இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்

 திரைக்கதையின் சைஸ்தான் ‘ஜீரோ’!

விமர்சனம் 27-Nov-2015 1:11 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Prakash Kovelamudi
Production : PVP Cinema
Starring : Arya, Anushka Shetty, Sonal Chauhan
Music : M. M. Keeravani
Cinematography : Nirav Shah
Editing : Prawin Pudi

கதைக்காக ஹீரோக்கள்தான் உடம்பை ஏற்றி இறக்குவதை இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். முதல்முறையாக ஹீரோயின் அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக எடை கூட்டியிருக்கிறார். படம் வெயிட்டா?

கதைக்களம்

குண்டாக இருக்கும் அனுஷ்காவிற்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போவதால் கவலை கொள்கிறார் அவரது அம்மா ஊர்வசி. இந்நிலையில் அனுஷ்காவைப் பெண் பார்க்க வருகிறார் ஆர்யா. இருவருக்குமே அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லாததால் பரஸ்பரம் பேசிப் பிரிகிறார்கள். அதன்பின்பு ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு மலர்கிறது. நட்பு காதலாகும் நேரத்தில், ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார் அனுஷ்கா. குண்டாக இருப்பதால்தான் ஆர்யாவும் தன்னை நிராகரித்துவிட்டார் என கவலைகொள்ளும் அனுஷ்கா உடனடியாக உடம்பைக் குறைப்பதற்காக, பிரகாஷ் ராஜின் ‘சைஸ் ஜீரோ’ என்ற உடம்பு குறைக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேருகிறார். அனுஷ்கா ‘சைஸ் ஜீரோ’வில் சேரும் அதேநேரம் அவரது தோழி ஒருவருக்கு கிட்னி பெயிலியராகிறது. அதற்குக் காரணம் ‘சைஸ் ஜீரோ’வில் அந்த தோழி உட்கொண்ட பானம் ஒன்றுதான் என டாக்டர் சொன்னதால் அதிர்ச்சியடைகிறார் அனுஷ்கா மற்றும் அவரது தோழி. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைக்கும் அனுஷ்கா, ஆர்யாவுடன் சேர்ந்துகொண்டு ‘சைஸ் ஜீரோ’ நிறுவனத்தின் போலித்தனத்தை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முயலுகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரகாஷ் ராஜும் சில காரியங்களில் ஈடுபடுகிறார்.

இந்த போராட்டத்தின் முடிவில் ஜெயித்தது யார்? ‘குண்டு’ அனுஷ்காவின் காதல் என்னவானது? என்பதே ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மீதிக்கதை!

படம் பற்றிய அலசல்

இதுபோன்ற படங்களுக்கென்றே ஒரு ஃபார்முலா இருக்கும். நாயகி ஒரு பிரச்சனையில் இருப்பார்... அந்தப் பிரச்சனையால் அவருக்கு அவமானங்கள் நேரும்... பின்னர் அதிலிருந்து அந்த நாயகி மீண்டு, அனைவரும் வியக்கும் வகையில் ஜெயித்துக்காட்டுவார். இப்படித்தான் பெரும்பாலான படங்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கும். இதைப்போலவே இந்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திலும் குண்டாக இருக்கும் அனுஷ்கா, வீறுகொண்டு எழுந்து, கடுமையான பயற்சிகள் செய்து, உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார் என நாம் நினைத்ததற்கு மாறாக வேறொரு ஃபார்முலாவில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவேலமுடி. அதற்காக ஒரு சபாஷ் போடலாம்.

ஆனால் இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து மற்றவை அனைத்துமே நாம் பார்த்து சலித்துப்போன விஷயங்கள்தான். அதிலும் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் இரண்டு முக்கோண காதல்களை வேறு திரைக்கதைக்குள் நுழைத்து குழப்பியடித்திருக்கிறார்கள். நம்மூர் ரசிகர்களுக்கு இதுபோதும் என முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ, அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் நாயகனையும், நாயகியையும் ஒன்றுசேர்த்துவிட்டு ‘சுபம்’ போட்டுவிட்டார்கள்.

சொல்ல வந்த கதையை காமெடியாகவும் சொல்லாமல், சீரியஸாகவும் சொல்லாமல் ‘இரண்டும்கெட்டானாக’ திரைக்கதை அமைத்திருப்பதாலோ என்னவோ நம்மால் கதையோடு ஒன்றி பயணிக்க முடியவில்லை. க்யூட் அனுஷ்காவையும், அவரது அழகாகக் காட்டிய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவையும் தவிர்த்து இப்படத்தில் பெரிதாக பாராட்ட ஒன்றும் இல்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற முயற்சியில் துணிந்து களத்தில் குதித்த அனுஷ்காவுக்கு முதலில் ஒரு ஸ்பெஷல் பொக்கே! வலுவில்லாத திரைக்கதையால் அனுஷ்காவின் உழைப்பு ‘விழக்கிறைத்த நீராக’ வீணடிக்கப்படிருந்தாலும் அவரின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் நிச்சயம் பாராட்டலாம். சின்னச் சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் படம் முழுக்க ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ‘குண்டு’ பியூட்டி! ஆர்யாவுக்கு இப்படத்தில் இரண்டாவது இடம்தான். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சரியாகப் பொருந்தியிருக்கிறார் ஆர்யா. சந்திரபாபு ஸ்டைல் மீசையில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் ஏனோ படத்திலிருந்து தனித்து நிற்கிறார். அம்மா கேரக்டரில் ஊர்வசி என்றால் அவரின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை... அதகளம்! மற்றபடி, ஆர்யாவின் காதலியாக வரும் சோனல் சௌகான் தனது ‘சைஸ் ஜீரோ’ உடம்பால் ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வேலை அவருக்கு கொடுக்கப்படவில்லை. இது தவிர பிவிபி சினிமாஸிற்காக நாகார்ஜுனா, ராணா, ஜீவா, பாபி சிம்ஹா, தமன்னா, காஜல், லக்ஷ்மி மஞ்சு, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறார்கள்.

பலம்

1. படத்தின் ஒன்லைன்
2. அனுஷ்கா
3. நீரவ் ஷாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு

பலவீனம்

1. ரசிகர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வலுவில்லாத திரைக்கதை
2. பாடல்கள்
3. ‘தெலுங்கு டப்பிங்’ போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது

மொத்தத்தில்

எடுத்துக் கொண்ட கதையை உயிரோட்டமான காட்சியமைப்புகளுடன் கொஞ்சம் சீரியஸாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருந்தால் ‘இஞ்சி இடுப்பழகி’ வெயிட்டாக ரசிகர்கள் மனதில் புகுந்திருக்கும். ஆனால், சம்பந்தம் இல்லாத கோணங்களில் கதையை அங்கேயும் இங்கேயும் உலவ விட்டதால் முழுமையான திருப்தியை இப்படம் தரவில்லை.

ஒரு வரி பஞ்ச் : திரைக்கதையின் சைஸ்தான் ‘ஜீரோ’!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;