தூங்கா வனம் - விமர்சனம்

தமிழில் ஒரு ஹாலிவுட் தர முயற்சி!

விமர்சனம் 11-Nov-2015 11:35 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Rajesh M. Selva
Production : Raaj Kamal Films International & Sri Gokulam Movies
Starring : Kamal Hassan, Prakash Raj, Trisha, Kishore, Sampath
Music : Ghibran
Cinematography : Sanu John Varghese
Editing : Shan Mohammed

‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்ச் நாவலை அடிப்படையாகக் கொண்டு, கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘தூங்கா வனம்’. உலகநாயகனின் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் எப்படியிருக்கிறது?

கதைக்களம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் வேலைசெய்யும் கமலும், யூகிசேதுவும், பிரகாஷ் ராஜின் போதைப்பொருள் பார்சல் ஒன்றை ராபரி செய்கிறார்கள். தன் பொருள் தனக்கு வந்துசேர வேண்டும் என்பதற்காக, கமலின் மகனை கடத்தி வைத்து மிரட்டுகிறார் ‘தாதா’ பிரகாஷ் ராஜ். இதனால், தான் கைப்பற்றிய கொக்கெயின் பாக்கெட்டுகளை, பிரகாஷ் ராஜிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு தன் மகனை மீட்கக் கிளம்புகிறார் கமல். இன்னொருபுறம் காவல் அதிகாரிகளான கிஷோரும், த்ரிஷாவும் கமலை ரகசியமாகப் பின்தொடருகிறார்கள்.

ஒரே ஒரு இரவில் நடக்கும் இந்த சம்பவத்தில் கமல் தன் மகனை மீட்டாரா? த்ரிஷாவும், கிஷோரும் கமலை எதற்காகப் பின்தொடர்கிறார்கள் என்பதற்கான விடைதான் ‘தூங்கா வனம்’.

படம் பற்றிய அலசல்

இப்படம், பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ‘ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் ரீமேக்கோ, தழுவலோ அல்ல, இது நாவலை அடிப்படையாக வைத்து கமல் திரைக்கதை எழுதியிருக்கும் படம் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், பிரெஞ்சு மொழி படத்தைப் பார்த்துவிட்டு, தூங்கா வனம் படத்தை பார்த்தவர்களுக்கு இந்த ஸ்டேட்மென்ட் கொஞ்சம் அதிர்ச்சியளிக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட இரண்டு படங்களிலுமே ஒரே மாதிரியான காட்சியமைப்புகள்தான். ஒருவேளை சம்பந்தப்பட்ட நாவலில் இந்தக் காட்சிகள் அனைத்துமே எழுதப்பட்டிருக்கும் எனில், அதனை நாம் குறைகூற முடியாது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பிரெஞ்சு மொழிப் படம் மொத்தமே 103 நிமிடங்கள்தான் ஓடும். தூங்கா வனத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள். இந்த 20 நிமிட நீட்டிப்பினாலோ என்னவோ ‘தூங்காவனம்’ படத்தின் இரண்டாம்பாதியில் கொஞ்சம் அலுப்புத்தட்டவே செய்கிறது. தவிர, கதையும், அது நகரும் இடமும் கொஞ்சம் நமக்கு அன்னியப்பட்டே நிற்கிறது. இதனால் மல்டிப்ளக்ஸ் ஆடியன்ஸைத் தவிர்த்து, ஊர்பக்க ரசிகர்களை இப்படம் எந்தளவு கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுபோன்ற சின்னச் சின்ன குறைகளைத் தவிர்த்து, இப்படம் ஒரு ‘நீட்’டான க்ரைம் த்ரில்லர் என்பதை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதிலும், கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். கூடவே, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது உள்ளிட்டோரும் நடிப்பில் கமலுடன் கைகோர்க்க நடிப்புத்துறையில் ஜொலிக்கிறது ‘தூங்கா வனம்’. ஜிப்ரானின் மிரட்டலான பின்னணி இசையும், சனு ஜான் வர்க்கீஸின் ஒளிப்பதிவும் ரசிகர்களின் காதுகளுக்கும், கண்களுக்கும் விருந்து படைத்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

உத்தமவில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து பாசமுள்ள அப்பாவாக ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் கமல். மூன்றுமே அப்பா கேரக்டர்கள்தான் என்றாலும், அதில்தான் எத்தனை வெரைட்டி காட்டியிருக்கிறார் கமல்.... சும்மாவா... உலகநாயகன் ஆயிற்றே! கோட், சூட், சால்ட் அன்ட் பெப்பர் லுக் ஹேர் ஸ்டைல், மிடுக்கான நடை, தெளிவான வசன உச்சரிப்பு, கெத்தான லுக் என திவாகர் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் கமல். ‘நான் சொன்னா செய்வேன்...’ என கமல் சொன்னதும், சொல்லி வைத்ததுபோல் அதிர்கிறது தியேட்டர். ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் கமலைப் பார்த்தால் 60 வயது என்பதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மொத்தத்தில் கமல் ராக்ஸ்!

இப்படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருமே முக்கியமானவை. அதில் நடித்திருப்பவர்கள் அனைவருமே அந்தந்த கேரக்டருக்குத் தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். அதில் அதிகம் கவர்வது பிரகாஷ் ராஜ் மற்றும் கமலின் மகனாக நடித்திருப்பவர். தனது நக்கலான வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். த்ரிஷாவின் கேரியரில் இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி!

பலம்

1. கமல் உட்பட அனைத்து நடிகர்களின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர்களின் பங்களிப்பும்.
2. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை
3. பரபரப்பாக நகரும் படத்தின் முதல்பாதி திரைக்கதை.

பலவீனம்

1. கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தரும் இரண்டாம்பாதி.
2. ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸைத் தவிர்த்து, மற்ற ரசிகர்களுக்கு இப்படத்தின் கதைக்களம் அன்னியப்பட்டு நிற்பது.

மொத்தத்தில்...

பாடல்கள், தேவையில்லாத காமெடிகள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு ‘பக்கா’வான த்ரில்லரைத் தந்திருக்கிறது ‘தூங்கா வனம்’ டீம். அவர்களின் முயற்சியை நிச்சயம் இருநீரம் நீட்டி வரவேற்கலாம். மொத்த படமும் ஒரே இரவில், ஒரே இடத்தில் நகர்வதாலோ என்னவோ கொஞ்சம் ஆங்காங்கே அலுப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இன்னும் படத்தை ‘ஷார்ப்’பாக்கி இரண்டாம்பாதி திரைக்கதையில் பரபரப்பைக் கூட்டியிருந்தால் ‘தூங்கா வனம்’ படத்தை பெரிய அளவில் ரசித்திருக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : தமிழில் ஒரு ஹாலிவுட் தர முயற்சி!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;