மசாலா படம் - விமர்சனம்

சுவை குறைந்த மசாலா!

விமர்சனம் 10-Oct-2015 11:45 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Laxman Kumar
Production : Allin Pictures
Starring : Shiva, Bobby Simha, Gaurav, Lakshmi Devy
Music : Karthik Acharya
Cinematography : Laxman Kumar
Editing : Richard Kevin

சினிமாவிற்குள் சினிமாவைப் பற்றி பேசும் இன்னொரு படமாக வெளிவந்திருக்கும் ‘மசாலா படம்’ ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்திருக்கிறது?

கதைக்களம்

படங்களை சுடச்சுட விமர்சனம் செய்யும் ஆன்லைன் விமர்சகர்கள் சிலருக்கும், பல வருடங்களாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் பட விமர்சனம் ஒன்றால் பிரச்சனை வருகிறது. ‘உங்களால் முடிந்தால் ஒரு மாசாலா படத்திற்கான கதையோடு வாருங்கள்... அதை நான் படமாக்கி ஜெயித்துக் காட்டுகிறேன்!’ என்று சவால் விடுகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால், அந்த விமர்சகர்கள் ஒரு மசாலா படம் எடுப்பதைவிட, யதார்த்த சினிமா ஒன்றை எடுக்க வேண்டும் எனப் பேசி முடிவு செய்து, அதற்காக நிஜ வாழ்க்கையில் இருக்கும் 3 நபர்களை பின்தொடர முடிவு செய்கிறார்கள். பல கனவுகள், ஆசைகளுடன் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த சிவா, ரவுடியாக இருக்கும் பாபி சிம்ஹா, பணக்காரரான கௌரவ் ஆகியோருடன் தங்களின் தோழியான லக்ஷ்மி தேவியை நெருங்கிப் பழக வைத்து அவர்களின் நடவடிக்கையை தங்கள் படத்தின் திரைக்கதையாக்க முயல்கிறார்கள் விமர்சகர்கள். அந்த தேடலின் முடிவில் என்ன நடந்தது? ஜெயித்தது யார்? என்பதே ‘மாசாலா பட’த்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

படம் எடுப்பவர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என நினைத்து உள்ளே நுழைந்தால்... ‘எதையோ சொல்ல ஆரம்பித்து, எதை எதையோ காட்டி, கடைசியில் சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறு எதையோ சொல்லி முடித்திருக்கிறார்கள்’ இந்த மசாலா படத்தில். இப்படத்தின் திரைக்கதையில் பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ படங்களின் பாதிப்பை உணர முடிகிறது.

காலம் காலமாக தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மாஸ் ஹீரோக்களின் மசாலா படங்கள் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருப்பதற்கான விளக்கத்தை க்ளைமேக்ஸில் சொல்லியிருப்பது சுவாரஸ்யம். இது தவிர படத்தின் ஆறுதலான விஷயம் என்னவென்றால் அது மிர்ச்சி சிவாவின் சின்ன சின்ன காமெடிகள் மட்டுமே. டெக்னிக்கலாக இப்படம் ஆவரேஜ் ரகம்தான். அதற்கு பட்ஜெட்டும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

‘மிர்ச்சி’ சிவா மீண்டும் தன் பழைய ஃபார்முலாவுக்குத் திரும்பியிருப்பது ஆறுதலான விஷயம். வெல்கம்பேக் சிவா! ‘ஜிகர்தண்டா’ படத்தைப்போலவே இதிலும் ரவுடி கேரக்டர் என்பதாலோ என்னவோ இப்படத்திலும் நமக்கு அசால்ட் சேதுவாகவே கண்முன் வந்துபோகிறார் பாபி சிம்ஹா! அறிமுகங்கள் கௌரவிற்கு சின்ன வேடம். சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி லட்சுமிதேவிக்கு படம் முழுவதும் 3 நாயகர்களுடனும் வரும்படியான கேரக்டர். கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இந்த 5 பேரைத்தவிர இன்னும் படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். நடிப்பில் யாரையும் குறைசொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான பங்களிப்பையே வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. கதைக்கான ஐடியா
2. நடிகர்களின் பங்களிப்பு (குறிப்பாக மிர்ச்சி சிவாவின் காமெடிகள்)

பலவீனம்

1. சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை அமைப்பு.
2. ஏற்கெனவே வெளிவந்த படங்களின் ஞாபகங்களை ஏற்படுத்தும் காட்சியமைப்புகள்

மொத்தத்தில்...

ஆங்காங்கே சிற்சில சுவாரஸ்யங்களைத் தாங்கி நிற்கும் இந்த ‘மசாலா பட’த்தில் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களில் பத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவே!

ஒரு வரி பஞ்ச் : சுவை குறைந்த மசாலா!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;