ரஜினி முருகன் - விமர்சனம்

நம்பி வரலாம்... சந்தோஷமாகப் போகலாம்!

விமர்சனம் 14-Jan-2016 12:40 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ponram
Production : Thirrupathi Brothers
Starring : Sivakarthikeyan, Keerthy Suresh, Samuthirakani, Rajkiran, Soori
Music : D. Imman
Cinematography : Balasubramaniem
Editing : Vivek Harshan

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘ரஜினி முருகன்’. சில பல ரிலீஸ் பிரச்சனைக்களுக்குப் பிறகு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரையரங்குகளில் களம் இறங்கியிருக்கிறார் ரஜினி முருகன். படம் எப்படி?

கதைக்களம்

பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்து வெளிநாட்டில் செட்டில் செய்யவிட்டு, தன் சொந்த ஊரான மதுரையிலேயே தனிமையில் வாழ்கிறார் ராஜ்கிரண். உள்ளூரில் ராஜ்கிரணை கவனித்துக் கொள்ளும் ஒரே ஆத்மா பேரன் சிவகார்த்திகேயன் மட்டுமே. வேலைவெட்டிக்கு எதுவும் செல்லாமல் சிவகார்த்திகேயன் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதால், சிறு வயதிலேயே அவருக்கு பேசி முடிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் அவரது அப்பா. இதனால், தான் குடியிருக்கும் பாரம்பரிய வீட்டை விற்று, அதில் சிவகார்த்திகேயனின் பங்கை அவருக்குக் கொடுத்து அவரை செட்டில் செய்ய திட்டமிடுகிறார் ராஜ்கிரண். அதேநேரம் சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட சிறு மோதல் காரணமாக, ராஜ்கிரணுக்கு நானும் ஒரு பேரன் எனச் சொல்லி சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்ய வருகிறார் வில்லன் சமுத்திரக்கனி.

இந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு, கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் கரம் பிடிக்கிறாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு.

படம் பற்றிய அலசல்

படத்தின் முதல் 20 நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும், சிவகார்த்திகேயன் - சூரியின் காமெடிகள் சூடு பிடிக்கத் தொடங்கியதும் படம் வேகமெடுக்கிறது. முதல்பாதி முழுக்க கீர்த்தி சுரேஷை காதலிக்க வைப்பதற்காக சிவகார்த்திகேயன் போடும் திட்டங்களும், அதுசம்பந்தப்பட்ட சூரியின் காமெடிகளும் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. ஒரு ரொமான்ஸ் காட்சி, ஒரு காமெடி, ஒரு பாடல், ஒரு சின்ன மோதல் என பழைய சினிமா ஃபார்முலாவில் இயக்குனர் பொன்ராம் இப்படத்தை இயக்கியிருந்தாலும் போரடிக்கமாலேயே செல்கிறது. அந்தளவுக்கு சிவா, சூரியின் காமெடிகள் பெரிய அளவில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

இடைவேளைக்கு சற்று முன்புதான் படம் கதைக்குள்ளேயே செல்கிறது. இரண்டாம்பாதியையும் சீரியஸாக உருவாக்காமல் அதையும் முழுக்க முழுக்க காமெடியாகவே உருவாக்கியிருக்கிறார். அதோடு க்ளைமேக்ஸில் ஒரு சின்ன சர்ப்ரைஸையும் வைத்து படத்தை சுவாரஸ்யமாக முடித்திருக்கிறார் பொன்ராம். இரண்டாம்பாதியில் 3 பாடல்களை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை.

நடிகர்களின் பங்களிப்பு

‘போஸ் பாண்டி’யை அப்படியே கண்முன் பிரதிபலித்திருக்கிறார் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனும். அதே நக்கல், நையாண்டி, லந்து என புகுந்து விளையாடியிருக்கிறார். ரொமான்ஸ், டான்ஸ், ஃபைட் என் எல்லா ஏரியாக்களையும் ஒரு கை பார்த்திருக்கிறார் சிவா. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிவா இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகான மதுரைப் பெண்ணாகவே வலம் வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கிளாமர் இல்லாத அவருடைய அழகு ரசிகர்களை வெகுவாக வசீகரிக்கிறது. ஹீரோவின் நண்பன் ‘தோத்ததிரி’யாக பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் சூரி. கிராமத்துக்கதை, அதுவும் மதுரை மண்ணில் நடக்கும் படம் என்பதால் சூரியின் காமெடிகள் பெரிய அளவில் எடுபட்டுள்ளது. தாத்தா ராஜ்கிரண் சீரியஸ் தாத்தாவாக இல்லாமல் சிரிக்க வைக்கும் தாத்தாவாக அசத்தியிருக்கிறார். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பழைய ராஜ்கிரணின் அதே வீரம். சமீபத்தில் பல படங்களில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தாலும், இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் ‘ஏழரை மூக்கன்’ கேரக்டர் அவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கிக் கொடுக்கும். இரண்டாம்பாதி முழுக்க சமுத்திரகனியின் ஆட்டம்தான். மற்றபடி படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக கீர்த்தி சுரேஷின் அப்பாவாக வரும் ரஜினி ரசிகர் கவனம் பெறுகிறார்.

பலம்

1. சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் காமெடிக் காட்சிகள்
2. பழைய ஃபார்முலாவாக இருந்தாலும், அதில் சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்கி முழுப்படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் பொன்ராமின் இயக்கம்.
3. பாலசுப்பிரமணியெம்மின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு

பலவீனம்

1. படத்தின் முதல் 20 நிமிடங்கள்
2. இரண்டாம்பாதியில் அதிகப்படியான பாடல்களை சேர்த்திருப்பது

மொத்தத்தில்...

படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும், ‘ரஜினிமுருகன் அப்படியே வருத்தப்படாத வாலிபர் சங்கம் போலவே இருக்கிறதே’ என குறைபட்டார்கள். அது உண்மைதான். அதே ஃபார்முலாவில் இப்படத்தையும் உருவாக்கியிருந்தாலும், கதை, காட்சிகளில் புதுமையைப் புகுத்தியிருப்பதால் படம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. குறிப்பாக குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் படத்தை விழாக்கால ஆட்டம், பாட்டங்களுடன் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. சிவகார்த்திகேயனின் கேரியரில் இப்படம் வசூல் சாதனையும் படைக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : நம்பி வரலாம்... சந்தோஷமாகப் போகலாம்!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரஜினிமுருகன் - டீசர்


;