தி வாக் (THE WALK) - ஹாலிவுட் பட விமர்சனம்

அந்தரத்தில் ஒரு கம்பீர நடை!

விமர்சனம் 7-Oct-2015 1:06 PM IST Top 10 கருத்துக்கள்

‘3டி’யில் எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சொல்லிக்கொள்ளும்படியாக ‘3டி’யின் முழுமையான உணர்வைத் தந்த படங்களை (சமீபத்திய Gravity மற்றும் The Martian) விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘இதான்டா உண்மையான 3டி படம்’ என படம் பார்த்த அத்தனை ரசிகர்களையும் மனதிற்குள்ளேயே உற்சாகமாக கத்த வைத்த ஒரு படம் தற்போது ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. படத்தின் பெயர் ‘தி வாக்’.

‘Romancing the Stone’, ‘Back to the Future’- Part 1, 2 and 3, ‘Forrest Gump’, ‘Death Becomes Her’, ‘Contact’, ‘What Lies Beneath’, ‘Castaway’, ‘The Polar Express’, ‘Flight’ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் ஆஸ்தான இயக்குனராக இடம்பிடித்திருக்கும் Robert Zemeckisதான் இந்த ‘தி வாக்’ படத்தையும் இயக்கியிருக்கிறார். 230 கோடி ரூபாய் பொருட்செலவில் சோனி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் Joseph Gordon-Levitt. ரசிகர்களுக்கு விஷுவல் விருந்து படைத்திருக்கும் ‘தி வாக்’ திரைப்படத்தில் அப்படி எதைத்தான் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்?

கையில் கம்புடன் ஒற்றைக்கயிற்றில் நடக்கும் சிறுவர்களைப் பார்த்து வியந்து, காசைப்போட்டுவிட்டு ஆச்சரியத்துடன் எத்தனையோமுறை நாம் கடந்து போயிருப்போம். ஒற்றைக் கயிற்றின்மீது நடக்கும் அப்படிப்பட்ட ஒரு கலைஞனைப் பற்றிய உண்மைக்கதையை தழுவித்தான் இந்த ‘தி வாக்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கயிற்றில் நடப்பதை படமாக்கியிருப்பதில் என்ன பெரிய ஆச்சரியம் இருந்துவிடப்போகிறது என சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.

ஃபிலிப் பெடிட் (Philippe Petit) எனும் கயிறுமேல் நடக்கும் பிரெஞ்சுக் கலைஞர், 1974ல் நியூயார்க் நகரத்தின் வணிகவளாக கட்டிடமான ட்வின் டவர்களுக்கிடையே இரும்புக்கம்பியைக் கட்டி, அதில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடந்து சாதனை புரிந்தார். தரையிலிருந்து சுமார் 1350 அடி உயரத்தில், ஒரே ஒரு கம்பியின்மீது, எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இன்றி ஒன்றைக்கம்பை கையில் வைத்துக் கொண்டு அவர் நடந்ததை நியூயார்க் நகரவாசிகள் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சாகஸத்தைத்தான் தற்போது நம் கண்முன்னே மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இந்த ‘தி வாக்’ திரைப்படம்.

