2015ன் ‘டாப் 10’ சூப்பர் ஹிட் பாடல்கள்!

2015ன் ‘டாப் 10’ சூப்பர் ஹிட் பாடல்கள்!

கட்டுரை 2-Jan-2016 3:17 PM IST Top 10 கருத்துக்கள்

பாடல்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் குறைந்துகொண்டே வருகிறது. படத்தில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், ஐ ட்யூன்ஸ், சிடி விற்பனை, எஃப்.எம். ஒலிபரப்பு போன்றவற்றை மனதில் வைத்து தொடர்ந்து பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. பாடல்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் எஃப்.எம். ரேடியோக்கள் தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மை பங்கு வகிக்கின்றன. அதோடு யு டியூப்பிலும் பாடல்களைக் கேட்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மனதில் கொண்டு, அனைத்து வகையான தொழில்நுட்பங்களிலும் அதிக அளவில் ரசிகர்களால் கேட்கப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட, பகிரப்பட்ட, தொலைக்காட்சிகளில் இடம்பிடித்த பாடல்களின் பட்டியலிலிருந்து நாங்கள் தேர்வு செய்திருக்கும் ‘டாப் 10’ சூப்பர் ஹிட் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. (இதில் சில பாடல்கள் கடந்த ஆண்டு வெளியாகி, படம் இந்த ஆண்டு வெளியாகியிருப்பதால்... 2014 பட்டியலிலும் ஒரு சில பாடல்கள் இடம் பிடித்திருக்கலாம்)

1. மெர்சலாயிட்டேன்... (ஐ)ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடும் பாடல் என்றதுமே ‘மெர்சலாகி’ப்போனார்கள் ரசிகர்கள். சென்னை லோக்கல் பாஷை வார்த்தைகளைப் போட்டு உருவாக்கியிருந்த இந்தப்பாடல் கடந்த ஆண்டு மட்டுமல்லாமல், இந்த ஆண்டும் அதிக அளவில் ஒலித்த பாடலாக இடம்பிடித்திருக்கிறது. அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே இப்பாடலை சிலர் யு டியூப்பில் பதிவேற்றம் செய்துவிட்டனர். அப்போதே இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

2. உனக்கென்ன வேணும்... (என்னை அறிந்தால்)கௌதம் மேனன் படங்களில் இதுபோன்ற சூப்பர் மெலடி இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்திய அஜித் படங்களைப் பொறுத்தவரை ‘உனக்கென்ன வேணும் சொல்லு....’ உண்மையிலேயே புதிய அனுபவம்தான். கௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி அமைத்த ஹாரிஸ், தங்கள் கூட்டணி பலத்தை முழுமையாக நிரூபித்த ஆல்பம் ‘என்னை அறிந்தால்’. அதிலும் குறிப்பாக இப்பாடலின் வரிகளும், ஒளிப்பதிவும் கூடுதல் கவனம் பெற்றது.

3. டாங்காமாரி (அனேகன்)மன்மத ராசா, ஒய் திஸ் கொலவெறி வரிசையில் அதிரிபுதிரி ஹிட் ஆன பாடல்தான் ‘டாங்காமாரி’. மெலடி மன்னரான ஹாரிஸிடமிருந்து இப்படி ஒரு கானா குத்துப்பாடல் கிடைக்கும் என எந்த ரசிகருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்பாடலிலும் மெட்ராஸ் பாஷை வார்த்தைகள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ‘அனேகன்’ படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்ததற்கு இப்பாடலும் ஒரு முக்கியக் காரணம்.

4. அடி கருப்பு நிறத்தழகி... (கொம்பன்)ஜி.வி.யின் கேரியரில் முழுக்க முழுக்க கிராமத்துப் படத்திற்கு இசையமைத்தது ரொம்பவே குறைவு. அந்தக் குறையை ‘கொம்பன்’ மூலம் பூர்த்தி செய்துகொண்டார் ஜி.வி. முத்தையாவின் இயக்கத்தில், கார்த்தி, லக்ஷ்மிமேனன், ராஜ்கிரண் நடித்த கொம்பன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ‘ஆல் ஏரியா’ ஹிட் ரகத்தைச் சேர்ந்தது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் பெரிய வெற்றியைப் பெற்றது.

