அழகு குட்டி செல்லம் - விமர்சனம்

பாராட்டப்பட வேண்டிய முயற்சி!

விமர்சனம் 2-Jan-2016 10:51 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Charles
Production : Mercury Net Works
Starring : Karunas, Thambi Ramayya, ‘Adukalam’ Naren, Akil, Rithvika, Kirisha,Tejaswini
Music : Ved Sankar
Cinematography : Vijay Armstrong
Editing : Praveen Bhasker

விஜய் டி.வி.யில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தயாரித்து இயக்கி வரும் ஆண்டனி தயாரித்துள்ள இந்த ‘அழகு குட்டி செல்லம்’ எப்படி?

கதைக்களம்

மூன்று பெண் குழந்தைகளை பெற்றுவிட்டு, அடுத்ததாவது ஒரு ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் கருணாஸ், சக செஸ் விளையாட்டு வீரரால் கர்ப்பம் தரித்து ஏமாற்றப்பட்ட நிலையில் தன் குழந்தையை பெற்றெடுத்தே தீருவேன் என்ற வைராக்கியத்தில் வாழும் இளம் பெண் கிரிஷா, இலங்கை இராணுவத் தாக்குதலில் தங்களது குழந்தையை பலி கொடுத்துவிட்டு மனமுடைந்து வாழும் இளம் தம்பதியர் அகில் - ரித்விகா, கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நிற்கும் நரேன் - தேஜஸ்வினி தம்பதியருக்கு இடையில் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் இளம் வயது மகன், குழந்தையை தத்தெடுப்பதில் விருப்பமில்லாமல் ஒரு குழந்தைக்காக ஏங்கும் தம்பதியர்... இப்படி 5 கதைகளை ஒருங்கிணைத்து, அனைவருக்குமான நல்ல ஒரு கிளைமேக்ஸுடன் சொல்லப்பட்டிருக்கும் ஒரு திரைக்கதை இந்த ‘அழகு குட்டி செல்லம்’.

படம் பற்றிய அலசல்

திருமணத்திற்கு முந்தைய எல்லை மீறலால் ஏற்படும் பிரச்னைகள், விவாகரத்துக்கான காரணங்கள், ஆண் குழந்தைக்கான ஏக்கம், குழந்தைக்கு ஏங்கும் நிலையிலும் தத்தெடுப்பதில் காட்டும் தயக்கம், இருந்த குழைந்தையை பறி கொடுத்ததன் வலி... இப்படி பல்வேறு பிரச்சனைகளை கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கையை, ஒரு கிறிஸ்தவ பள்ளியில் மாணவர்களின் நாடகம் ஒன்று எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையே சொல்லி உள்ளார் அறிமுக இயக்குனர் சார்லஸ். ஒவ்வொரு கிளை கதைகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்தவாறு குழப்பமில்லாமல், போரடிக்க வைக்காமல் இயக்கியிருக்கிறார் என்றாலும், முதல் பாதியில் இருந்த திரைக்கதை நேர்த்தி இரணாடவது பாதியில் ‘மிஸ்’ஸிங். கதைக்கு தேவையான இசையை வழங்கியுள்ளார் வேத் சங்கர்! விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு பணி குறிப்பிடும்படி அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கருணாஸ், ‘ஆடுகளம்’ நரேன், குழந்தைகள் அனாதை இல்லம் நடத்தும் தம்பி ராமையா, அகில், ரித்விகா, தேஜஸ்வினி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்ற நல்ல தேர்வு! அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நன்றாக நடிக்கவும் செய்துள்ளனர்.

பலம்

1. சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைக்கப்பட்டிருக்கும் கதை
2. கதாபாத்திரப்படைப்பும், அவர்களின் பங்களிப்பும்

பலவீனம்

1. பிற்பாதியில் வரும் கதைக்கு தேவையில்லாத சில காட்சிகள்
2. டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில்...

படமாக்கலில் சில குறைகள் இருந்தாலும், ‘குழந்தை’ என்ற விஷயத்தை மையமாக வைத்து சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லியிருக்கும் ‘அழகு குட்டி செல்ல’த்தை முத்தம் கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : பாராட்டப்பட வேண்டிய முயற்சி!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;