பசங்க 2 - விமர்சனம்

பெற்றோர்களுக்கு குழந்தைகள் நடத்தியிருக்கும் பாடம்!

விமர்சனம் 26-Dec-2015 10:11 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Pandiraj
Production : 2D Entertainment, Pasanga Productions
Starring : Suriya, Amala Paul, Nishesh, Vaishnavi, Aarush, Karthik Kumar, Bindu Madhavi, Ramdoss
Music : Arrol Corelli
Cinematography : Balasubramaniem

குழந்தைகளை முன்னிறுத்தி வெளிவரும் படங்கள் என்பது தமிழில் மிக அரிது. அந்த வகையில் தன் முதல் படத்திலேயே குழந்தைகள் உலகத்தை அழகாகப் படம்பிடித்து, தமிழ்த் திரையுலகில் அழுத்தமாக கால்பதித்தவர் இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ படத்தில் கிராமத்து பள்ளிப் பிள்ளைகளின் வாழ்வியலைச் சொன்ன பாண்டிராஜ், இப்போது ‘பசங்க 2’ படத்தின் மூலம் சிட்டி குட்டீஸ்களின் பிம்பங்களை பிரதிபலித்திருக்கிறார். பசங்க 2.... படமா? பாடமா?

கதைக்களம்

குட்டீஸ்கள் என்றாலே சேட்டைதான். அதிலும் சில குழந்தைகள் மற்றவர்களைவிட அதிகமாக குறும்பு செய்யும். ‘ஹைபர் ஆக்டிவிட்டீஸ்’ குழந்தைகள் என்று சொல்லப்படும் இப்படிப்பட்ட இரண்டு குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களாலும், பள்ளிகளாலும் எப்படி வெறுக்கப்பட்டு விரட்டப்படுகிறார்கள் என்பதையே இந்த ‘பசங்க 2’ பதிவு செய்திருக்கிறது. கூடவே, இதுபோன்ற குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் எனவும் சூர்யா, அமலாபால் மூலமாக இந்த சமூகத்திற்கு பாடம் நடத்தியிருக்கிறார் பாண்டிராஜ்.

படம் பற்றிய அலசல்

நல்ல கருத்துக்களைத் தாங்கிய சில படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றில் 90% படங்கள் மக்களின் கவனத்திற்கு வராமலேயே தோன்றி மறைகின்றன. இதற்கு முக்கிய காரணம், இதுபோன்ற படங்களை அதிகம் பிரபலமாகாதவர்கள் இயக்கி, நடித்திருப்பதே. அந்த வகையில், பாண்டிராஜின் இந்த ‘பசங்க 2’வை அனைவரின் பார்வைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே தன் ஸ்டார் வேல்யூவைத் துறந்து, ஒரு சாதாரண கதாபாத்திரமாக இப்படத்தில் தோன்றியிருக்கும் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே!

தமிழ் சினிமா இயக்குனர்களின் நீண்ட நெடும் பட்டியலில், இதுபோன்ற படங்களை தொடர்ந்து இயக்கி வருவதற்காகவே பாண்டிராஜுக்கு தனிப்பட்ட இடம் ஒன்று நிச்சயம் இருக்கிறது. நய்னா, கவின் என்ற இரண்டு கேரக்டர்களின் மூலம் இன்றைய சமூகம் குழந்தைகளை எப்படி கையாள்கிறது என்பதை அழகாகப் படம் பிடித்திருக்கிறார். அறிவுரை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் ஆடியன்ஸ் எழுந்து ஓடி விடுவார்கள் என்பதை அறிந்து குழந்தைகளை கவரும்படியான கார்ட்டூன் காட்சிகள், பெரியவர்களை சிரிக்க வைக்க ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸின் காமெடிகள் என படத்தில் கமர்ஷியல் மசாலாக்களையும் ஆங்காங்கே தூவியுள்ளது இயக்குனரின் சாமர்த்தியம்.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் ஹீரோக்கள்... நிஷோஷ், வைஷ்ணவிதான். குழந்தை நட்சத்திரங்களான இவர்களின் யதார்த்தமான நடிப்பு படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. படத்தில் இவர்கள் செய்யும் சேட்டைக்கும், அட்டகாசங்களுக்கும் ஆடியன்ஸிடம் ‘அப்ளாஸ்’ மழை! குறிப்பாக, க்ளைமேக்ஸில்... ‘நய்னா’ கேரக்டர் மூலம் வைஷ்ணவி சொல்லும் குருவிக் கதை மொத்த அரங்கத்தையும் கண்ணீரில் மிதக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் குட்டீஸ்! மனோதத்துவ டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யாவும், ஆசிரியை வெண்பாவாக வரும் அமலாபாலும் ‘சிறப்புத் தோற்றம்’ என்று சொல்வதைவிட சிறப்பான தோற்றம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு படத்தில் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர் இருவரும். ஒரு ‘மாஸ் ஹீரோ’ இதுபோன்ற கேரக்டர்களும் ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான விடையை தமிழ்நாடன் கேரக்டர் மூலம் பிரதிபலித்திருக்கிறார் சூர்யா. அதேபோல், கவினின் பெற்றோர்களாக வரும் ராமதாஸ் & வித்யா பிரதீப், நய்னாவின் பெற்றோர்களாக வரும் கார்த்திக்குமார் & பிந்துமாதவி ஆகியோருக்கும் படத்தில் முக்கிய வேடங்கள். எந்திரமயமான நகர வாழ்க்கையில் தங்களது பிள்ளைகளை கையாளத் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் இந்த நால்வரும்.

பலம் / பலவீனம்

எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் குறைகள் இல்லாமல் இருக்காது. ஆனால், சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களை தாங்கி வரும் இதுபோன்ற படங்களின் பலம், பலவீனங்களை அலசி ஆராய்வதைவிட அவை என்ன சொல்ல வருகின்றன என்பதே முக்கியம். ஆகவே... நோ கமென்ட்ஸ்!

மொத்தத்தில்...

நம் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு பெற்றொர்கள் எப்படி கைகொடுக்க வேண்டும் என்பதையே இந்த ‘பசங்க 2’ ஆழமாக பதிவு செய்திருக்கிறது. தவிர, இன்றைய கல்விமுறை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான மாற்ற விதையையும் தூவிச் சென்றுள்ளது சிறப்பு. ‘36 வயதினிலே’ படம் மூலம் திருமதிகளின் வெகுமதிகளைப் பெற்ற தயாரிப்பாளர் சூர்யா, ‘பசங்க 2’ மூலம் குழந்தைகளின் உள்ளத்திலும், பெற்றோர்களின் கவனத்திலும் பெரிதாக இடம் பிடித்திருக்கிறார்.

ஒரு வரி பஞ்ச் : பெற்றோர்களுக்கு குழந்தைகள் நடத்தியிருக்கும் பாடம்!

(குறிப்பு : கமர்ஷியல் ரீதியாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால், ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பசங்க 2 - தம் தம் பாடல் வீடியோ


;