நானும் ரௌடிதான் - டீஸர் விமர்சனம்

நானும் ரௌடிதான் - டீஸர் விமர்சனம்

கட்டுரை 10-Oct-2015 12:40 PM IST Chandru கருத்துக்கள்

விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய்சேதுபதியிடம் ‘‘சூதுகவ்வும் ஸ்டைலில் எந்த நடிகையையாவது கடத்திச் செல்ல வேண்டுமென்றால் யாரைக் கடத்துவீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நயன்தாரா... அவங்கன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும். அவங்ககூட ஒரு படம் பண்ணணும்!’’ என்றார். விஜய்சேதுபதி சொல்லி முடித்த சில வாரங்களிலேயே தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியானார் நயன்தாரா. பலவித காரணங்களால் இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்று இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. டீஸரில் ரசிகர்களைக் கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?

இந்த டீஸரில் முதலில் கவர்ந்த விஷயம்... விஜய்சேதுபதியின் எனர்ஜிடிக் பெர்ஃபாமென்ஸ். மனிதர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது 100% உண்மை! ‘‘நீங்க டா....ன் ஸார்... நான் டான் ஸார்!’’ என ஆனந்தராஜிடம் கைகளாலேயே ரௌடித்தன்மையின் அளவுகுறித்துப் பேசும்போதும், ‘‘ஒரு பெரிய ரௌடிகிட்ட என்ன கூட்டிட்டிட்டுப் போறீங்களா...?’’ என நயன்தாரா விஜய்சேதுபதியிடம் கேட்க, பதிலுக்கு அவர் ‘‘சொல்லுங்க... நான் என்ன பண்ணணும்?’’ என தன்னையே பெரிய ரௌடியாக பாவித்து சொல்லும்போதும், பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி என அத்தனையிலும் அசத்தியிருக்கிறார் விஜய். கூடவே, ‘‘ஆர் யூ ப்ளைன்ட்...? உங்களுக்கு காது கேட்காதான்னு கேட்டேன்’’ என தன் வழக்கமான பிளாக் காமெடியிலும் பின்னியிருக்கிறார்.

விஜய்சேதுபதியிடமிருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ‘ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல இந்த டீஸர் உண்மையிலேயே விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு விருந்துதான். அடுத்ததாக ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா... தனி ஒருவன், மாயா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவருவதால் நயனின்மேல் எக்கச்சக்க எதிர்பார்ப்பு. அதற்கேற்றார்போல் ‘காது கேட்காத’ கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். கூடுதல் போனஸாக நயனின் சொந்தக்குரலையும் கேட்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் என டெக்னிக்கல் ஏரியாக்களிலும் பெரிதாக ஸ்கோர் செய்கிறது ‘நானும் ரௌடிதான்’.

மொத்தத்தில்... ‘பில்டிங்கும் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்’ என்பதையே உணர்த்துகிறது இந்த டீஸர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;