நடிகர் சங்க தேர்தல் - பாண்டவர் அணி மாபெரும் வெற்றி!

நடிகர் சங்க தேர்தல் - பாண்டவர் அணி மாபெரும் வெற்றி!

செய்திகள் 19-Oct-2015 10:44 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருட நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டியும், பரபரப்பும் ஏற்பட்டு, தேர்தல் அனைவரது கவனத்துக்கும் சென்றது. இந்த வருட தேர்தலில் இது வரை நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், அவர்களுக்கு எதிராக உருவாகிய நடிகர் விஷால் தலைமையில் அமைந்த பாண்டவர் அணியும் போட்டியிட்டது.

இதுவரை நடந்த தேர்தல் போல் இல்லாமல் இந்த வருட தேர்தலில் நடிகர் சங்கத்தில் ஓட்டு உரிமையுள்ள 3,139 பேரில் (நாடக நடிகர்கள் உட்பட) பெரும்பாலானவர்களும் தங்களது ஓட்டுகளை தபால் மூலமும், நேரில் வந்தும் பதிவு செய்துள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு துவகிய விறுவிறுப்பான ஓட்டு பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. மாலை 5.30 மணி முதல் துவங்கிய ஓட்டு எண்ணிக்கை இரவு 11.30 வரையிலும் சென்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் 1344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமாருக்கு 1231 வாக்குகள் தான் கிடைத்தது. சரத்குமாரை விட நாசருக்கு 113 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டவர் அணியை சேர்ந்த விஷாலுக்கு 1445 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவியை விட விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்றார். ராதாரவிக்கு 1138 வாக்குகளே கிடைத்தன. பாண்டவர் அணியின் சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 1493 ஓட்டுகள் கிடைத்து பொருளாளர் பதவியை கைபற்றியுள்ளார். இந்த பதவிக்கு கார்த்தியை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1080 வாக்குகளே கிடைத்தன். இவரை விட கார்த்திக்கு 413 வாக்குகள் கிடைத்தன.

துணை தலவர்கள் பதவிக்கு சரத்குமார் அணியை சேர்ந்த நடிகர்கள் விஜயகுமார், சிம்பு ஆகியோரும், பாண்டவர் அணியை சேர்ந்த நடிகரகள் கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த பதவிக்கான போட்டிகளிலும் பாண்டவர் அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளன்ர். 1362 வாக்குகள் பெற்று கருணாஸும், 1235 வாக்குகள் பெற்று பொன்வண்ணனும் துணை தலைவர் பதவிகளை கைபற்றியுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியை சேர்ந்த விஜயகுமாருக்கு 1115 வாக்குகளும், சிம்புவுக்கு 1197 வாக்குகளுமே கிடைத்தன. இது தவிர செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியிலும் பாண்டவர் அணியை சேர்ந்தவர்களே அதிகமாக வெற்றிபெற்றுள்ளனர்.

நடிகர் சங்கத்தில் கடந்த காலங்களில் தொடர்ந்து பதவி வகித்து வந்த பலர் இந்த வருட தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர். நடிகர் சங்கத்திலும் மாற்றம் வேண்டும் என்று பெரும்பாலன உறுப்பினர்களும் நினைத்திருக்கிறார்கள் என்பது இந்த வருட தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது. நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளாக பதவியேற்க போகும் அனைவருக்கும் ‘டாப் 10 சினிமா’வின் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;