இறுதிச்சுற்று - இசை விமர்சனம்

இறுதிச்சுற்று - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 4-Jan-2016 1:57 PM IST Chandru கருத்துக்கள்

2012ல் வெளிவந்த ‘வேட்டை’ படத்திற்குப் பிறகு மாதவன் மீண்டும் தமிழில் நடிக்கும் படம் ‘இறுதிச்சுற்று’. மணிரத்னத்தின் ‘குரு’வில் அசோஷியேட் இயக்குனராகப் பணியாற்றிய சுதா கோங்கரா இப்படத்தை இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்கின்றன?

வா மச்சானே...
பாடியவர் : ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : முத்தமிழ்


மெல்லிய கிடார் இசையுடன் துவங்கும் இப்பாடலில் இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்து, பாடல் வரிகள் தெளிவாக கேட்கும்படியான இசையை வழங்கியுள்ளார் சந்தோஷ் நாராயணன். எம்.எஸ்.வி.யின் அந்தக்கால பாடல்போல ஆரம்பித்தாலும், போகப்போக தனது வழக்கமான ஸ்டைலுக்குத்தாவி ரசிக்க வைத்திருக்கிறார். ஷான் ரோல்டனின் வித்தியாசமான குரல் இப்பாடலுக்கு பெரிய பலம்.

ஏய் சண்டக்காரா...
பாடியவர் : தீ
பாடலாசிரியர் : விவேக்


பாடல் ஒலிக்கத் துவங்கியதும், ‘ரோமியோ ஜூலியட்’டின் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ பாடலைக் கேட்பது போன்று ஒருகணம் தோன்றும். அதற்குக் காரணம்... ‘ஏய் சண்டக்காரா’ பாடலைப் பாடியிருக்கும் ‘தீ’யின் குரல், கிட்டத்தட்ட வைக்கம் விஜயலட்சுமியின் குரலை ஒத்திருப்பதுதான். இந்த தீ வேறு யாருமல்ல... இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள்தான். ‘குத்துச்சண்ட நிப்பாட்டு... இத்தோடு போதும்! முத்தச்சண்ட என்னோட நீ போட வேணும்...’ என கதைக்களத்திற்கேற்றாற்போல ரொமான்ஸ் வரிகளைக் கொடுத்திருக்கிறார் விவேக்.

மாய விசை...
பாடியவர் : விஜய்நரேன், ஸ்ரீ ஷ்யாமளாங்கன், சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : விவேக்


‘இறுதிச்சுற்று’ திரைப்படம் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் ஆல்பத்தின் பெரும்பாலான பாடல்கள் உந்துசக்திப்பாடலாகவே இருக்கிறது. உற்சாகமூட்டும் எழுச்சிப்பாடலான இந்த ‘மாய விசை’க்காக அதிரடிக்கும் இசையை ஒலிக்கவிட்டிருக்கிறார் சந்தோஷ். விஜய்நரேன், ஸ்ரீஷ்யாமளாங்கன் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கோரஸாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். இசைக்கு இணையாக பாடல் வரிகளும் உற்சாகமூட்டுவதாய் அமைந்திருக்கின்றன.

உசுரு நரம்புல நீ...
பாடியவர் : தீ
பாடலாசிரியர் : விவேக்


பாடகி தீயின் குரலில் ஒலிக்கும் இன்னொரு உணர்ச்சிகரமான மெலடி இந்த ‘உசுரு நரம்புல நீ...’. ரொம்பவும் எளிமையான ட்யூனில் மனதை மயக்குகிறார் சந்தோஷ். விவேகாவின் வரிகள் மார்கழி மாதக் குளிராய் காதுக்குள் இறங்குகிறது. ஹிட் ரகம்!

போடா போடா...
பாடியவர் : பிரதீப்குமார்
பாடலாசிரியர் : விவேக்


இதுவும் ஒரு எழுச்சிப்பாடல்தான். எனக்குள் ஒருவனின் ‘பூ அவிழும் பொழுதில்...’, மெட்ராஸின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா...’ போன்ற ஹிட் பாடல்களைப் பாடிய பிரதீப்குமாரின் ‘ஹைபிட்ச்’ வாய்ஸில் ஒலிக்கிறது இந்த ‘போடா போடா...’. அர்த்தமுள்ள வரிகள் மூலம் பாடலை அழகாக்கியிருக்கிறார் விவேக். விஷுவல்களுடன் இன்னும் அதிக சுவாரஸ்யம் தரலாம் இப்பாடல்.

தனக்கென ஒரு தனி ஸ்டைல் வைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடலைக் கேட்டவுடன் இது அவர் இசையமைத்த பாடல்தான் என எளிதில் யூகித்துவிடலாம். அந்த தனித்துவமே அவரின் பலம். இந்த ‘இறுதிச்சுற்று’ ஆல்பத்திலும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அனைத்துப்பாடல்களுமே கதையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், படக்காட்சிகளுடன் பார்க்கும்போது பாடல்கள் பெரிய அளவில் கவனம் பெறும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறுதிச்சுற்று - வா மச்சானே வீடியோ சாங்


;