வேதாளம் - விமர்சனம்

அண்ணன் - தங்கை பாசத்துடன் ஒரு ஆக்ஷன் மசாலா!

விமர்சனம் 10-Nov-2015 2:18 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Siva
Production : Shri Sai Raam Creations
Starring : Ajith, Shruthi Hassan, Lakshmi menon, Rakul Dev
Music : Anirudh Ravichander
Cinematography : Vetri
Editing : Ruben

ஒரே ஒரு டீஸரை மட்டுமே வெளியிட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ‘தெறிக்கவிட்ட’ வேதாளம் படம் தற்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. அஜித் + சிவா கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எப்படி?

கதைக்களம்

தன் தங்கை லக்ஷ்மிமேனனுடன் கொல்கத்தா வந்திறங்குகிறார் ‘அப்பாவி’ அஜித். வந்த இடத்தில் டாக்ஸி டிரைவர் வேலைக்குச் சேரும் அஜித், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவனை போலீஸுக்குப் போட்டுக் கொடுக்க, வில்லனின் ஆட்கள் அஜித்தைத் தூக்குகிறார்கள். ஆனால் வில்லன் ஆட்களை அடித்துத் துவம்சம் செய்து, அப்பாவி அஜித் ‘அடேங்கப்பா அஜித்’தாக மாறி ஆச்சரியப்படுத்துகிறார். தன் ஆட்களை மட்டுமல்லாமல் தன் தம்பியையும் போட்டுத்தள்ளிய அஜித்தைத் தேடி கொல்கத்தா வருகிறார் இன்னொரு வில்லனான கபீர் சிங். அவரையும் தேடி வந்து அழிக்கிறார் அஜித். தன் இரண்டு தம்பிகளைக் கொன்றது யார் எனத் தேடி அலைகிறார் மூன்றாவது வில்லனான ராகுல் தேவ்.

அஜித்தின் பின்னணி என்ன? ராகுல் தேவ்வின் தம்பிகளை அவர் கொல்வதற்கு என்ன காரணம்? ராகுல் தேவிடம் அஜித் மாட்டினாரா? இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘வேதாளம்’ படத்தின் இரண்டாம் பாதி.

படம் பற்றிய அலசல்

ஃபிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கிட்டத்தட்ட ‘பாட்ஷா’ டைப் கதைதான். ஆனால், அஜித்தின் மாஸை கச்சிதமாக கையாண்டு ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார் சிவா. கூடவே அண்ணன் & தங்கச்சி சென்டிமென்டை அழகாக காட்சிப்படுத்தி ஃபேமிலி ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தியிருக்கிறது ‘வேதாளம்’ டீம்.

நாயகி ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சூரியின் காமெடிகளும் எடுபடாமல் போனது ‘வேதாளம்’ படத்திற்கு மைனஸ். ஆனால், அதையும் மறக்கடிக்கச் செய்கின்றன தம்பி ராமையா, லக்ஷ்மேனன் சம்பந்தப்பட்ட ஃபிளாஷ்பேக் காட்சிகள். ‘வேதாளம்’ தாதா அஜித்தின் என்ட்ரியும், ‘ஆலுமா டோலுமா’ பாடலும் ரசிகர்களை தியேட்டரில் எழுந்து நின்று ஆட வைத்திருக்கிறது. பின்னணி இசையிலும் ‘தெறி’க்கவிட்டிருக்கிறார் அனிருத். ஒளிப்பதிவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

அழகான சிரிப்புடன் அப்பாவி கணேஷாகவும், நக்கல் சிரிப்புடன் டெரர் ‘வேதாளம்’ தாதாவாகவும் இரண்டு வித்தியாசமான பரிணாமங்களைக் காட்டி ரசிகர்களுக்கு ‘டபுள் தீபாவளி விருந்து’ படைத்திருக்கிறார் அஜித். ஸ்டன்ட் சில்வாவின் உதவியுடன் சண்டைக்காட்சிகளில் வெறித்தனம் காட்டியிருக்கிறார் தல. அதோடு தங்கையின் மீது பாசம் காட்டும்போதும் அசால்டாக ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக, பெண்களைப் பற்றி அஸ்வினுடன் அஜித் பேசும் வசனம் ஒன்றிற்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ்!

ஸ்ருதிக்கு இப்படத்தில் பெரிய வேலையில்லை. அவர் வந்துபோகும் ஒருசில காட்சிகளும் போரடிக்கவே செய்கின்றன. அஜித்தின் தங்கையாக ‘தமிழ்’ கேரக்டரில் ‘டபுள் ஓகே’ வாங்கியிருக்கிறார் லக்ஷ்மிமேனன். எவ்வளவோ முயன்றும் சூரியால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. வில்லன்கள் கபீர் சிங், ராகுல் தேவ் ஆகியோருக்கு மிரட்டலான கேரக்டர்கள். இவர்களைத்தவிர படத்தில் பெரிய அளவில் கவனம் பெறுவது தம்பி ராமையா. பார்வையில்லாதவராக அவர் வரும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. இவர்களோடு அப்புக்குட்டி என்கிற சிவபாலன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோரும் வந்து போகிறார்கள்.

பலம்

1. இரண்டு வித்தியாசமான மாடுலேஷனில் ‘டபுள் மாஸ்’ காட்டியிருக்கும் அஜித்.
2. சென்டிமென்ட் காட்சிகள்.
3. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

பலவீனம்

1. கொஞ்சம் அதிகப்படியான சண்டைக்காட்சிகளுடன் கூடிய ‘டெம்ப்ளேட்’ கதை.
2. ஸ்ருதி ஹாசன், சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள்.

மொத்தத்தில்...

அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகித்துவிடக்கூடிய அளவிலான பழைய ஃபார்முலா கதையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குனர் சிவா, அந்த கதைக்கு அஜித்தை கச்சிதமாகப் பொருத்தி தல ரசிகர்கள் எதிர்பார்த்த ‘மாஸை’ காட்டியிருக்கிறார். கூடவே சென்டிமென்ட்டும் இப்படத்தில் நன்றாக வேலை செய்திருப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் ‘வேதாளம்’ படத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : அண்ணன் - தங்கை பாசத்துடன் ஒரு ஆக்ஷன் மசாலா!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;