ருத்ரமாதேவி - விமர்சனம்

திரைக்கதையிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கலாம்!

விமர்சனம் 17-Oct-2015 12:50 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Gunasekhar
Production : Gunaa Team Works
Starring : Anushka Shetty, Allu Arjun, Rana Daggubati, Vikramjeet Virk, Prakash Raj
Music : Ilaiyaraaja
Cinematography : Ajayan Vincent
Editing : A. Sreekar Prasad

அக்கடபூமியிலிருந்து இன்னொரு வரலாற்றுப்படம் தமிழ் பேசியிருக்கிறது. அனுஷ்கா நடிப்பில் இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையைத் தாங்கி வெளிவந்திருக்கும் ‘ருத்ரமாதேவி’ எப்படியிருக்கிறது?

கதைக்களம்

காகத்திய தேசத்தின் மன்னனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தை பெண் எனத் தெரிந்தால் தன் ராஜ்ஜியத்தின் மீது எதிரி ராஜ்ஜியமான தேவகிரி கோட்டை படையெடுக்கும் என நினைத்து, பெண் குழந்தையை ஆண் குழந்தையாக வெளியுலகிற்கு நம்ப வைத்து பல்வேறு போர்ப் பயிற்சிகளையும் கொடுக்கிறார்கள். ருத்ரதேவன் என்ற பெயரோடு வளரும் அப்பெண் காகத்திய ராஜ்ஜியத்தின் இளவரசனாக நல்லாட்சி நடத்துகிறார். இந்நிலையில், ருத்ரதேவனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் அவள் ஒரு பெண் என்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சூழ்நிலையில், மன்னரே அரச சபையைக்கூட்டி தனக்குப் பிறந்தது மகனல்ல, மகள்தான் என்ற உண்மையை உலகிற்கு அறிவித்து, காகத்திய ராஜ்ஜியத்தின் ராணியாக ருத்ரமாதேவியை அரியணை அமர வைக்கப் போவதாக அறிவிக்கிறார். ஆனால் ஒரு பெண் தங்களை ஆள்வதா என மக்கள் அனைவரும் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். இதன் பிறகு நடக்கும் களேபரங்களே ருத்ரமாதேவியின் மீதிக்கதை!

படம் பற்றிய அலசல்

வீரம் என்பது ஆணுக்கு மட்டும் சொந்தமானதல்ல, ஒரு பெண்ணாலும் நாட்டை ஆள முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘ருத்ரமாதேவி’யின் கதைக்காக இயக்குனர் குணசேகரை பாராட்டலாம். ஆனால் அதனை ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் படமாக எடுப்பதற்குத் தேவையான திரைக்கதை, தொழில்நுட்ப விஷயங்களில் பெரிதாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக 3டி என்ற ஒரு விஷயமே இந்தக் கதையை படமாக உருவாக்குவதற்கு எந்த விதத்திலும் தேவையே இல்லாத பட்சத்திலும், கோடிகளை செலவு செய்து 3டியில் உருவாக்கியிருக்கிறார்கள்?

ருத்ரமாதேவியை தமிழ்ப் படம்போல விளம்பரப்படுத்தினாலும், இது ஒரு டப்பிங் படம்தான் என்பது படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது. நமக்கு மிகவும் பரிட்சயமான பிரகாஷ் ராஜின் கேரக்டருக்கு கூட, வேறொருவர் டப்பிங் பேசியிருப்பது ஏன் என்பது புரியவில்லை. போர்க்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கிராஃபிக்ஸில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இதுபோன்ற குறைகளையும் தாண்டி, ‘ருத்ரமாதேவி’யை இரண்டரை மணி நேரம் பார்க்க முடிந்ததற்கு ஒரே காரணம் அனுஷ்கா மட்டுமே! அவரை அழகுப் பதுமையாகவும், ஆக்ரோஷ ராணியாகவும் அட்டகாசமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள். இளையராஜாவாவின் இசை கொஞ்சம் ஏமாற்றமே!

நடிகர்களின் பங்களிப்பு

ருத்ர தேவனாகவும், ருத்ரமா தேவியாகவும் தன்னால் எந்தவித கதாபாத்திரங்களும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அனுஷ்கா. வாள் சண்டை, குதிரையேற்றம், யானை சவாரி என ஆக்ஷன் ஏரியாக்களில் அனல் கிளப்பியிருக்கிறார் அம்மணி! அனுஷ்காவின் காதலனாக வரும் ராணாவிற்கு காட்சிகள் குறைவுதான். பல்வாள் தேவன் அளவுக்கு இல்லையென்றாலும் சாளுக்கிய வீரபத்ரனாகவும் விறைப்பு காட்டியிருக்கிறார் ராணா. கோணகன்னா ரெட்டியாக அவ்வப்போது திரையில் தோன்றி பஞ்ச் டயலாக் பேசி, நாலைந்து பேரையாவது போட்டித்தள்ளிவிட்டு தலைமறைவாகிறார் அல்லு அர்ஜுன். மந்திரி சிவதேவ அய்யாவாக பிரகாஷ் ராஜ் நீண்ட வசனங்கள் பேசுகிறார். ஆனால் வாய்ஸ் வேறொருவர் என்பதால் நம் கண்ணுக்கு பிரகாஷ் ராஜ் தெரிய மறுக்கிறார். இவர்களைத் தவிர நித்யா மேனன், கேத்ரின் தெரசா, ஹம்சா நந்தினி ஆகியோருக்கும் குறிப்பிடத்தகுந்த வேடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பலம்

1. பெண்களைப் போற்றும்படியான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதில் அனுஷ்காவை நாயகியாக்கியிருப்பது.

பலவீனம்

1. சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதை அமைப்பும், காட்சிகளும்
2. கிராஃபிக்ஸ், 3டி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்... பிரம்மாண்டமான பட்ஜெட்டோ அல்லது தொழில்நுட்ப விஷயங்களில் புதிய சாதனைகளோ ஒரு படத்தை தூக்கி நிறுத்துவதற்கு எந்தவிதத்திலும் பயன்படாது, வரலாற்றுப் படமாக இருந்தாலும் அதில் திரைக்கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து ‘ருத்ரமாதேவி’யை உருவாக்கியிருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்கும். அனுஷ்காவின் உழைப்பிற்காக ‘ருத்ரமாதேவி’யைப் பார்க்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : திரைக்கதையிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கலாம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;