கிரிம்ஸன் பீக் - ஹாலிவுட் பட விமர்சனம்

வித்தியாசமான படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்!

விமர்சனம் 17-Oct-2015 5:36 PM IST Top 10 கருத்துக்கள்

‘த டெவில்ஸ் பேக்போன்’, ‘பான்ஸ் லேப்ரிந்த்’, ‘ஹெல்பாய்’, ‘பஸிஃபிக் ரிம்’ போன்ற படங்களை இயக்கிய கில்லர்மோ டெல் டோரோவின் (Guillermo del Toro) இயக்கத்தில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ‘கிரிம்ஸன் பீக்’ (Crimson Peak). இதை ஒரு பேய்ப்படம் என ஒற்றை ரகத்தில் அடக்கிவிட முடியாது. காதல், சென்டிமென்ட், திகில், ஃபேன்டஸி என எல்லா விஷயங்களும் கலந்த கலவை என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு படத்திலும் நடிகர்களைப் போன்றே படத்தின் ஏதாவது ஒரு விஷயத்தையும் கேரக்டராக மாற்றுவதில் இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ கைதோர்ந்தவர். இந்த ‘கிரிம்ஸன் பீக்’ படத்திலும் ஒரு பாழடைந்த மிகப்பெரிய பங்களா ஒன்றை படத்தின் முக்கிய கதாபாத்திரமாக உலவவிட்டிருக்கிறார். அந்த பங்களாவிற்குள் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இப்படத்தின் முக்கிய சாராம்சம்.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவரின் மகளான மியா வாசிகோஸ்காவுக்கு (Mia Wasikowska), தன் அம்மாவின் மரணத்திற்குப் பின்னர் ஏதோ ஒரு அமானுஷ்ய உருவம் தன்னை எப்போதும் பின்தொடர்வதைப் போன்ற உணர்வு. தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை மையமாக வைத்து பேய்க்கதை ஒன்றை எழுதி, பிரபல பப்ளிகேஷன் ஒன்றில் கொடுக்கிறார். ஆனால், அவர்கள் அதை நிராகரித்துவிட்டு, வேறு கதைகளை எழுதச் சொல்கிறார்கள். இதனால் மனம் உடைந்துபோகிறார் மியா. அந்த சூழ்நிலையில் டாம் ஹிடில்ஸ்டன் (Tom Hiddleston) மியாவின் கதைகளைப் படித்து அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார். இதனால் மியாவுக்கு டாம் மேல் காதல் மலர்கிறது. இந்த காதல் மியாவின் தந்தைக்குப் பிடிக்காததால் தன் மகளிடமிருந்து பிரிந்து செல்லும்படி டாமை நிர்பந்திக்கிறார். வேறுவழியின்றி டாம் தன் சொந்த ஊருக்கு திரும்பும் நேரத்தில், மியாவின் தந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகு தனிமையில் வாடும் மியாவை திருமணம் செய்து, தன் சொந்த ஊரிலுள்ள பாழடைந்த பங்களா ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே சென்றபிறகு அவருக்கு பலவித அமானுஷ்யங்கள் மீண்டும் நடக்கத் தொடங்குகின்றன. அதன் பின்னணி என்ன என்பதை அலசும் படமே இந்த ‘கிரிம்ஸன் பீக்’.

பரபரப்பான திரைக்கதையே, பயமுறுத்தும் ‘திடுக்’ காட்சிகளோ எதுவும் இப்படத்தில் இல்லை. இதனால் படத்தின் முதல்பாதி காதல், சென்டிமென்ட் என ரொம்பவும் மெதுவாக நகர்கிறது. பாழடைந்த பங்களா கதைக்குள் வந்தபிறகுதான் கதை கொஞ்சம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. குறிப்பாக டாமின் சகோதரி ஜெஸிகா செஸ்டைன் (Jessica Chastain) சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவரின் மர்ம பின்னணியும் ரசிகர்களுக்கு ‘திக் திக்’ உணர்வை ஏற்படுத்துகின்றன. அழகிலும், நடிப்பிலும் இருவருமே அசத்துகிறார்கள்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் படத்திற்கான கலை இயக்கமும், ஆடை வடிவமைப்பும். இந்த இரண்டு துறைகளின் தீராத உழைப்பால், ரசிகர்களை கதை நடக்கும் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது ‘கிரிம்ஸன் பீக்’. அந்த உணர்வை முழுமையாக ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதில் ஒளிப்பதிவும், இசையும் திறம்பட ¬கோர்த்திருக்கின்றன. மொத்தத்தில் டெக்னிக்கல் விஷயங்களில் இப்படம் ‘பீக்’கில் இருப்பது உண்மை. ஆனால், திரைக்கதை மெதுவாக நகர்வதுபோல் அமைக்கப்பட்டிருப்பதும், திகில் காட்சிகள் குறைவாக இருப்பதும் நம்மூர் ரசிகனை கொஞ்சம் கொட்டாவி விடவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில்.... இந்த ‘கிரிம்ஸன் பீக்’ வித்தியாசமான படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;