ஒரு நல்ல திரைப்படம், படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் படத்தின் நாயகனைப்போல் நினைக்க வைத்து, அவன் அழுதால் அழவும், சிரித்தால் சிரிக்கவும், சாகஸங்கள் புரிந்தால் புல்லரிக்கச் செய்யவும் வைக்க வேண்டும். இந்த ‘தி வாக்’ திரைப்படம் இதை 100% முழுமையாக செய்திருக்கிறது. ஒவ்வொருமுறை நாயகன் கம்பியின்மீது நடக்கும்போதும், பார்வையாளனையும் சேர்த்தே அதில் நடக்க வைக்கிறார்கள். நாயகன் திரையில் தடுமாறும்போது, ரசிகனை இருக்கையில் படபடக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு இயக்குனரைப் புகழ, அப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு காட்சிகளையாவது அவர் படமாக்கியிருக்க வேண்டும். இப்படத்தின் பல காட்சிகளில் கைதட்டல்களையும், விசில் சப்தங்களையும் அள்ளியிருக்கிறார் இயக்குனர் Robert Zemeckis. நாயகன் சிறு வயதில் கயிற்றின்மேல் பயற்சி செய்யும் காட்சியை அதில் சாம்பிளுக்குச் சொல்லலாம். இரண்டு மரங்களுக்கிடையே நான்கைந்து கயிறுகளைக் கட்டி நாயகன் பயற்சியைத் தொடங்க, அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கயிறாகக் குறைந்து, கடைசியில் ஒற்றைக் கயிற்றில் அவன் நடக்கும்போது, கால்களிலிருந்து முகத்திற்கு கேமரா திரும்ப, நாயகன் இளைஞனாகியிருப்பதை காட்டியிருப்பார்கள். நாயகனின் பலவருடப் பயிற்சியை அத்தனை சாதாரணமாக ஒரு சில நொடிகளில் காட்சிப்படுத்தி அசத்தியிருப்பார் இயக்குனர்.

படத்தின் பெயர்தான் ‘தி வாக்’. ஆனால் படம் ஹைஸ்பீடில் பயணிக்கிறது. அந்தளவிற்கு இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் கடைசி 30 நிமிடங்கள். இரண்டு டவர்களுக்கிடையே இரும்புக் கம்பியைக் கட்டுவதற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து நாயகன் போடும் திட்டமும், அதை செயலாக்கியிருக்கும் விதமும் ரசிகனை வேர்த்து விறுவிறுக்க வைத்திருக்கிறது. ட்வின் டவரின் கீழிருந்து நாயகன் கட்டிடத்தை அண்ணாந்து பார்க்க, அது வானத்தில் போய் முட்டுவதைப்போன்று ரசிகனுக்குக் காட்டியிருக்கிறார்கள். அத்தனை உயர கட்டிடத்தின் உச்சியில் நாயகன் ஃபிலிப் அங்கும் இங்கும் குதித்துக் கொண்டே கம்பி கட்டுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அத்தனை தத்ரூபமாக கிராபிக்ஸில் விளையாடியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, விஷுவல் எஃபெக்ட்ஸ், முப்பரிமாண உருவாக்கம், இசை, மிகத்துல்லியமான எடிட்டிங், நாயகனின் பாடி லாங்வேஜ் என அத்தனை விஷயங்களும் சிறப்பாய் கரம் கோர்க்க, க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகனுக்கு ‘மைல்டு ஹார்ட்அட்டாக்’ வராத குறைதான். இருக்கையிலிருந்து கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிவிடுவோமோ என ஒவ்வொரு ரசிகனையும் பதைபதைக்க வைத்திருக்கிறார்கள். ‘வயிற்றுக்கீழிருந்து தொண்டைக்கு ஒரு உருண்டை உருள்வதைப்போல்’ என்று சொல்வார்களே... அதை உணர வேண்டுமென்றால் ‘தி வாக்’ படத்தை 3டியில் பார்த்தால் போதும். ஒரு உருண்டையல்ல... பல உருண்டைகள் உருண்டோடும். அதுதான் இப்படத்தின் வெற்றி!

நாயகன் எதற்காக இப்படிப்பட்ட சாகஸத்தைச் செய்கிறான்? எப்படிச் செய்கிறான்? இதெல்லாம் எப்படி சாத்தியமானது? என்பன போன்ற கேள்விகளையெல்லாம் யோசிக்கவிடாமல், விஷுவல் விருந்து மூலம் ‘சாவு பயத்தை காட்டிட்டாங்கடா பரமா’ என ரசிகனை உணர்வுப்பூர்வமாக உச்சரிக்க வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக இப்படத்தை ஒரு நல்ல 3டி தியேட்டரில் சென்று கண்டுகளியுங்கள். கொடுக்கும் ஒவ்வொரு காசிற்கும் அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள்.

மொத்தத்தில் ‘தி வாக்’... அந்தரத்தில் ஒரு கம்பீர நடை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;