வேதாளம் - இசை விமர்சனம்

வேதாளம் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 16-Oct-2015 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பங்களில் ஒன்றான ‘வேதாளம்’ வெளியாகிவிட்டது. ‘தல’ அஜித், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகியுள்ள வேதாளம் பாடல்கள் எப்படி இருக்கின்றன?

1. வீர விநாயகா...
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், விஷால் தட்லானி
பாடலாசிரியர் : விவேகா


சரணத்தைக் கேட்கும்போது.... ‘இது ஏதோ பக்திப்பாடல் போல...’ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் போகப்போக வழக்கமான அனிருத்தின் அதிரடிப் பாடலாக மாறுகிறது இந்த ‘வீர விநாயகா...’ பாடல். ஒரு இடத்தில் வெற்றி விநாயகா, வீர விநாயகா எனவும், இன்னொரு இடத்தில் ‘நீ பூந்து கலாசு...’ எனவும் பாடல் முழுக்க இரண்டு எதிரெதிர் துருவங்களில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர் விவேகா. கொல்கத்தாவில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பாடலாக ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்றிருக்கலாம். அனிருத்தின் இசையிலும், குரலிலும் ‘வெறி’த்தனமான எனர்ஜி. காட்சிகளோடு பார்ப்பதற்கு ஏற்ற பாடல்!

2. டோன்ட் யூ மெஸ் வித் மீ...
பாடியவர்கள் : ஸ்ருதிஹாசன், ஷக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : கார்க்கி


‘தன்னைக் கண்டுகொள்ளாத நாயகன் குறித்து நாயகி பாடும்’ இந்தப் பாடல் ஸ்ருதிஹாசனின் பவர்ஃபுல் வாய்ஸில் ‘இன்டர்நேஷனல்’ ஹிப்&ஹாப் பாடல்போல் ஒலிக்கிறது. அஜித் & சிவா படத்தில் இப்படி ஒரு பாடலா என ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது ‘டோன்ட் யூ மெஸ் வித் மீ...’. பாடலுக்கான வரிகளை தமிழ், ஆங்கிலம் கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் கார்க்கி. அனிருத்தின் ‘டெக்னோ பீட்’ மியூசிக்கிற்கு அஜித், ஸ்ருதியின் வெஸ்டர்ன் ஸ்டைல் விஷுவல்கள் விருந்து படைக்கும். ‘யூத்’களின் ஃபேவரைட் பாடலாக இது நிச்சயம் இடம் பிடிக்கும்.

3. உயிர் நதி கலங்குதே...
பாடியவர் : ரவிசங்கர்
பாடலாசிரியர் : விவேகா


ஆல்பத்தின் ஒரேயொரு மெலடிப் பாடல். சென்டிமென்ட் பாடலாக உருவாகியிருக்கும் இதில் ரவிசங்கரின் குரலில் ஒரு அண்ணனுக்காக பாசப் போராட்டம் வழிந்தோடுகிறது. மெல்லிய கிடார், பின்னணியில் ஆங்காங்கே வீணையின் மீட்டல்கள், கோரஸ் குரல்கள் என மெலடிப் பாடலிலும் எனர்ஜியை ஏத்திக் கொண்டே போயிருக்கிறார் அனிருத். குறிப்பாக பாடலின் முடிவில்... ‘இது மெலடிதானா’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கோரஸின் குரல்கள் பவர்ஃபுல்லாக ஒலிக்கின்றன. ஆனால், கேட்டதும் மனதோடு தங்குகிறது இந்த ‘உயிர் நதி கலங்குதே...’. விவேகாவின் வரிகளும் நன்றாகவே இருக்கின்றன.

4. தி தெறி தீம்...
பாடியவர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சிவா


தீம் மியூசிக் என்றாலே அனிருத்தின் ஆல்பத்தில் எப்போதும் ஸ்பெஷல்தான். அஜித்திற்கும் அசத்தலான தீம் மியூக்கை கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே ‘வேதாளம்’ டீஸரில் பின்னணி இசையாக ஒலித்ததின் முழு வெர்ஷன்தான் இந்த ‘தி தெறி தீம்’. வெஸ்டர்ன் ஸ்டைலில் மாஸாக ஒலிக்கும் இந்த தீமை விஷுவல்களோடு பார்க்கும்போது நிச்ச்யம் ரசிகர்கள் தியேட்டரில் தெறிக்கவிடுவார்கள்..!

5. ஆலுமா டோலுமா...
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், பாட்ஷா
பாடலாசிரியர் : ஜி.ரோகேஷ்


ஏற்கெனவே இப்பாடலின் புரமோ டீஸர் வெளிவந்து அதிரடி ஹிட் அடித்துள்ளதால், முழுப்பாடலையும் கேட்பதற்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறது அனிருத் கூட்டணி. ஃபாஸ்ட் பீட்டில் ஒலிக்கும் இப்பாடலில் வெஸ்டர்ன் இசையையும், சென்னையின் லோக்கல் டிரம்ஸ் குத்துகளையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் அனிருத். ‘டாங்கா மாரி...’ புகழ் ஜி.ரோகேஷின் லோக்கல் கானா வரிகளுக்கு அனிருத்தின் குரல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. பெரிய பில்டப் கொடுக்கப்பட்ட பஞ்சாப் பாடகர் பாட்ஷாவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம். ‘தல’ ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் ஆல்பத்தின் ஒரே பாடல் இதுதான். எனவே, இப்பாடல் எப்போது திரையில் தோன்றும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

இதுவரை வெளிவந்த அனிருத்தின் ஆல்பங்களை இரண்டு வகையாகப் பிரித்துவிடலாம். 3, வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், கத்தி போன்றவை ஒரு வகையென்றால் மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி போன்றவை இன்னொரு ரகம். ‘வேதாளம்’ இதில் இரண்டாவது ரகம்!

மொத்தத்தில்... இந்த ‘வேதாளம்’ கதைக்கேற்ற கமர்ஷியல் ஆல்பம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;