இனி ஒரே குடும்பமாக செயல்படுவோம்! - விஷால்

இனி ஒரே குடும்பமாக செயல்படுவோம்! - விஷால்

செய்திகள் 26-Oct-2015 10:57 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நேற்று காலை சென்னையில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு உறுதுணை புரிந்தமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். அப்போது சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது,

‘‘இரண்டு அணியாக நடிகர் சங்க தேர்தலை எதிர்கொண்டோம். பாண்டவர் அணி என்ற பெயரில் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இனி ஒரே அணியாக செயல்படுவோம். இனி எங்களை யாரும் பாண்டவர் அணி என்று அழைக்க வேண்டாம். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். இனி ஒரே குடும்பமாக, ஒரே அணியாக இருந்து செயல்பட்டு தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் பற்றியோ, நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தோ இனி எதுவும் பேசப் போவதில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் ஒப்பந்தம், நடிகர் சங்க நில விவகாரம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகளை எடுக்க இருக்கிறோம்’’ என்றார் விஷால்.

தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசும்போது, "சரத்குமார் சார் எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அது இன்னும் எங்கள் நிர்வாகத்துக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் அது தொடர்பான விஷயங்கள் எங்களை வந்து சேரும். அதைப் படித்து, ஆராய்ந்து நிர்வாகம் முடிவு எடுக்கும். தேர்தலின்போது நாங்கள் அளித்த 41 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்’’ என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய பொருளாளர் கார்த்தி, ‘‘எங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குள்ளே போகிற எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்த எங்களை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு முன்னால் நிறைய சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களை செய்து முடிக்க நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள இருக்கிறோம். எங்களுடைய முதல் பணி நடிகர் சங்கத்தில் இருக்கிற அனைத்து உறுப்பினர்களின் முழு விவரங்களை சேகரிப்பது தான். ஒவ்வொரு உறுப்பினரும் யார்? அவர்களின் முகவரி என்ன? அவர்கள் எந்த மாதிரியான ஆர்டிஸ்ட்? அவர்களின் பொருளாதார நிலை என்ன? அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை? என அனைத்து உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு கடமைகளை நிறைவேற்ற இருக்கிறோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தந்தது போல் தொடர்ந்தும் உங்கள் அனைவரது ஆதரவும் தேவை’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஃபெப்சி அமைப்பினர் கலந்து கொண்டு, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;