2015ன் ‘டாப் 10’ சிறந்த படங்கள்!

2015ன் ‘டாப் 10’ சிறந்த படங்கள்!

கட்டுரை 2-Jan-2016 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

பாக்ஸ் ஆபீஸ் என்பதைத் தாண்டி விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும், திரையுலக பிரபலங்களிடமும் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற படங்கள் என்பது தனிப்பட்டியல். அந்த பட்டியலிலிருந்து சிறந்த 10 படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். ரிலீஸ் தேதி அடிப்படையில் அவற்றை இங்கே கீழே வரிசைப்படுத்தியிருக்கிறோம்.

1. ராஜதந்திரம் (மார்ச் 13)

சன்லேன்ட் சினிமாஸ், ஒயிட் பக்கெட் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஏ.ஜி.அமித் இயக்கி, வீரா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ராஜதந்திரம். சூது கவ்வும், சதுரங்க வேட்டை வழியில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பின் மூலம் படம் பார்த்த ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் அள்ளியது இத்திரைப்படம்.ஆனால், அதிகம் பிரபலமாகாத நட்சத்திரங்கள் நடித்திருந்ததும், பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படாததாலும் இப்படம் வசூலில் பெரிதாக சாதிக்கவில்லை. இருந்தபோதிலும், 2015ன் சிறந்த படங்கள் என பெரும்பாலானோர் இப்படத்தை டிக் செய்திருக்கின்றனர் என்பதே உண்மை.

2. 36 வயதினிலே (மே 15)சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் முதல் படைப்பு, ஜோதிகாவின் ‘ரீ என்ட்ரி’ படம், மலையாள வெற்றிப்படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’வின் ரீமேக் என்பன போன்ற காரணங்களால் ‘36 வயதினிலே’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அதை படமும் ஏமாற்றவில்லை என்பதே நிதர்சனம். மாடித்தோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு எந்தவித முகம் சுழிக்கும் காட்சிகளும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும்படியான ‘குடும்பச்சித்திரமா’க உருவாக்கப்பட்டிருந்ததும் ‘36 வயதினிலே’ படத்திற்கு பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது. பட்ஜெட்டை ஒப்பிடுகையில் லாபம் சம்பாதித்த படமாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு.

3. காக்கா முட்டை (ஜூன் 5)2015ல் வெளிவந்த படங்களில் அனைவரும் ஏற்றுக்கொண்ட சிறந்த படம் என்றால் அது சந்தேகமேயில்லாமல் ‘காக்கா முட்டை’தான். தேசிய விருது வென்ற படம் என்பதால் மட்டுமே கிடைத்த கௌரவம் அல்ல இது.... வெகுஜன ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்ததுதான் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். பீட்சா சாப்பிட ஆசைப்படும் சேரியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து மணிகண்டன் இயக்கிய இப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தார்கள். பலதரப்பட்ட விருதுகளை குவித்ததோடு, பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

4. இன்று நேற்று நாளை (ஜூன் 26)ஹாலிவுட் படங்களில் நாம் அதிகம் வாய்பிளந்து ரசித்த ‘டைம் டிராவல்’ கான்செப்ட்டை தைரியமாக கையில் எடுத்ததுதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். லாஜிக் சிக்கல்கள் அதிகம் நிறைந்த இந்த கான்செப்ட்டை நம்மூர் ரசிகனுக்கு எப்படிச் சொன்னால் எளிதாகப் புரியும் என்பதை யூகித்து, அதற்கேற்றார்போல ஒரு திரைக்கதை அமைத்து, அதனை ஜனரஞ்சகமாக படமாக்கியிருந்தார்கள். காமெடி, ரொமான்ஸ், பாடல்கள், ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட் என சுவாரஸ்யமாக இப்படத்தை உருவாக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ஆர்.ரவிக்குமார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படத்தில் விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணகாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

5. பாபநாசம் (ஜூலை 3)‘திருசியம்’ மோகன் லாலா..? ‘பாபநாசம்’ கமலா..? யார் நடிப்பில் சிறந்தவர்கள் என சமூக வலைதளங்களில் பெரிய பட்டிமன்றமே நடந்தது ‘பாபநாசம்’ வெளியான பிறகு. அந்த அளவுக்கு இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதை நிரூபித்திருந்தன. இத்தனைக்கும் ‘திருசியம்’ படம் சென்னையிலேயே 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அப்படியிருந்தும் ‘பாபநாசம்’ படத்திற்கு கொஞ்சம்கூட வரவேற்பு குறையவில்லை. அதற்கு முதல் முக்கிய காரணம் உலகநாயகன். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார் கமல். குறிப்பாக க்ளைமேக்ஸில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது. மலையாளத்தைப் போலவே தமிழிலும் இப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப்.

