ஒரு நாள் இரவில் – விமர்சனம்

த்ரில் இரவு!

விமர்சனம் 21-Nov-2015 12:55 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Antony
Production : Think Big studios
Starring : SathyaRaj, Anumol, Yuhi Sethu, Varun, Deekshitha,
Music : Naveen Iyer
Cinematography : M.S.Prabhu
Editing : Antony

மலையாளத்தில் ‘ஷட்டர்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்று, அதே பெயரில் மராத்தி மொழியிலும் ரீ-மேக் ஆகி ஹிட் அடித்த கதை இப்போது தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ‘ஒரு நாள் இரவில்’ எப்படி?

கதைக்களம்

கௌரவமான குடும்பத் தலைவர் சத்யராஜ். மனைவி, இரண்டு மகள்கள் அடங்கியது இவரது குடும்பம். பள்ளியில் படிக்கும் இவரது மூத்த மகள் சக மாணவருடன் சகஜமாக பழகுவதை காதல் என்று தவறாக நினைக்கிறார் சத்யராஜ். உடனடியாக மகளின் படிப்பை நிறுத்தி விட்டு அவளுக்கு திருமணம் பேசி முடிக்கிறார். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் டென்ஷன் ஆகும் சத்யராஜ், அன்று இரவு நண்பர்களுடன் தன் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தனக்கு சொந்தமான காலியாக இருக்கும் கடையில் மது அருந்துகிறார். நண்பர்கள் சென்ற பிறகு தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர் வருணுடன் பயணமாகும் சத்யராஜ், பஸ் நிறுத்தத்தில் நிற்கும் விலைமாதுவான அனுமோலை பார்க்கிறார். குடி போதையில் இருக்கும் சத்யராஜுக்கு ‘சபலம்’ ஏற்பட, அனுமோலை அழைத்து ஹோட்டலுக்கு போனால் எங்கும் இடம் கிடைக்கவில்லை. அதனால் தன் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தனது கடைக்குள் ஐக்கியமாகி விடுகிறார்கள். கடையின் பூட்டை வெளியே பூட்டி விட்டு அனுமோலுக்கு பரோட்ட வாங்கச் செல்லும் ஆட்டோ டிரைவர் வருண் போலீஸில் சிக்கி விட, விடியதற்குள் வெளியே வரவேண்டிய சத்யராஜும் அனுமோலும் ஷட்டருக்குள் மாட்டிக்கொள்ள, அதன் பிறகு நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான சம்பவங்கள் தான் படம்!

படம் பற்றிய அலசல்!

ஒரு சின்ன கதைக் கருதான்! அதை இரண்டு மணி நேரத்திற்குள் முடிகிற மாதிரி ஒரு விறுவிறுப்பான திரைக்கதையாக்கி, படம் பார்ப்போரை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கியிருக்கிறார் ‘எடிட்டர்’ ஆன்டனி! வழக்கமாக ஒரு ரீ-மேக் படத்தை இயக்கும் இயக்குனருக்கு அப்படத்தில் அதிகம் வேலையிருக்காது! ஆனால் இப்படத்தை பொறுத்தவரையில் ஒரிஜினலை விட ரீ-மேக் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நிறைய உழைத்திருக்கிறார் ஆன்டனி! பலமாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைக்கு ஏற்ற கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகிய அம்சங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன! கதைக்குள், ஒரு படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்டு வரும் ஒரு பாடலும் அதை படமாக்கும் இயக்குனர் கௌதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இப்படத்திற்கு தேவையா என்ற கேள்வி நம் மனதில் எழுந்தாலும் அதை ரசிக்கும்படி படமாக்கியுள்ளார் ஆன்டனி. இந்த சீரியசான கதைக்கு யூகி சேது எழுதியிருக்கும் இயல்பான வசனங்களும், அவரது காமெடியும் கவனம் பெறுகின்றன. ஒரு சாதாரண ரசிகனுக்கு ஏற்ற இதர பொழுது போக்கு அம்சங்கள் படத்தில் எல்லை என்றாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை. ஒரு சபலத்தால் ஏற்படும் விளைவுகளையும், பிள்ளைகளை தவறாக நினைப்பதால் ஏற்படும் வலிகளையும் இப்படத்தின் மூலம் ஒரு படிப்பினையாக தந்துள்ளார்கள்!

நடிகர்களின் பங்களிப்பு

தான் ஒரு விலைமாதுவுடன் இருப்பதை தனது குடும்பமும், சுற்று வட்டாரத்தினரும் பார்த்து விட்டால் தனது கௌரவமும், அந்தஸ்தும் என்னவாகும் என்பதை நினைத்து பரிதவிக்கும் கேரக்டரில் சத்யராஜ் சூப்பரான நடிப்பை வழங்கியுள்ளார்! விலை மாதுவாக வரும் அனுமோல் தன் பார்வையாலேயே கவர்ச்சி விருந்து படைத்து, ஒரு விலைமாது எதில் குறியாக இருப்பார் என்பதையும் தன் அநாயாச நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லாம் இழந்து, ஒரு திரைப்பட வாய்ப்புக்காக அலையும் இயக்குனராக வரும் யூகி சேது, ஆட்டோ டிரவராக வரும் வருண், சத்யராஜின் மகளாக வரும் தீக்‌ஷிதா, சத்யராஜின் மனைவியாக வரும் கல்யாணி நடராஜன், இயக்குனர்களாக வரும் ஆர்.சுந்தர் ராஜன், கௌதம் மேனன் என அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களுக்கு தங்களது இயல்பான நடிப்பால் வலு சேர்த்துள்ளனர்.

பலம்

விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பும், இயக்கமும்
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற கலைஞர்கள் தேர்வு
பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

திணிக்கப்பட்டது போன்ற உணர்வை தரும் கௌதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள்!

மொத்தத்தில்…

மனித வாழ்க்கையில் நடக்கக் கூடிய இயல்பான சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் யதார்த்த சினிமா விரும்பிகளுக்கு பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : த்ரில் இரவு!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 தமிழ் - டிரைலர்


;