5. மென்ட்டல் மனதில்... (ஓ காதல் கண்மணி)20 வருடங்களுக்கு முந்தைய ரஹ்மானிடமிருந்து எப்படிப்பட்ட துள்ளலான ட்யூன்கள் வெளிவந்ததோ, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் அவரின் சக்சஸ் ஃபார்முலா. அதிலும் மணிரத்னம் படம் என்றால் சொல்லவே வேண்டாம்... ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்துவிடும். இந்த ‘ஓ காதல் கண்மணி’யும் அப்படியொரு ஆல்பமே. அதிலும் குறிப்பாக இந்த ‘மென்ட்டல் மனதில்...’ பாடல் யூத்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஐட்யூன்ஸ் தரவிறக்கத்திலும் சாதனை படைத்தது.

6. டண்டணக்கா... (ரோமியோ ஜூலியட்)‘டாங்காமாரி’யைப் போல சிங்கிள் ட்ராக் மேக்கிங் வீடியோவாக வெளிவந்து சூப்பர்ஹிட்டான இப்பாடலில் ‘டண்டணக்கா...’ என்ற வரிகளே செம ஹிட். இமான் இசையமைக்க, ராகேஷ் வரிகளை எழுத, அதை அதிரடியாகப் பாடி அசத்தியிருந்தார் அனிருத். அனைத்து ரசிகர்களையும் ஆட்டம்போட வைத்த இந்தப்பாடல் குழந்தைகளிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்தது இந்தப் பாடல்தான்.

7. டானு டானு (மாரி)தர லோக்கல் ஆல்பத்தில் இப்படியொரு சூப்பர் ரொமான்டிக் பாடல் அமைந்திருந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட். ‘மாரி’ ஆல்பத்தின் மற்ற பாடல்கள் அனைத்தையும் அதிரடி இசையில் உருவாக்கியிருந்த அனிருத் ‘டானு டானு...’விற்காக மனதை மயக்கும் வெஸ்டர்ன் ட்யூனை போட்டிருந்தார். இப்பாடல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் அதிக அளவில் இடம் பிடித்தது கூடுதல் சிறப்பு.

8. அடி ஏன்டி.... (புலி)விஜய் பட ஆல்பங்களில் அவர் பாடும் பாடல் எப்போது ஹிட் ரகம்தான். அவருக்காகவே ஸ்பெஷலாக ட்யூன் உருவாக்கியிருப்பார்கள் இசைப்பாளர்கள். ‘புலி’ படத்திலும் விஜய்க்காக ஒரு சூப்பர் மெலடியை உருவாக்கியிருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். விஜய்யுடன் இணைந்து இப்பாடலை படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனும் பாடியிருந்தது கூடுதல் சிறப்பு.

9. தங்கமே... (நானும் ரௌடிதான்)இதுவும் ‘சிங்கிள் டிராக்’காக வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன பாடல். அனிருத் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடல் விஷுவலாக பார்த்தபிறகு இன்னும் அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக யு டியூப்பில் வீடியோ பாடலாக லட்சக்கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

10. ஆலுமா டோலுமா... (வேதாளம்)டாங்கா மாரி, டண்டணக்கா வரிசையில் அட்டகாச வெற்றியைப் பெற்ற அதிரடி குத்துப்பாடல்தான் ‘ஆலுமா டோலுமா’. இப்பாடலிலும் வடசென்னை வார்த்தைகள் புகுந்து விளையாடியிருந்தன. அஜித்திற்கு அனிருத்தின் வாய்ஸ் என்பதே ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. திரையரங்களில் மொத்த ரசிகர்களையும் ஆட வைத்தது ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற இந்த ‘ஆலுமா... டோலுமா...’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;