6. பாகுபலி (ஜூலை 10)தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ஒரு இயக்குனருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, தன் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்வதில்தான் இருக்கிறது. அதிலும் ‘பாகுபலி’க்கு இருந்த எதிர்பார்ப்பு என்பது எப்படிப்பட்டது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு படத்தை எந்த ஏமாற்றமும் இல்லாமல் உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதுவரை கண்டிராத போர்க்காட்சிகளை ரசிகர்களின் முன்னால் திரையரங்கில் நிகழ்த்திக் காட்டியது ‘பாகுபலி’யின் மிகப்பெரிய சக்சஸாக அமைந்தது. வசூலை மட்டுமின்றி ரசிகர்களின் நெஞ்சங்களையும், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது இப்படம்.

7. தனி ஒருவன் (ஆகஸ்ட் - 28)பாக்ஸ் ஆபிஸிலும் ஜெயித்து, விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை வாங்கி, ரசிகர்களிடத்திலும் பெரிய வரவேற்பைப் பெற்ற படம்தான் ‘தனி ஒருவன்’. மோகன் ராஜா இயக்கி, அவரது சகோதரர் ஜெயம் ரவி நாயகனாக நடித்த இப்படத்தில் அர்விந்த் சாமி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அர்விந்த் சாமி ஏற்றிருந்த ‘சித்தார்த் அபிமன்யூ’ கேரக்டர் இப்படத்தின் வெற்றிக்கான காரணங்களில் முக்கியமாக பேசப்பட்டது. அதோடு ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்ததும் படத்தின் பலம். விறுவிறுப்பான திரைக்கதை, பரபரப்பான காட்சியமைப்புகள், கவனத்தை ஈர்த்த வசனங்கள், யதார்த்தமான நடிப்பு என இப்படம் அனைத்துத்தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

8. மாயா (செப் - 17)பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு பேய்ப்படமாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ‘மாயா’. தேவையில்லாத காமெடிகள், வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், ரத்தம் தெறிக்கும் கோரக்காட்சிகள் இல்லாமலும் ஒரு ஹாரர் படத்தை எடுக்கலாம் என அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இப்படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினார். குறிப்பாக இப்படத்தின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பு ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவான இப்படத்திற்கு ரான் யோஹானின் இசை, சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, சிங் சினிமாவின் ஒலி வடிவமைப்பு பக்கபலமாக அமைந்திருந்தது. ஒற்றை ஆளாக படத்தை தாங்கி நின்று நடிப்பில் அசத்தியிருந்தார் நயன்தாரா. தமிழ்சினிமா பேய்ப்படங்களின் நீண்ட நெடும் பட்டியலில் ‘மாயா’வுக்கு தனித்துவமான இடம் நிச்சயம் உண்டு.

9. குற்றம் கடிதல் (செப் - 24)இதுவும் கதையின் நாயகனாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்து வெளிவந்த படம்தான். ‘மாஸ்டர்’ அஜய், ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பவல் நவகீதன் என முற்றிலும் புதுமுகங்கள் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரம்மா.ஜி இயக்கினார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பொரேஷன், க்ரிஸ் பிக்சர்ஸ் பேனர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. பள்ளிக்குழந்தையை தண்டிக்கும் ஆசிரியை ஒருவரின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. அதோடு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்று சாதித்தது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், தரமான படைப்பு என்ற வகையில் அனைத்து ஊடகங்களும் பாராட்டுக்களை குவித்தன.

10. பசங்க 2 (டிச - 24)2015ன் இறுதியில் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் உறுதியாக இடம்பிடித்துக் கொண்ட படம்தான் ‘பசங்க 2’. குழந்தை கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவராகிவிட்ட பாண்டிராஜின் இயக்கதில் உருவான இப்படம் நகர பள்ளிக் குழந்தைகளின் வாழ்வியலை அழகாகப் படம்பிடித்துக் காட்டியது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டும் என ஒவ்வொரு விமர்சனமும் தவறாமல் குறிப்பிட்டிருந்தது. 36 வயதினிலே படத்தைத் தொடர்ந்து, தனது 2வது படைப்பான ‘பசங்க 2’வையும் தரமாகக் கொடுத்ததில் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தனித்துவம் பெற்றுள்ளது. குடும்பம் குடும்பமாக இப்படத்திற்கு ரசிகர்கள் தற்போது படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பசங்க 2 - தம் தம் பாடல் வீடியோ


;