எந்திரன் 2 VS பாகுபலி 2

எந்திரன் 2 VS பாகுபலி 2

செய்திகள் 17-Dec-2015 10:42 AM IST Chandru கருத்துக்கள்

ஆரோக்கியமான போட்டியால் தரமான படைப்புகள் உருவாகும் என்பதற்கு மற்ற துறைகளைப்போலவே திரைத்துறையும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் என்ற பெயரை ‘எந்திரன்’ படத்திடமிருந்து தட்டிப்பறித்தது எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம். அதோடு இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது. இதன் 2ஆம் பாகம் முதல் பாகத்தைவிட அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கிறது என்ற செய்தி வெளியாகி அதன் முதல்கட்ட வேலைகள் பரப்பராக போய்க் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஷங்கர், ரஜினி கூட்டணியின் ‘எந்திரன் 2’ படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கவிருப்பதாக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானபோதே, சினிமா ரசிகர்கள் பலரும் ‘பாகுபலி 2’விற்கு சரியான போட்டியாக அமைந்தால் அது ‘எந்திரன் 2’வாகத்தான் இருக்க முடியும் என சமூகவலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். ‘எந்திரன் 2’வும் நேற்றுமுதல் அதிகாரபூர்வமாக தனது படப்பிடிப்பைத் துவங்கியது. அதோடு அதன் நட்சத்திர, தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலையும் அறிவித்தது. ‘எந்திரன் 2’விற்காக ஹாலிவுட்டிலிருந்து பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதோடு இப்படம் முழுவதையும் 3டியிலேயே படம்பிடிக்கிறார்கள். இதனால் ‘எந்திரன் 2’வின் பட்ஜெட் 500 கோடியை நிச்சயம் தாண்டும் என்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் நிச்சயம் இப்படம் ‘பாகுபலி 2’வின் பட்ஜெட்டைவிட பெரியதாகவே இருக்கும். வசூலிலும் புதிய சாதனையை படைக்கும்.

இது ஒருபுறமிருக்க, ‘எந்திரன் 2’வின் படப்பிடிப்பை ஷங்கர் நேற்று துவக்க, இன்று எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறார். யதேச்சையாகவே இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியிருந்தாலும், ரசிகர்களைப் பொறுத்தவரை இப்போதே எந்திரன் 2 vs பாகுபலி 2 என்று சொல்லத் துவங்கிவிட்டனர்.

எது எப்படியோ ஹாலிவுட் தரத்தில் இரண்டு தென்னிந்திய படைப்புகள் உருவாகவிருப்பது இந்திய சினிமாவிற்கு ஆரோக்கியமானதாகவே அமையும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;