சரத்குமாருடனும் இணைந்து நடிப்பேன்! - விஷால்

சரத்குமாருடனும் இணைந்து நடிப்பேன்!  - விஷால்

செய்திகள் 11-Nov-2015 9:31 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து அனவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் பத்திரைகையாளர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் பணியாற்றியமைக்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்! தொடர்ந்து அவர் பேசும்போது,

‘‘கடந்த 10 ஆண்டுகளில் இது மறக்க முடியாத ஆண்டு! மறக்க முடியாத தீபாவளி. படங்களில் நடித்து வருவதோடு, இப்போது நடிகர் சங்க பொறுப்பும் வந்திருப்பதால், ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைத்து வருகிறேன். கடந்த தீபாவளியன்று நான் நடித்த ‘பூஜை’ படம் வெளியானது. இந்த வருட தீபாவளிக்கு என் படம் இல்லை! எனது அடுத்த படம் பாண்டிராஜ் இயக்கும் ‘கதகளி’. இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். ‘கதகளி’ வித்தியாசமான த்ரில்லர் படமாக இருக்கும். இன்னும் கிளைமேக்ஸ் காட்சியின் ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ‘மருது’வில் நடிக்க இருக்கிறேன். அதனை தொடர்ந்து லிங்குசாமியின்‘சண்டக்கோழி2′ தொடங்க இருக்கிறது. நான நடித்த ‘மதகஜராஜா’ எப்போது வெளியாகும் என்று தெரியாது. அப்படம் வெளியானால் மிகவும் சந்தோஷப்படுவேன்’’ என்ற விஷால் நடிகர் சங்க கட்டிடம் குறித்து பேசும்போது,

‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட்து. அந்த பத்திரத்தை சரத் சார் கொடுத்து விட்டார். ஓரிரு ஆண்டுகளுக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

என் திருமணம் எப்போது என்றும் கேட்கிறார்கள். அடுத்த இரண்டு வருடத்துக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தான் என்னுடைய முதல் திட்டம். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன். என் திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை. என் திருமணம் நிச்சயமாக காதல் திருமணமாக தான் இருக்கும். நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதை தக்க தருணத்தில் எல்லோருக்கும் தெரிவிப்பேன்.

‘மருது’ படத்தில் ராதாரவி சாரும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளி வருகிறது. ஒரு படத்தில் யார் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது அந்த படத்தின் இயக்குனர் எடுக்கும் முடிவு! ராதாரவி சாருடன் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதைப் போல சரத்குமார் சாருடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அவர் கூட நடிப்பேன். நடிகர் சங்க தேர்தல் வேறு, சினிமாவில் நடிப்பது வேறு! இது என்னோட புரொஃபஷன்’’ என்றார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;