் ஈர்த்திருக்கிறார்.

பலம்

1. சசிகுமார், வரலட்சுமி, ஆர்.கே.சுரேஷ் உட்பட படத்திற்காக கடின உழைப்பை கொட்டியிருக்கும் நட்சத்திரங்களின் பங்களிப்பு
2. இளையராஜாவின் இசை

பலவீனம்

1. கதையும், ‘டெம்ப்ளேட்’ காட்சிகளுடன் கூடிய திரைக்கதையும்
2. ஆபாசமான, குரூரமான காட்சிகள் படம் நெடுக இருப்பது

மொத்தத்தில்...

கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் வலியையும் மையப்படுத்தி இயக்குனர் பாலா ஒரு கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் செல்லும் அனைவருக்குமே இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தரும். ஏனென்றால், இப்படம் சொல்ல வரும் விஷயத்திற்கும், கரகாட்டக்காரர்களின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடிய ஒரு கதையை, நாட்டுப்புறக் கலைஞர்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவே. மொத்தத்தில்... இப்படத்தில் வரும் இசை, நடனங்களை வேண்டுமானால் கொண்டாடலாம்.

ஒரு வரி பஞ்ச் : எதிர்பார்த்த ஏமாற்றம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;