மாலை நேரத்து மயக்கம் - விமர்சனம்

‘ஏ’ ஃபிலிம் பை செல்வராகவன்!

விமர்சனம் 2-Jan-2016 10:22 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Gitanjali Selvaraghavan
Production : Beeptone Studios
Starring : Balakrishna Kola, Wamiqa Gabbi
Music : Amrit
Cinematography : Sridhar
Editing : Rukesh

தமிழ் சினிமாவிற்குள் களமிறங்கியிருக்கும் இன்னொரு பெண் இயக்குனரின் படம். அதுவும் செல்வராகவனின் குடும்பத்திலிருந்து என்றால் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். ‘ஏ’ சர்டிஃபிகேட் வாங்கியிருக்கும் இப்படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

திருமணத்திற்கு முன்பே படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்பும் காதலனுக்கு, வாமிகா மறுப்பு தெரிவிப்பதால் ‘பிரேக்அப்’ ஆகிறது. காதலை மறக்க முடியாமல் திருமணத்தையே வெறுத்து வாழும் வாமிகாவுக்கு, பெற்றோர் வற்புறுத்தலால் பாலகிருஷ்ண கோலாவுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆசையுடன் திருமணம் செய்துகொண்ட பாலகிருஷ்ணாவுடன் எந்தவித இல்லற சந்தோஷத்திலும் ஈடுபட மறுக்கிறார் வாமிகா. ஒரு சண்டைக்குப் பிறகு வாமிகாவும், பாலகிருஷ்ணாவும் ஒரே வீட்டில் பேசிக்கொள்ளாமலேயே தங்களது வாழ்க்கை நகர்த்துகிறார்கள். மெல்ல, மெல்ல பாலகிருஷ்ணாவை வாமிகா மனதளவில் நெருங்கி வரத்தொடங்கிய நேரத்தில், குடிபோதையில் வாமிகாவுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்துக்கொள்கிறார் பாலகிருஷ்ணா. இதனால் வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும் வாமிகா, விவாகரத்துக் கோருகிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

‘மௌனராகம்’ ஸ்டைல் கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்து தன்னுடைய ‘டச்’சில் செல்வராகவன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் படமே ‘மாலை நேரத்து மயக்கம்’. இயக்கம் கீதாஞ்சலி செல்வராகவனாக இருந்தாலும் படமெங்கும் செல்வராகவனே வியாபித்திருக்கிறார். ‘இரண்டு மனங்கள் ஒத்துப்போய் லயித்திருக்கும் நேரத்தில், செக்ஸ் என்பது ஒரு மேஜிக்கைப்போல் நிகழ வேண்டும். அந்த நிகழ்வை வலுக்கட்டாயமாக உருவாக்கக் கூடாது’ என்ற கருத்தையே இப்படத்தின் மூலம் சொல்ல முனைந்திருக்கிறார்கள். சிற்சில முரண்பாடான விஷயங்களும், தெளிவில்லாத கதாபாத்திர வடிவமைப்பாலும் படம் ஆங்காங்கே தொய்வடைந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் ‘போல்டாக’வே சொல்லியிருக்கிறார். ‘ஏ’ சர்டிஃபிகேட் படம்தானே என்பதற்காக தேவையில்லாத முகம் சுழிக்கும் காட்சிகள் எதையும் திணிக்காததற்காக படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.

முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் சுவாரஸ்யமாகவே செல்கிறது. அதோடு ஒரு பதைபதைப்பான சூழ்நிலையில் ‘இடைவேளை’ போடுகிறார்கள். ஆனால் இரண்டாம்பாதி நினைத்ததற்கு மாறாக நிறைய ‘க்ளிஷே’க்களுடன் நகர்ந்து, யூகித்தபடியே படத்தையும் முடித்திருக்கிறார்கள். இதனால் முதல்பாதியைப் போல இரண்டாம்பாதியில் ரசிகர்களால் படத்துடன் ஒன்ற முடியாமலேயே போகிறது. அதோடு, தேவையில்லாத ‘டாஸ்மாக்’ பாடல், நாயகன் நாயகி டான்ஸ் பாடல் என ஆங்காங்கே ‘பிரேக்’குகளையும் போடுகிறது திரைக்கதை. பின்னணி இசையிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பில், அவர் எப்படிப்பட்ட குணாதியத்தைக் கொண்டவர் என்பதில் நிறைய குழம்பியிருக்கிறார்கள். இதுபோன்ற குறைகளை தவிர்த்திருந்தால் செல்வராகவனின் ஆரம்பகால காதல் படங்களைப் பார்த்த முழுத்திருப்தி இப்படத்திலும் கிடைத்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

பாலகிருஷ்ண கோலாவிற்கும், வாமிகாவுக்கும் நடிப்பதற்கான அருமையான ‘ஸ்கோப்’புள்ள கேரக்டரை இப்படத்தில் உருவாக்கியிருக்கிறார். அவர்களும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். செல்வராகவன் படங்களின் நாயகன், நாயகி எப்படி இருப்பார்களோ அவர்களையே இவர்கள் இருவரும் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். அப்பாவி கேரக்டரில் பாலகிருஷ்ணாவும், ‘போல்டா’ன பெண்ணாக வாமிகாவும் ‘வாவ்’ போட வைத்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர வாமிகாவின் காதலனாக வரும் ஷரண், பாலகிருஷ்ணாவின் ஃபேஸ்புக் காதலியாக வரும் பார்வதி நாயர் ஆகியோருக்கும் ஒன்றிரண்டு காட்சிகள் படத்தில் உள்ளன.

பலம்

1. போல்டான விஷயத்தை சொல்ல முயன்றிருக்கும் கதை.
2. செல்வராகவன் ‘டச்’சில் ரசிக்க வைக்கும் சில காட்சிகள்
3. நாயகன், நாயகியின் நடிப்பு

பலவீனம்

1. இரண்டாம்பாதி திரைக்கதை
2. கதாபாத்திர வடிவமைப்பு
3. பின்னணி இசை

மொத்தத்தில்...

அறிமுக இயக்குனர் என்ற வகையில் செல்வராகவனின் வழிகாட்டுதல்களோடு தன் முத்திரையை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் கீதாஞ்சலி. இரண்டாம்பாதி திரைக்கதையில் புதுமையைப் புகுத்தி, கொஞ்சம் விறுவிறுப்பாக உருவாக்கியிருந்தால் நல்ல படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ‘மாலை நேரத்து மயக்கம்’.

ஒரு வரி பஞ்ச் : ‘ஏ’ ஃபிலிம் பை செல்வராகவன்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாலை நேரத்து மயக்கம் புதிய டீசர்


;