புலி - விமர்சனம்

குழந்தைகள் உலகம்!

விமர்சனம் 1-Oct-2015 5:37 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Chimbu Deven
Production : SKT Studios
Starring : Vijay, Sridevi, Sudeep, Shruti Haasan, Hansika, Nandita
Music : Devi Sri Prasad
Cinematography : Natarajan Subramaniam
Editing : A. Sreekar Prasad

கடைசி நேரத் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது விஜய்யின் ‘புலி’. சிம்புதேவனின் ஃபேன்டஸி ஸ்டைல் விஜய்க்கு எந்த அளவுக்கு கைகொடுத்திருக்கிறது?

கதைக்களம்

வேதாள கோட்டையில் ஆட்சிபுரியும் ராணி ஸ்ரீதேவியும், தளபதி சுதீப்பும் பல கிராமங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு கிராமத்தின் தலைவனாக இருக்கும் பிரபுவிடம் ஆற்றில் மிதந்து குழந்தை ஒன்று வருகிறது. அந்தக் குழந்தையே விஜய்தான்! வளர்ந்து பெரியவரானதும் விஜய்க்கும், ஸ்ருதிஹாசனுக்குமிடையே காதல் மலர்ந்து, கல்யாணமும் நடக்கிறது. இந்நிலையில் திடீரென வேதாளக் கோட்டை வீரர்கள் விஜய்யின் கிராமத்தை சேதப்படுத்திவிட்டு, ஸ்ருதிஹாசனையும் கடத்திச் செல்கிறார்கள். ஹீரோயினை கடத்திய பிறகு ஹீரோ என்ன செய்வார்... அதேதான் ‘புலி’யின் கதையும்!

படம் பற்றிய அலசல்

‘புலி’ படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் வெளிவந்தபோதே, இது ஒரு குழந்தைகளுக்கான ஃபேன்டஸி படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. முழுப்படத்தையும் பார்த்து முடித்ததும் அது உறுதியாகிவிட்டது. கதை, திரைக்கதை போன்ற வஸ்துகளுக்காக எந்த மெனக்கெடலையும் செய்யவில்லை இயக்குனர் சிம்புதேவன். கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, இசை, செட் போன்றவற்றின் பிரம்மாண்டங்களுக்காக மட்டுமே நேரம் ஒதுக்கியிருப்பார் போல. சமீபத்தில் ‘பாகுபலி’ போன்ற நேர்த்தியான கிராபிக்ஸ் செய்யப்பட்ட படத்தை பார்த்துவிட்டாதாலோ என்னவோ ‘புலி’யின் கிராபிக்ஸ்கூட சற்று உறுத்தலாகவே இருக்கிறது.

பேசும் பறவை, பிரம்மாண்ட ஆமை, ஒற்றைக்கண் அசுர மனிதன், கருஞ்சிறுத்தை, பாய்ந்து பாய்ந்து செல்லும் வேதாளம், குள்ள மனிதர்கள் என ஒவ்வொரு விஷயமும் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடவே விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக சிற்சில ‘பஞ்ச்’ வசனங்களையும் சேர்த்திருக்கிறார் சிம்புதேவன். மற்றபடி பொதுவான ரசிகனை மனதில் வைத்து எந்த ஒரு புதிய முயற்சியும் ‘புலி’யில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை!

நடிகர்களின் பங்களிப்பு

வழக்கம்போல் டான்ஸ், ஃபைட் என தன்னுடைய ஏரியாக்களில் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய். அவரின் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு போன்றவற்றை குழந்தைகள் பெரிதாக ரசிப்பார்கள். புலிவேந்தனாக வரும் விஜய்யின் கெட்அப்பும், நடிப்பும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து! படத்தின் முதல்பாதியை ஸ்ருதிஹாசனும், இரண்டாம்பாதியை ஹன்சிகாவும் குத்தகைக்கு எடுத்து, ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்திருக்கிறார்கள். ‘ஜிங்கிலியா...’ பாடலில் ஸ்ருதியின் ஆட்டம் கூடுதல் போனஸ்! யவன ராணியாக ஸ்ரீதேவி வித்தியாசமான வேடமேற்றிருக்கிறார். வில்லன் சுதீப்பின் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம். ஆனால் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் ‘நான் ஈ’ வில்லன். இவர்களைத் தவிர பிரபு, நரேன், வித்யூலேகா, இமான் அண்ணாச்சி, ரோபோ ஷங்கர் உட்பட இன்னும் ஏராளமான பிரபலங்கள் படத்திலிருக்கிறார்கள்.

பலம்

1. பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்திருப்பது
2. குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஃபேன்டஸி காட்சிகள்

பலவீனம்

1. திரைக்கதை
2. அமெச்சூர்த்தனமான சில காட்சிகள்

மொத்தத்தில்...

‘பாகுபலி’ படம் தந்த ஆச்சரியங்களிலிருந்து ரசிகர்கள் இன்னும் வெளிவராத நிலையில், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் மையப்படுத்தி ‘புலி’ வெளிவந்திருப்பது சற்று பின்னடைவுதான். ஆகவே ரசிகர்களே... ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டங்களை எதிர்பார்க்காமல், ‘இது ஒரு விஜய் படம்’, ‘இயக்குனர் சிம்புதேவனின் ஃபேன்டஸி படம்’ என்பதை மனதில் நினைத்துக்கொண்டு, ஒரு குழந்தை மனநிலையில் சென்றால் மட்டுமே உங்களால் ‘புலி’யை ரசிக்க முடியும்.

ஒரு வரி பஞ்ச் : குழந்தைகள் உலகம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;