பூலோகம் - விமர்சனம்

 ‘பஞ்சி’ல் பவர் குறைவு... பாடம் அதிகம்!

விமர்சனம் 24-Dec-2015 1:40 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : N. Kalyanakrishnan
Production : Aascar Film Pvt. Ltd
Starring : Jayam Ravi, Trisha, Prakash Raj, Nathan Jones, Ponvannan
Music : Srikanth Deva
Cinematography : S. R. Sathish Kumar
Editing : V. T. Vijayan

‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் கிக் பாக்ஸராக அதகளம் செய்த ஜெயம் ரவி, ‘பூலோகம்’ படத்தில் வடசென்னை பாக்ஸராக களமிறங்கியிருக்கிறார். ‘பஞ்ச்’ எப்படி?

கதைக்களம்

தன் அப்பா தற்கொலைக்குக் காரணமானவரின் மகனை பாக்ஸிங்கில் ஜெயித்து அவனை கொல்ல வேண்டும் என சிறு வயதிலிருந்தே வெறியோடு வளர்ந்து நிற்கிறார் ‘பூலோகம்’ ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் அந்த வெறியை சுவாரஸ்யமாக படம்பிடித்து, அதை தன் சேனலில் ஒளிபரப்பி பணமாக்கத் துடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்த உண்மை தெரியாமலேயே அந்த சேனல் நடத்தும் குத்துச்சண்டையில் ஜெயம் ரவி தன் எதிரியை வீழ்த்துகிறார். ஆனால், தன் எதிரி மரணப்படுகையில் வீழ்வதால் அவரது குடும்பமே நிலை குலைந்து போகிறது. இதனைக்கண்டு மனம் உடையும் ஜெயம் ரவி, பாக்ஸிங்கே வேண்டாம் என ஒதுங்க நினைக்கிறார்.

இது தெரிந்து அதிர்ச்சியடையும் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவியை மீண்டும் பாக்ஸிங்கில் களமிறங்க வைக்க சில பல தில்லு முல்லு வேலைகளில் இறங்குகிறார். இதன் பிறகு என்னென்ன களேபரங்கள் நடக்கின்றன என்பதே ‘பூலோகம்’.

படம் பற்றிய அலசல்

நம்மூரில் நடக்கும் சின்னச் சின்ன கலவரங்களில் இருந்து இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் சண்டை, விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தையுமே வியாபாரமாக்குவதற்காக எவ்வளவு பெரிய சதித்திட்டங்கள் திரைமறைவில் நடைபெறுகின்றன என்பதை தோலுரித்துக் காட்ட முயன்றிருக்கும் ‘பூலோகம்’ படக்குழுவுக்கு, எடுத்துக்கொண்ட விஷயத்திற்காக ஒரு பெரிய பாராட்டு. குறிப்பாக இதுபோன்ற விஷயங்களில் நமது தொலைக்காட்சிகள் எப்படியெல்லாம் தில்லு முல்லு வேலைகள் செய்கின்றன என்பதையே இப்படம் விலாவரியாக எடுத்துரைத்துள்ளது. இந்த முயற்சிக்கு எஸ்.பி.ஜனநாதனின் அனல்பறக்கும் வசனங்களும், ஜெயம் ரவியின் பவர்ஃபுல் பஞ்ச்களும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

வடசென்னை ஏரியாவில் இரண்டு பரம்பரைகளுக்கிடையே காலம் காலமாக நடக்கும் குத்துச்சண்டைப் போட்டியையும், அதனால் வளரும் பகையையும் டீடெயிலாக காட்ட முயன்றிருக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ அடிதடி, கலவரம், பாக்ஸிங் பயிற்சிகள் என முதல்பாதி முழுக்கவே ஆக்ஷன் பிளாக்காக மாறி, ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இரண்டாம்பாதியில் கதை சூடுபிடிக்கத் தொடங்கி சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தாலும், சிற்சில லாஜிக் விஷயங்களாலும், சுவாரஸ்யமில்லாத காட்சி அமைப்புகளாலும் படத்தின் வேகம் குறைகிறது. முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதையும் எளிதில் யூகித்துவிட முடிகின்ற அளவுக்கே அமைந்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற கேரக்டர்கள் ஜெயம் ரவிக்கு ‘லட்டு’ போல... ஏற்கெனவே எம்.குமரன், பேராண்மை, நிமிர்ந்து நில், தனி ஒருவன் என புகுந்து விளையாடியிருக்கிறார். இப்படத்திலும் ‘பூலோகம்’ பாக்ஸராகவே வாழ்ந்திருக்கிறார். உடல்மொழி, பயிற்சிகள், போட்டியில் அவரின் பங்களிப்பு என அனைத்தும் ஒரு நிஜ பாக்ஸரைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயம் ரவியின் டெடிகேஷனுக்கு ஒரு சல்யூட்! டூயட் இல்லாத, கதையில் பயணிக்கின்ற நாயகி கேரக்டர் த்ரிஷாவுக்கு, கொஞ்ச காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ‘ஐயம் பேக்’ என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் ஒரு சேனல் அதிபரை கண்முன் பிரதிபலித்திருக்கிறார் ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ். சர்வதேச குத்துச்சண்டை வீரரான நாதன் ஜேன்ஸிற்கும் இரண்டாம்பாதி முழுக்க வரும்படியான கேரக்டர். கடைசியில் ஹீரோவிடம் அடிவாங்கி திருந்திவிடுகிறார்.

பலம்

1. ஒரு நல்ல கதையை கையிலெடுத்து, அதை வடசென்னை வாசிகளின் குத்துச்சண்டையோடு சொல்ல முனைந்திருப்பது.
2. எஸ்.பி.ஜனநாதனின் சாட்டையடி வசனங்கள்.
3. ஜெயம் ரவியின் கடின உழைப்பு

பலவீனம்

1. ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதை அமைப்பும், ரசிகர்களை சோர்வடைய வைக்கும் சுவாரஸ்யமில்லாத சிற்சில காட்சிகளும்.
2. பாடல்கள், காமெடி என பொழுதுபோக்கு விஷயங்கள் அறவே இல்லாததால் ஆக்ஷன் நெடி தூக்கலாக தோன்றியிருப்பது.

மொத்தத்தில்...

ஒரு நல்ல ‘கன்டன்ட்’டை கையிலெடுத்து, அதற்காக நிறைய ‘கிரவுண்ட் ஒர்க்’ செய்து, நடிகர்களை கடுமையாக வேலை வாங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். அவருடைய குரு எஸ்.பி.ஜனநாதனின் வழிகாட்டுதலும், வசனங்களும் அதற்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளன. ஆனால், திரைக்கதை சற்று பலவீனமாக இருப்பதும், அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கின்றன. இருந்தபோதிலும், பொழுதுபோக்கு விஷயங்களைத் தாண்டி ‘இது ஒரு நல்ல கதை சொல்லியிருக்கும் படம்’ என்ற அளவில் பூலோகத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஒரு வரி பஞ்ச் : ‘பஞ்சி’ல் பவர் குறைவு... பாடம் அதிகம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ


;