ஈட்டி - விமர்சனம்

இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

விமர்சனம் 11-Dec-2015 2:19 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ravi Arasu
Production : Global Infotainment Pvt. Ltd
Starring : Atharvaa, Sri Divya, Jayaprakash, Aadukalam Naren
Music : G. V. Prakash Kumar
Cinematography : Saravanan Abhimanyu
Editing : Raja Mohammad

‘பரதேசி’, ‘இரும்புக்குதிரை’ பட வரிசையில் அதர்வா வித்தியாசமான முயற்சியில் களமிறங்கியிருக்கும் ‘ஈட்டி’ ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்கிற படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

தஞ்சாவூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஜெயபிரகாஷின் மகன் அதர்வா. தடகள வீரரான அதர்வா, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஜெயிக்க வேண்டும், அதன் மூலம் போலீஸ் துறையில் பெரிய பதவியை பெறலாம் என்ற கனவோடு அவருக்கு எல்லா ஊக்கமும் தருகிறார் ஜெயபிரகாஷ்! மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வென்ற அதர்வா, சென்னையில் நடக்கும் இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தனது பயிற்சியாளர் ‘ஆடுகளம்’ நரேனுடன் சென்னை வருகிறார். சென்னை வந்த இடத்தில், தான் போன் மூலம் காதலிக்கும் ஸ்ரீதிவ்யாவை முதன் முதலாக பார்க்க பைக்கில் போகிறார் அதர்வா! அந்த சமயத்தில், இளைஞர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் கள்ளநோட்டு தொழில் செய்யும் ரௌடி கும்பல் ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறார் அதர்வா! ரௌடி கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்ய, அவர்களிடமிருந்து அதர்வா தப்பித்தாரா? தடகள போட்டியில் வென்று தனது தந்தையின் கனவையும், பயிற்சியாளர் நரேனின் லட்சியத்தையும் நிறைவேற்றினாரா என்பதற்கு விடை தரும் படமே ‘ஈட்டி’.

படம் பற்றிய அல்சல்

வழக்கமான டெம்ப்ளேட் கதைதான். ஆனால் அதர்வா, ஸ்ரீதிவ்யாவின் காதல் கெமிஸ்ட்ரி, அதர்வாவுக்கு இருக்கும் வித்தியாசமான இரத்த நோய், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போலீஸாரால் ஒழித்துகட்ட முடியாத கள்ளநோட்டு (ரௌடி) கும்பலை அதர்வாவை வைத்தே ஒழித்துகட்டும் போலீஸ் ஐ.ஜி.யின் தந்திரம் இப்படி பல ட்விஸ்ட்களை வைத்து இப்படத்தை ஓரளவுக்கு ரசிக்கும்படி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ரவி அரசு. படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தந்தாலும் இடை வேளைக்கு பிறகு சூடு பிடிக்கிறது திரைக்கதை. ரௌடி கும்பல் சமந்தப்பட்ட ஆக்ஷன் போர்ஷன், அதர்வா சம்பந்தப்பட்ட விளையாட்டு காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது சரவணன் அபிமன்யூவின் கேமரா!. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. முருகதாஸ், கும்கி அஸ்வின் ஆகியோரின் காமெடி காட்சிகள் ‘போர்’ ரகம்!

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு தடகள வீரருக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மனதில் வைத்து இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் அதர்வா! அவரது சிக்ஸ் பேக் உடம்புடன் கூடிய நடிப்பு கவர்கிறது. ராங் கால் மூலம் ஜீவாவுக்கு காதலியாகும் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு வழக்கம் போலதான்! அதர்வாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், பயிற்சியாளராக வரும் நரேன், கள்ளநோட்டு கும்பல் தலைவனாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள், அண்ணனாக வரும் திருமுருகன் ஆகியோரும் கவனம் பெறும்படியான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

கேரக்டருக்காக கடின உழைப்பைக் கொட்டியிருக்கும் அதர்வா
பின்னணி இசை
ஓளிப்பதிவு

பலவீனம்

படத்தின் நீளமும், முதல்பாதி திரைக்கதையும்
பாடல்கள்
எடுபடாத காமெடி காட்சிகள்

மொத்தத்தில்...

‘இதுவும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம்’ என்பதைத் தாண்டி சிற்சில வித்தியாசங்களையும் படத்தில் புகுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவிஅரசு. ஆனால், முதல்பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் கூர்மையாகத் தீட்டியிருந்தால் ஈட்டியின் வீச்சு ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒருவரி பஞ்ச் : இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஈட்டி’ - ஒரு துளி பாடல் வீடியோ


;