தங்கமகன் - விமர்சனம்

திரைக்கதையை இன்னும் ‘புடம்’ போட்டிருக்க வேண்டும்!

விமர்சனம் 18-Dec-2015 1:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Velraj
Production : Gopuram Films & Wunderbar Films
Starring : Dhanush, Samantha, Amy Jackson
Music : Anirudh Ravichander
Cinematography : A. Kumaran
Editing : M. V. Rajesh Kumar

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றிக்கூட்டணியிடமிருந்து இன்னொரு படைப்பு. ‘தங்கமகன்’ ஜொலிக்கிறாரா?

கதைக்களம்

தனுஷும், எமி ஜாக்ஸனும் காதலிக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நாம் எப்படி வாழ வேண்டும் என எமி ஜாக்ஸன் தன் கனவுகளை தனுஷிடம் ஒருமுறை விவரிக்கிறார். அந்த உரையாடலில் அவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்படுகிறது. பின்னர் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.

அதன்பிறகு வீட்டில் பார்க்கும் பெண்ணான சமந்தாவை திருமணம் செய்து, அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் அலுவலகத்திலேயே வேலைக்கும் சேர்கிறார் தனுஷ். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென கே.எஸ்.ரவிகுமார் தற்கொலை செய்துகொள்கிறார். அதோடு, அலுவலகத்தின் முக்கிய ஃபைல் ஒன்றை திருடிவிட்டார் எனவும் அவர்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் தனுஷின் வேலையும் பறிபோகிறது.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குப் பிறகு தமிழ் சினிமா நாயகன் என்னவெல்லாம் செய்வாரோ, அதை தனுஷ் எப்படி செய்கிறார் என்பதே ‘தங்கமகன்’ படத்தின் இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

மொத்தம் இரண்டு மணி நேரம் ஓடும் ‘தங்கமகன்’ படத்தின் முதல் 45 நிமிடங்களை யூத்களை மனதில் வைத்தும், அடுத்த 45 நிமிடங்களை ஃபேமிலி ஆடியன்ஸை குறி வைத்தும், கடைசி 30 நிமிடங்களை தனுஷின் ரசிகர்களுக்காகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

ஆங்காங்கே காட்சிகளாக ‘தங்கமகன்’ படம் நம்மை ரசிக்க வைத்தாலும், ஒரு முழுப்படம் பார்த்த திருப்தியைத் தரவில்லை என்பதே உண்மை. படத்தின் திரைக்கதை அமைப்பே இதற்குக் காரணம். தவிர, தனுஷிற்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த எதிரி இக்கதையில் இல்லை. ‘மாஸ்’ காட்ட வேண்டும் என்பதற்காகவே பஞ்ச் டயலாக்கையும், ஆக்ஷன் காட்சிகளையும், அதிரடிக்கும் பின்னணி இசையையும் வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார்கள்.

அனிருத்தின் பாடல்களும் இப்படத்திற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

‘விஐபி’ ரகுவரனிடமிருந்த ஃபயர், ‘தங்கமகன்’ தமிழிடம் இல்லை என்பதே உண்மை. டான்ஸ், மாஸ், ஃபைட் போன்ற ஏரியாக்களில் தனது ரசிகர்களை இப்படத்தில் தனுஷ் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார் தனுஷ். நாயகிகள் எமி ஜாக்ஸன், சமந்தா இருவருக்குமே சரிசமமான காட்சிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். துறு துறு எமியும், ‘ஹோம்லி லுக்’ சமந்தாவும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள். அம்மா ராதிகாவுக்கும், அப்பா ரவிக்குமாருக்கும் படத்தில் பெரிய வேலையில்லை. ஆனாலும் வாழ்ந்திருக்கிறார்கள். சதீஷிற்கான காமெடிக் காட்சிகள் போதுமான அளவில் இல்லை. ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஜெயப்பிரகாஷும் படத்தில் இருக்கிறார்.

பலம்

1. தனுஷ் - எமி ஜாக்ஸன், தனுஷ் - சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள்
2. ஒளிப்பதிவு
3. சொல்ல வந்த விஷயத்தை 2 மணி நேரத்திலேயே சொல்லி முடித்திருப்பது

பலவீனம்

1. திரைக்கதை
2. அனிருத்தின் இசை
3. க்ளைமேக்ஸ்

மொத்தத்தில்...

இப்படத்தை ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாகவும் ரசிக்க முடியவில்லை... ஒரு உணர்ச்சிமிகு குடும்பப் படமாகவும் ஃபீல் பண்ண முடியவில்லை.... அல்லது ரசிகர்களுக்கான ஒரு முழுமையான ஆக்ஷன் படமாகவும் கொண்டாட முடியவில்லை. ஆனாலும் பார்க்கலாம் என்ற அளவில் ‘தங்கமகன்’ படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு வரி பஞ்ச் : திரைக்கதையை இன்னும் ‘புடம்’ போட்டிருக்க வேண்டும்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - ஹோலா அமிகோ பாடல் டீசர்


;