நானும் ரௌடிதான் - விமர்சனம்

அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட்!

விமர்சனம் 21-Oct-2015 1:04 PM IST Chandru கருத்துக்கள்

Direction: Vignesh Shivan Production: Wunderbar Films Starring: Vijay Sethupathi, Nayantara Music: Anirudh Ravichander Cinematography : George C. Williams Editing: A. Sreekar Prasad சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த விஜய்சேதுபதி, தமிழ்சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. விஜய் சேதுபதி - நயன்தாரா கெமிஸ்ட்ரி, தனுஷின் தயாரிப்பு, அனிருத்தின் இசை என தனக்கு கிடைத்த பல ப்ளஸ்களை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

கதைக்களம்

‘நானும் ரௌடிதான்’ என ஏரியாவுக்குள் உதார்விட்டுத் திரிந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, காது கேட்காத பெண்ணான நயன்தாராவைப் பார்த்ததும் காதலிக்கத் தொடங்குகிறார். ஒருசில சம்பவங்களுக்குப் பிறகு, ‘எனக்கு இந்த உலகத்துலயே பிடிக்காத ஒருத்தன் இருக்கிறான்... அவனை என் கையால கொலை செய்யணும். அதை நீ நடத்திக் காட்டினா நாம ஒண்ணு சேரலாம்’ என்ற நிபந்தனையோடு நயனும் விஜய்சேதுபதியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். நயன்தாரா கொலை செய்ய வேண்டுமென கை காட்டுவது யாரை என்றால்... அடிதடி, வெட்டுக்குத்து போன்ற வேலைகளைச் செய்துவிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் பார்திபனைத்தான்!

இது ஏன்? எதற்காக? எப்படி? என்பன போன்ற சில கேள்விகளோடு, ‘காமெடி ரௌடி’ விஜய்சேதுபதி, தன் காதலிக்காக ஒரிஜினல் ரௌடி பார்த்திபனை வீழ்த்தினாரா இல்லையா என்பதே இந்த ‘நானும் ரௌடிதான்’.

படம் பற்றிய அலசல்

ஒரு நல்ல இயக்குனருக்கு எந்தெந்த நடிகர்களை எப்படியெப்படி பயன்படுத்த வேண்டுமென்ற சூட்சுமம் தெரியும். இந்த வித்தையை நன்றாக கத்து வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமின்றி ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உட்பட படத்தின் சின்னச் சின்ன கேரக்டர்களைக்கூட கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய பலம்.

ஒரு சாதாரண கதையை கையிலெடுத்து, அதை இரண்டரை மணி நேரத்தில் காதல், காமெடி கலந்து சொல்லி ரசிகர்களை மெய்மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான திரைக்கதையோடு, அழகான ஒளிப்பதிவு, அசத்தலான இசை, சிறப்பான நடிப்பு என அத்தனை விஷயங்களும் ஒருசேர இப்படத்தில் கைகோர்த்திருப்பதால் எளிதாக நம்மை வசீகரித்துவிடுகிறது. லாஜிக் விஷயங்களை மறந்து, பொழுதுபோக்காக இப்படத்தை ரசித்தால் இரண்டரை மணி நேரம் ‘டைம் பாஸ்’ ஆவதே தெரியாது.

நடிகர்களின் பங்களிப்பு

சுமார் மூஞ்சி குமாரின் அப்டேட்டட் வெர்ஸன்தான் இப்படத்தின் பாண்டி கேரக்டர். அதில் வெளுத்து வாங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. கெத்தான பாடி லாங்குவேஜ், காமெடியான டயலாக் டெலிவரி என காட்சிக்கு காட்சி விஜய்சேதுபதி நடிப்பில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார். காமெடி, ரொமான்ஸ் என இரண்டு ஏரியாக்களிலும் அசத்தியிருக்கிறார் மனிதர். வெல்கம்பேக் விஜய்சேதுபதி! தனி ஒருவன், மாயா படங்களுக்குப் பிறகு நயன்தாராவுக்காகவே இப்படத்திற்கு வந்த கூட்டம் எக்கச்சக்கம். தனக்காக வந்த அத்தனை ரசிகர்களையும் 100% திருப்திப்படுத்தியிருக்கிறார் நயன். அப்பாவி காது கேளாத பெண்ணாக, பெற்றோரை இழந்த மகளாக, பழிவாங்கத் துடிக்கும் காதலியாக ‘எக்ஸ்பிரஷன் குயினா’க ஜொலித்திருக்கிறார்.

வில்லத்தனத்தோடு காமெடியையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘கிள்ளிவளவன்’ கேரக்டர் அச்சு அசலாகப் பொருந்தியிருக்கிறது பார்த்திபனுக்கு. அவரின் கேரியரில் இந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும். ஆர்.ஜே. பாலாஜி அளவாகப் பேசி, ரசிகர்களை அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார். ராதிகா, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கு சின்னச்சின்ன வேடங்கள்தான் என்றாலும் அத்தனை பேரும் மனதில் பதிகிறார்கள். குறிப்பாக இப்படத்தில் ‘ராகுல்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தாத்தா ஒருவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கலாட்டா!

பலம்

1. திரைக்கதையும், இயக்கமும்.
2. நடிகர்களின் பங்களிப்பு
3. ஒளிப்பதிவு மற்றும் இசை

பலவீனம்

ஒரு சில டபுள் மீனிங் காட்சிகள், லாஜிக் விஷயங்கள் போன்ற சின்னச் சின்ன குறைகள் தவிர்த்து பெரிய அளவில் எந்த பலவீனமும் இப்படத்தில் இல்லை.

மொத்தத்தில்...

டீஸர், டிரைலர், பாடல்கள் மூலம் ஏற்படுத்திய அதிரிபுதிரி எதிர்பார்ப்பை அட்டகாசமாகப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இரண்டரை மணி நேரத்திற்கு சிரிப்பு விருந்து படைத்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு உடனே டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். இந்த ஆயுதபூஜை விடுமுறைக்கேற்ற ‘டைம்பாஸ்’ திரைப்படம்!

ஒரு வரி பஞ்ச் : அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட்!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;