144 – விமர்சனம்

சிரிப்புக்கு தடை உத்தரவு!

விமர்சனம் 28-Nov-2015 1:01 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : G. Manikandan
Production : Thirukumaran Entertainment, Abi & Abi Pictures
Starring : Shiva, Ashok Selvan, Oviya
Music : Sean Roldan
Cinematography : R. B. Gurudev
Editing : Leo John Paul

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதனை குறைந்த பட்ஜெட்டில் படமாக்கி, தமிழ் சினிமாவிற்கு புதுமுக இயக்குனர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், அபி அன்ட் அபி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘144‘ படத்தைத் தயாரித்திருக்கிறது. கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கும் சட்ட எண்ணை தலைப்பாக வைத்திருக்கும் இப்படத்திற்கு வந்த ரசிகர் கூட்டத்தின் வரவேற்பு எப்படி?

கதைக்களம்

எரிமலைக்குண்டு, பூமலைக்குண்டு என்ற இரண்டு கிராமத்திற்கிடையே ஏற்படும் பிரச்சனை காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கிராமத்தின் ஓரிடத்தில் மதுசூதனன் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கும் தங்கக்கட்டிகளை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது ‘மிர்ச்சி’ சிவா, அஷோக் செல்வன், ராம்தாஸ், ஓவியா ஆகியோரைக் கொண்ட குழு. இன்னொருபுறம்... அந்த தங்கக்கட்டிகளைத் தேடி, அதற்கு ஒரிஜினல் சொந்தக்காரரான வில்லன் உதய் மகேஷும் தன் படைகளுடன் கிளம்புகிறார்.

அந்த 2 கிராமங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனை என்ன? மதுசூதனன் தங்கக்கட்டிகளை எந்த இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்? அதனை யார் கைப்பற்றுகிறார்கள்? இந்த போராட்டத்தில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையை காமெடியாகச் சொல்லியிருக்கும் படமே 144.

படம் பற்றிய அலசல்

கிட்டத்தட்ட ‘மங்காத்தா’ டைப் கதைதான். அதில் 500 கோடி பிளாக் மணி. இதில் கடத்தல் தங்கக் கட்டிகள். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி 144 தடை உத்தரவு பிறக்கப்பட்ட ஒரு கிராமத்திற்குள் இருக்கும் தங்கக்கட்டிகளை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குள்ளாகவே படத்தின் முதல்பாதியே முடிந்துவிடுகிறது. அந்தளவுக்கு படத்தின் முதல்பாதியில் ஒவ்வொரு விஷயமாக பொறுமையாக அறிமுகப்படுத்திக் கொண்டே போகிறார்கள். இடைவேளைக்கு சிறிது நேரம் முன்பே படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. அந்த விறுவிறுப்பையும் 2ஆம் பாதியில் தக்கவைக்கவில்லை.

எழுத்தாளர் சுஜாதாவின் ‘வசந்தகால குற்றங்கள்’ நாவலின் சில பகுதிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ‘கிரெடிட்’ கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சுஜாதா நாவலில் இருக்கும் எந்த சுவாரஸ்யமும் இப்படத்தின் திரைக்கதை அமைப்பில் தென்படவே இல்லை. இது ஒரு ‘பிளாக் காமெடி’ படமாக இருப்பதால் லாஜிக் விஷயங்களையும் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். காமெடி என்று வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை சோதிக்கவே செய்கிறது. துவண்டு போகும் ரசிகர்களை அவ்வப்போது தன்னால் முடிந்தளவுக்கு சிரிக்க வைத்திருக்கும் ஒரே ஆத்மா மிர்ச்சி சிவா மட்டுமே. ஆனால் அவராலும் படத்தை முழுமையாக கரைசேர்க்க முடியவில்லை. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் ஆர்ட் டைரக்ஷன். வெல்டன் கோபி ஆனந்த்!

நடிகர்களின் பங்களிப்பு

வழக்கம்போல் தனது ‘டைமிங் காமெடி’கள் மூலம் கலகலப்பூட்டியிருக்கிறார் சிவா. ஆனால், கண்டிப்பாக அவர் உடம்பை ‘ட்ரிம்‘ செய்ய வேண்டியது அவசியம். பார்த்துக்கங்க பிரதர்! ‘தெகிடி’ ஹீரோவா இவர்... என அதிர்ச்சியளிக்கிறார் அஷோக் செல்வன். அவரின் கதாபாத்திரமும், அவரது பங்களிப்பும் ரொம்பவே சுமார் ரகம். ஓவியாவிற்காகவே படத்திற்கு வந்தவர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். நடிப்பதற்கும் பெரிய வேலையில்லை ஓவியாவுக்கு. இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணன், ஆங்காங்கே வந்து போயிருக்கிறார். வேறொன்றும் சொல்வதற்கில்லை. படத்தின் ஹீரோ, ஹீரோயின்களைவிட காமெடியன் ராம்தாஸ், வில்லன் உதய் மகேஷ், மதுசூதன், டாக்டராக வருபவர், போலீஸ் அதிகாரி ஒருவர் என மற்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கிறார்கள்.

பலம்

1. சுவாரஸ்யமான கதை
2. ஆர்ட் டைரக்ஷன்
3. மிர்ச்சி சிவாவின் ஒரு சில காமெடிகள்

பலவீனம்

1. விறுவிறுப்பில்லாத திரைக்கதை அமைப்பு
2. பெரும்பாலான காமெடிக் காட்சிகள் எடுபடாமல் போனது
3. இசை

மொத்தத்தில்...

வழக்கம்போல் இந்தமுறையும் ஒரு நல்ல கதையையே தேர்ந்தெடுத்திருக்கிறது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். ஆனால், அதனை கலகலப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு படமாக மாற்றுவதில் கோட்டைவிட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.மணிகண்டன்.

ஒரு வரி பஞ்ச் : சிரிப்புக்கு தடை உத்தரவு!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;