அன்பு குறித்த படம் மெல்லிசை!

அன்பு குறித்த படம் மெல்லிசை!

செய்திகள் 14-Oct-2015 12:20 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள படம் ‘மெல்லிசை’. விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களுக்காக படத்தின் இரண்டு பாடல்களும், டிரைலரும் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் இனிமை ரகம்!

விழாவில் படத்தின் கதாநாயகன் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘அன்பு, கோபம், தாபம், ரோஷம் என பல உணர்வுகள் அடங்கியது தான் மனித வாழ்க்கை! மனித வாழ்க்கையில் அன்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு ஆண் ஒரு பெண் மீது கொண்டுள்ள அன்பு குறித்த படம் தான் ‘மெல்லிசை’. இப்படத்தில் மனிதனின் இயல்பான வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளும் அடங்கியிருக்கும். அதை வித்தியாசமான இசையோடு. மாறுபட்ட களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி’’ என்றார்.

படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, ‘‘என்னை ஒரு ரசனையுள்ள ஆளாக ஆக்கியவர் என் குருநாதரும் இயக்குனருமான ராம் அவர்கள்! நான் அவரிடம் கற்ற பாடங்கள் நிறைய! விஜய்சேதுபதி அண்ணாவை இதில் நீங்கள் ரசனையான ஒரு கேரக்டரில் பார்ப்பீர்கள். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

படத்தின் ஆடியோவை விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இயக்குனர்கள் ராம், கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணீதரன், பிரம்மா, தாமிரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். ‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தீபன் பூபதி, ரதீஷ் வேலு இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கையாண்டுள்ளார். படத்தொகுப்பை பவன் ஸ்ரீகுமார் கவனிக்க, கலையை மாயா பாண்டி கவனித்துள்ளார். பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ படத்தை தொடர்ந்து இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;