10 எண்றதுக்குள்ள - விமர்சனம்

ஆக்ஷன் மசாலா!

விமர்சனம் 21-Oct-2015 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vijay Milton
Production : Fox Star Studios, AR Murugadoss
Starring : Vikram, Samantha, Pasupathy
Music : D. Imman, Anoop Seelin (BGM)
Cinematography : Bhaskaran K.M
Editing : Sreekar Prasad

‘ஐ’ நாயகனுடன் ‘கோலி சோடா’ இயக்குனர் இணைந்திருக்கிறார். ‘10 எண்றதுக்குள்ள’ அதுக்கும் மேலயா? கீழயா?

கதைக்களம்

ஒருபுறம் டிரைவிங் ஸ்கூல் மாஸ்டராக வேலைபார்த்துக் கொண்டே, இன்னொருபுறம் பணத்துக்காக பசுபதி சொல்லும் தப்பான வேலைகளையும் செய்கிறார் நாயகன் விக்ரம். ஒருமுறை எஸ்.யு.வி கார் ஒன்றை கடத்தி வட இந்தியாவிலிருக்கும் ராகுல் தேவ் வசம் ஒப்படைக்கச் சொல்கிறார் பசுபதி. அந்த காரில் பின்சீட்டில் தன்னிடம் டிரைவிங் கத்துக்கொள்ளும் பெண்ணான சமந்தா மயக்கமாக இருப்பது தெரியாமலேயே விக்ரமும் அந்த வேலையைச் செய்ய களமிறங்குகிறார். கார் ஆந்திராவை எட்டியதும், பெட்ரோல் போடுவதற்காக இறங்கி வெளியே செல்லும் சமயத்தில் காரிலிருக்கும் சமந்தாவை சிலர் கடத்த முயல அவர்களிடமிருந்து சமந்தாவை மீட்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறார். ராகுல் தேவிடம் ஒப்படைக்கச் சொன்னது காரை அல்ல, காருக்குள் இருக்கும் சமந்தாவைத்தான் என்ற உண்மை இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான் விக்ரமுக்கு தெரிய வருகிறது.

ராகுல் தேவுக்கு சமந்தா ஏன் தேவைப்படுகிறார்? உண்மை தெரிந்த பிறகு விக்ரம் என்ன செய்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே ‘10 எண்றதுக்குள்ள’.

படம் பற்றிய அலசல்

‘பையா’ படத்திற்குப் பிறகு தமிழில் மீண்டும் ஒரு முழுநீள ரோடு டிராவல் படம்! பரபர கார் சேஸிங், அதிரடி சண்டைக் காட்சிகள் என படம் ஆரம்பித்த உடனேயே டாப் கியரில் பயணிக்கிறது. ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தடுத்து காட்சிகள் விறுவிறுவென பயணிக்கும் என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கும் முன்பே, சம்பந்தமில்லாத பாடல்கள் மூலம் திரைக்கதைக்குள் ஸ்பீடு பிரேக்கர்களைப் போடுகிறார்கள். இடைவேளை வரையும், அதற்குப் பிறகும்கூட கதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்ற குழப்பத்துடனே நகர்கிறது. கடைசி அரை மணி நேரத்தில்தான் ஒரிஜினல் கதைக்குள்ளேயே நுழைகிறார்கள்.

திரைக்கதைக்காகவே பேசப்பட்ட படம் ‘கோலி சோடா’. அதே இயக்குனர் இயக்கும் படமென்பதால் இதிலும் அதைப்போன்ற ஒரு க்ரிப்பான திரைக்கதை இருக்கும் என நினைத்து வந்தவர்களுக்கு ‘10 எண்றதுக்குள்ள’ படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே தரும். படத்தின் ஆறுதலான விஷயம் விக்ரமின் அதிரடி சண்டைக்காட்சிகளும், ஸ்டைலிஷாக அவர் பேசும் வசனங்களும்தான்! அதேபோல் டெக்னிக்கலாக இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, சண்டை இயக்கம் போன்றவை படத்திற்குப் ப்ளஸ்.

நடிகர்களின் பங்களிப்பு

எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், அந்த கேரக்டராக மாறிவிடுவதில் வல்லவர் விக்ரம். இதிலும் அப்படியே. ஒவ்வொரு முறை தன் பெயரைக் கேட்கும்போதும் ஒவ்வொரு பிரபலங்களின் பெயரைச் சொல்லும் விக்ரமின் பாடி லாங்குவேஜ் அசத்தல் ரகம். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லா ஏரியாக்களிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக தன் ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைத்திருக்கிறார் விக்ரம். அப்பாவி லூஸுப் பெண் கேரக்டர் சமந்தாவிற்கு. ஆனால் க்ளைமேக்ஸில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா. வில்லன்கள் பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யூ சிங் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். பசுபதி கொஞ்சம் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

பலம்

1. விக்ரம்
2. ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் பின்னணி இசை

பலவீனம்

1. இழுவையான திரைக்கதை அமைப்பு
2. பாடல்கள்

மொத்தத்தில்...

ஆக்ஷன் ப்ரியர்களை மனதில் வைத்து விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இப்படம் விக்ரம் ரசிகர்களை வேண்டுமானால முழுமையாக திருப்திப்படுத்தலாம்! தேவையில்லாத காட்சிகளை தூக்கிவிட்டு, திரைக்கதையை இன்னும் ‘ஷார்ப்’பாக்கியிருந்தால் அனைத்து ரசிகர்களும் ‘அதுக்கும் மேல’ என தாராளமாக சொல்லியிருப்பார்கள்.

ஒரு வரி பஞ்ச் : ஆக்ஷன் மசாலா!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;